முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
நிறுவனம் உருவான வரலாறு
By -பாவை | Published On : 04th April 2021 06:00 AM | Last Updated : 04th April 2021 06:00 AM | அ+அ அ- |

இந்தத் தொடர் பிரபல நிறுவனங்களின் பெயர் வந்தவிதம் பற்றி விளக்கும். இந்த வாரம் "நல்லி சின்னசாமி செட்டி' குறித்து அதன் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் விளக்குகிறார்:
""விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த கிருஷ்ண தேவராயர், தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டு வந்த போது, தங்கள் பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள் பலரையும் அந்தந்த பகுதியில் கலைகளை வளர்ப்பதற்காக குடும்பம், குடும்பமாக அழைத்து வந்து குடியமர்த்தினார். அப்படி வளர்ந்த கலைகளில் "பாகவத மேளா' "ஹரிகதாகாலட்சேபம்', பட்டு நெசவு மற்றும் சங்கீதம் குறிப்பிடத்தக்கவை.
நெசவுத்தொழிலில் தெலுங்கு பேசும் நெசவாளர்கள் நாகர்கோவில் வரை குடியேறினார்கள். எங்களது மூதாதையர்களோ காஞ்சிபுரத்தில் குடியமர்ந்தனர். பொதுவாக ஆந்திராவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குடும்பப் பெயர் உண்டு. எங்களுக்கு அமைந்த பெயர் நல்லி. நாங்கள் வியாபாரம் தொடங்கிய பிறகு எங்களது நிறுவனத்தின் பெயரே நல்லி ஆகிவிட்டது.
எப்போதிருந்தோ "நல்லி என்றால் பட்டு; பட்டு என்றால் நல்லி' என்று பெயர் நிலைத்துவிட்டது. இதில் எனக்கு நியாயமான பெருமிதம் உண்டு என்றாலும், இதில் எனது தாத்தா சின்னசாமி செட்டிக்கும் பெரும்பங்குண்டு. என் தாத்தா சின்னசாமி செட்டியார் பற்றிய ஒரு தகவலைக் கூற விரும்புகிறேன். இங்கிலாந்து மன்னர் (அப்போது அவர் நமக்கும் மன்னர் தான்) 1911-இல் சென்னை வந்தார். அவருக்கு நினைவுப் பரிசாக "பட்டுப்பீதாம்பரம்' கொடுக்க முடிவு செய்தனர். அதை நெய்து கொடுக்கும் பொறுப்பு எங்களது தாத்தாவுக்கு தரப்பட்டது. அப்போதும் சரி- அதற்கு முன்பும் சரி தற்போதும் சரி, தரமான சரக்குகளுக்கு சரியான இடம்" நல்லி' என்ற பெயர் வந்துவிட்டது.
என் தாத்தாவைப் போன்றே வாடிக்கையாளர் உறவைப் பேணுவதில் எனது தந்தை நாராயணசாமி செட்டியாரும் சிறந்து விளங்கினார். வாடிக்கையாளர்களுக்கு பட்டுப்புடவைகளை விற்பதுடன் நின்றுவிடாமல், அவர்களது வீட்டு விசேஷங்களிலும் கூட நின்று உதவிகளைச் செய்வதிலும் சமர்த்தராயிருந்தார். நல்லி நிறுவனம் நிலைத்து நிற்பதற்கு இவர்கள் இருவரும் உழைத்த உழைப்பு மறக்க முடியாதது.
என் தந்தைக்குப் பிறகு நான் நிறுவனத்தில் நுழைந்தது 1956-ஆம் ஆண்டு. அப்போது பனகல் பார்க் எதிரில் எங்களது நல்லி என்று இருந்த நிலையை கர்நாடக இசை மேதையும், திரைப்பட இயக்குநருமான வீணை எஸ்.பாலசந்தர் ஒரு பொதுவிழாவில் பனகல் பார்க் என்பது நல்லிக்கு எதிரே உள்ளது- என்று சொன்னது மிகவும் பிரபலமானது.
ஒரு முறை நானும் எனது சித்தாப்பாவும் காஞ்சி மகா பெரியவரை பார்ப்பதற்காக அவர் முகாமிட்டிருந்த "மோரணம்' என்ற கிராமத்திற்கு சென்றோம். எங்களை அறிமுகம் செய்து கொண்டதும் "இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் நல்லி என்று ஒரு கிராமம் இருக்கிறது. பார்த்துவிட்டு போங்கள்' என்றார்.
அங்கே சென்றோம். சுமார் 20 குடும்பங்கள் கொண்ட ஒரு அக்ரஹாரம் இருந்தது. எங்கள் முன்னோர்கள் ஒரு வேளை இங்கே வசித்ததால், எங்களது குடும்பத்துக்கு நல்லி என்று பெயர் வந்திருக்கலாமோ என்பது எனது யூகமாயிருக்கிறது.
எங்களது நல்லி நிறுவனத்திற்கு இந்தியாவின் முதல் ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத், பிரதமர் மன்மோகன்சிங், தற்போதுள்ள துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிற நாடுகளின் தூதர்கள், ஈரான் மன்னர் ஷா, கிரேக்க நாட்டு இளவரசி உள்ளிட்ட பல பிரமுகர்கள் வந்து பட்டுப்புடவைகள் வாங்கியிருக்கிறார்கள். பாபு ராஜேந்திர பிரசாத் வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்தவில்லை. அப்படியே "பிரேம்' போட்டு வைத்திருக்கிறோம்.
ஒரு முறை நீதிபதி கைலாசமும், அவருடைய துணைவியார் செளந்தரா கைலாசமும், இந்திரா காந்தியைச் சந்திக்க சென்ற போது பட்டுப்புடவை பரிசளித்தார்கள். அப்போது இந்திரா அம்மையார் "இது நல்லியில் வாங்கியதா?' என்று கேட்டாராம். இதுவெல்லாம் நாங்கள் பெற்ற பேறு-குடுப்பினை!
இன்று நல்லி 100-ஆவது ஆண்டை நோக்கி செல்கிறது. மூன்றாம் தலைமுறையாக நானும், என்னை அடுத்து எனது மகன் நல்லி ராமநாதன் மற்றும் அவரது மகளும் எனது பேத்தியுமான லாவண்யா- என ஐந்தாவது தலைமுறையாக "நல்லி' சிறக்க உழைக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை வாடிக்கையாளர்களின் தொடரும் ஆதரவு தான்.