நிறுவனம் உருவான வரலாறு

உலக வரலாற்றில் ஒரு மனிதரை அடையாளப்படுத்துவது, அவரது அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பும், விடாமுயற்சியும் சாதித்த சரித்திர சாதனையே ஆகும்.
நிறுவனம் உருவான வரலாறு

உலக வரலாற்றில் ஒரு மனிதரை அடையாளப்படுத்துவது, அவரது அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பும், விடாமுயற்சியும் சாதித்த சரித்திர சாதனையே ஆகும். அவ்வகையில் விஜிபி நிறுவனம் சந்தித்த சவால்களை எதிர்கொண்டு, தடை கற்களைப் படிக்கட்டுகளாக மாற்றிய பெருமை விஜிபி சகோதரர்களையே சேரும்!

விஜிபி உருவான வரலாறு பற்றி விவரிக்கிறார் வி.ஜி.சந்தோஷம்:

விஜிபி என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய நாங்கள், மற்றவர்களைப் போல் வசதிப்படைத்தவர்களாகவோ, அல்லது முன்னோர் விட்டு சென்ற செல்வதைப் பயன்படுத்தியவர்களோ அல்லாமல், வெறும் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேற்றம் கண்டோம் .

நாங்கள் நடந்து வந்ததது கல்லும்,முள்ளும் நிறைந்த பாதைதான். இருப்பினும் காலில் பட்ட முள்ளைத் துடைத்தெறிந்து விட்டு, தொழில் முன்னேற்றம் காண முன்னோக்கிச் சென்ற போது, சிந்திய வியர்வைத் துளிகளும், அடிமேல் அடிவைத்து கவனமுடன் தடம் பதித்தவைகளுமே எங்கள் விஜிபி நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னணியாக அமைந்தது என்பது வரலாற்று உண்மை .

நாங்கள் பிறந்த ஊர், நெல்லை, வள்ளியூர் அருகில் அழகப்பபுரம் என்ற கிராமம். சிறந்த முறையில் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம். காலத்தின் மாற்றத்தால் எதிர்பாராத வறுமையை எதிர்கொண்டது. எங்கள் தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பித்த இந்திய தேசியப்படையில் சேர்ந்துவிட்டார்.

அண்ணாச்சி, அம்மா, நான் மற்றும் தங்கை சென்னையை நோக்கி வந்தோம். சிறிய அளவில் சென்னை சைதாப்பேட்டையில் தேநீர் கடை நடத்தினோம். அந்த தேநீர் கடையில் நான் தான் டீ மாஸ்டர். அண்ணாச்சி வி.ஜி.பன்னீர்தாஸ் எல்லா வேலைகளையும் கவனிப்பார். அம்மா சந்தனம்மாள், அக்காள் மாரியம்மா, அண்ணி பாரிஜாதம், தேநீர் கடைக்கு வேண்டிய இட்லி, வடை மற்றும் போன்றவற்றைத் தயாரிப்பார்கள்.

நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, "தினத்தந்தி ‘ நாளிதழ் அலுவலகம் சென்று செய்தித்தாள்களைப் பெற்றுக்கொண்டு, அன்று முதலமைச்சராக இருந்த காமராஜர், எம்.கே.டி. தியாகராஜ பாகவதர், டி .ஆர். ராஜகுமாரி மற்றும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், மதுரம் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் வீட்டிற்கு நாளிதழை போட்டு விட்டு வருவேன். நாங்கள் நடத்தி வந்த தேநீர் கடையை அச்சாரமாக வைத்து, மக்களின் தேவைக்கு ஏற்றதொரு திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டோம். அந்தத் திட்டம்தான் "தவணை முறை திட்டம்'.

கிராம மக்களிடத்தில் பணம் இருக்காது. ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் சேகரித்து வைத்த, பொருள்கள் இருக்கும். அதாவது, நெல்,கம்பு,கேழ்வரகு, காராமணி, பச்சைபயிறு போன்ற தானிய வகைகளை வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு தானியத்தைக் கொண்டு அதற்குப் பதிலாக அந்தப் பொருளின் விலைக்கு ஏற்ற பொருளை, அதாவது அரிசி அல்லது சமையலுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்வார்கள். இந்தப் பண்டமாற்றுமுறை தான், இந்த அனுபவ பொறி எங்கள் சிந்தனையில் உதித்தது. அதாவது, செலுத்தும் தொகைக்குப் பொருள்.

இவ்வாறு மக்கள் மாதம்,மாதம் செலுத்தும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பொருள் கொடுப்பது. இந்த திட்டம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. ஆதரவும் பெருகியது. விஜிபியும் வளர்ந்தது. அதனால் எங்கள் தொழிலை விரிவு படுத்த, வீட்டு மனைகள் திட்டம் கொண்டு வந்தோம். மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. நிறுவனத்தின் புகழ் ஓங்கி நின்றது.

மர்பி ரேடியோ, டிரான்சிஸ்டர் எங்களால் பிரபலம் அடைந்தது. ரேடியோ இல்லாத வீடே இல்லை என்ற நிலையை உருவாக்கினோம். அதே போல் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் என வீட்டு உபயோகப் பொருள்கள் பலவற்றையும் இதே தவணை முறையில் விற்றோம். மக்களும் வளர்ந்தார்கள். நாங்களும் வளர்ந்தோம்.

இன்று பலரும் தவணை முறையில் பொருள்களை வழங்குகிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் போட்டது விஜிபிதான்.

விஜிபி கோல்டன் பீச் என்ற பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட "தீம்பார்க்'கை கிழக்கு கடற்கரைச் சாலையில் உருவாக்கினோம். இன்று பலரும் இதே முறையில் ஈடுபடுகிறார்கள்.

எங்களது சமீபத்திய "சுரங்கபாதை மீன்காட்சியகம்' வெளிநாட்டுக்கு இணையானது.

விஜிபி நிறுவனத்தை பன்னீர்தாஸ் அண்ணாச்சி என்ற ஆலமரத்தின் கீழ், நானும் எனது அருமை மகன்கள் விஜிபி ரவிதாஸ், விஜிபி ராஜாதாஸ், விஜிபி பாபு தாஸ், மற்றும் பேரப் பிள்ளைகள் இணைந்து நான்காவது தலைமுறைகளும் சேர்ந்து சிறந்த முறையில் எங்கள் விஜிபி நிறுவனத்தைச் சிறந்த தொழில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com