கண்ணொளி நாயகன்!

ஆறு ஆண்டுகளில் 251 பேரிடம் கண்கள் தானம் பெற்று மருத்துவமனைகளுக்கு அளித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பார்வையை பெற்று தர உதவியிருக்கிறார் ஓர்  இளைஞர். 
கண்ணொளி நாயகன்!

ஆறு ஆண்டுகளில் 251 பேரிடம் கண்கள் தானம் பெற்று மருத்துவமனைகளுக்கு அளித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பார்வையை பெற்று தர உதவியிருக்கிறார் ஓர்  இளைஞர். 

சிவனுக்கே தனது கண்களைத் தானமாக அளித்து கண் பார்வையை ஒளிர செய்தவர் கண்ணப்பர் என்பது காளஹஸ்தி கோயிலின் தல வரலாறு. ஆனால் வேலூர் மாவட்டம்-  குடியாத்தம் கோல்டன் கேலக்ஜி ரோட்டரி சங்கத்தின் சாசன தலைவரும் ரோட்டரி சங்கம் ஆர்.ஐ.3231-இன் கண் தானப் பிரிவின் மாவட்டத் தலைவருமான கோபிநாத் என்பவரும் நவீன கண்ணப்பராக இருந்து கண்ணொளி நாயகராக இருந்து வருகிறார்.

வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் வேலூர், காஞ்சிபுரம், சென்னை கிளைகளுக்கு அளித்துள்ளார்.

இதுதவிர, இறந்தவர்கள் 68-க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை தானமாகப் பெற்று  வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆந்திர மாநிலம் குப்பம் பிஇஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை,  ஒசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவற்றுக்கு அனுப்பியுள்ளார். மேலும், மூளைச்சாவு அடைந்த 3 பேரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

கண்தானம் வாயிலாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பார்வை கிடைத்துள்ளன. உடல் தானத்தால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உடல் கூறு குறித்த விவரங்களை அறியவும் வழிகாட்டியுள்ளார். உடல் உறுப்புகள் தானம் வாயிலாக, கல்லீரல், கணையம், இருதயம், மண்ணீரல் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை தானமாகப் பெற்ற பலர் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். 

இதுதவிர, கல்லப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமைதோறும் ஸ்கேன் செய்ய வருகை தரும் கர்ப்பிணிகளுக்கு சத்தான மதிய உணவும், சுகப்பிரசவம் பெற  பயிற்சியும் அளித்துவருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர்.

இதுமட்டுமின்றி, ஆதரவற்றோரின் சடலங்களை காவல் துறை, வருவாய்த் துறையினரின் அனுமதி பெற்று அடக்கம் செய்யும் சேவையிலும் கோபிநாத் ஈடுபட்டுவருகிறார். இதுவரையில் 20-க்கும் மேற்பட்டோரின் சடலங்களை முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து குடியாத்தம், வேலூர் மயானங்களில் அடக்கம், தகனம் செய்து சேவை புரிந்துள்ளார்.

இதுபோன்ற சேவைக்கு எம்.கோபிநாத் பல விருதுகளை பெற்றுள்ளார்.

இது எப்படி சாத்தியமாகியது என்று எம்.கோபிநாத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது-

கண் பார்வையில்லாமல் லட்சக்கணக்கானோர் இருந்து வருகின்றனர். இறந்த சில மணி நேரத்தில் கண்களை தானமாக பெற்றுவிட்டால், ஒரு ஜோடி கண்களால் இருவருக்கு கண் பார்வை கிடைக்கும் . ஆனால் ஒருவர் இறந்த 6 மணி நேரத்தில் எடுக்கப் பெறாவிட்டால் அந்த கண்கள் வீணாகும். 11 ஆண்டுகளுக்கு முன்னர். ரோட்டரி சங்கத்தில் சேர்ந்தவுடன் இந்த ஆர்வம் அதிகரித்தது. கண்தானம் பெறும் பணியில் தீவிரமாக இறங்கினேன்.

24 மணி நேரமும் எனது செல்போனை ஆன் செய்து வைத்திருப்பேன். நள்ளிரவு, அதிகாலையில் போன் வரும். ரோட்டரி நண்பர்கள் பொதுமக்கள்  போன் செய்வார்கள். இறப்பு செய்தியை அறிந்த உடனே அங்கு சென்று துக்கத்துடன் இருக்கும் உறவினர்களிடம் பேசி  கண்தானம் குறித்து எடுத்துரைப்பேன். அவர்கள் சம்மதம் பெற்று,  உடனுக்குடன் கண் மருத்துவமனைக்கு பேசி மருத்துவர்களை வரவழைப்பேன். 

இலங்கை நாட்டில்இறந்தவர்கள் கண் தானம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கண் பார்வை இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை உள்ளது. கண் வங்கிகளில் கண்கள் எப்போதும் இலங்கை நாட்டில் இருக்கும். அதுபோன்ற நிலை இந்தியாவிலும் வர வேண்டும்.

மருத்துவச் சேவையை மேற்கொள்வதில் மனதில் ஆத்ம திருப்தி உள்ளது . 

வாழும் வரை ரத்த தானம், வாழ்க்கைக்குப் பின்னர் கண்தானம்- உடல்தானம், மூளைச்சாவு அடைந்தால் உடல் உறுப்புகள் தானம் என்பது இன்றைய புதுமொழி. அனைவரும் இதுகுறித்து விழிப்படைய வேண்டும். பார்வையற்றோர் இல்லா இந்தியா படைக்க வேண்டும் என்பது எனது லட்சியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com