நிறுவனம் உருவான வரலாறு

செட்டிநாட்டு தனவந்தர்கள் வட்டிக்குப் பணம் கொடுத்தல் தொழிலை "பாங்க்' எனும் பெயரில் செய்து வந்தனர்.
நிறுவனம் உருவான வரலாறு


செட்டிநாட்டு தனவந்தர்கள் வட்டிக்குப் பணம் கொடுத்தல் தொழிலை "பாங்க்' எனும் பெயரில் செய்து வந்தனர். அவர்கள் தமிழகம் மட்டுமின்றி பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் குடியேறி நிலங்கள், தோட்டங்கள் பெற்றதுடன் "பாங்க்' என்கிற தொழிலையும் சேர்ந்தே செய்து வந்தனர்.  அந்தக் காலத்தில் "உண்டி' என்று அழைக்கப்படும் முறையில் பணப்பரிமாற்றம் நடைபெற்றது. "உண்டி' மூலம் அனுப்பப்படும் பணம், உரிய இடத்திற்கு போய்ச் சேரும் வரை, இந்த உண்டி மூலம் சம்பாதிக்கப்படும் பணம் சேவைக் கட்டணமாக கருதப்பட்டது. 

இது தவிர அந்நியச் செலவாணி செய்ய விரும்புகிறவர்கள், வெளிநாட்டு வங்கிகளையே நம்ப வேண்டும். இக்கால கட்டத்தில் தமிழகத்தில் தஞ்சாவூர் பர்மனெண்ட் வங்கி (1901) திருநெல்வேலி சவுத் இந்தியன் வங்கி (1903) கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி (1904) மெட்ராஸ் சென்ட்ரல் கோ-ஆப்ரேட்டிவ் வங்கி (1905) ஆகிய வங்கிகள் தொடங்கப்பட்டன.

இதே நேரத்தில் எஸ். கிருஷ்ணசாமி ஐயர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வங்கி ஒன்றை உருவாக்கி, அதற்கு" இந்தியன் பேங்க் லிமிடெட்' - என்று பெயர் சூட்டினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட வங்கிகளுக்கு  நாட்டுக்கோட்டை நகரத்தார் தாராளமாக நிதி உதவிகளைச் செய்தனர். இதனால் அந்த வங்கிகள் செழித்து வளர்த்தன.

இந்தியன் வங்கியில் அன்றைய சென்னை பிரபலங்களில் சிலர் இயக்குநர்களாக இருந்தனர். அவர்களில் எம்.சி.டி முத்தையா செட்டியாரும் ஒருவர். இவர் 1930-இல் இறந்துவிட, இவரது மகன் எம்.சி.டி.எம். சிதம்பரம் செட்டியார் இயக்குநர் பொறுப்பை 14 ஆண்டுகள் வகித்தார். அந்த 14 ஆண்டுகளிலும் வங்கி சிறக்க பல வகையிலும் பாடுபட்டார். 

நிர்வாகத்துடன் எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்தியன் வங்கியிலிருந்து எம்.சி.டி.எம் சிதம்பரம் செட்டியார் விலகினார். அவரது கனவு வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழர்களின் வங்கி பரிவர்த்தனைக்கு, வெளிநாட்டு வங்கியை நம்பாமல் தனித்தொரு வங்கியை உருவாக்க  வேண்டும் என்பதே.  1929-ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால், அந்த வங்கியின் தொடக்கம் தள்ளிப்போனது.

இருந்தாலும், வைஷ்யா வங்கி, விஜயா வங்கி,  ஃபெடரல் வங்கி போன்றவை தென்னிந்தியாவில் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வந்தன. 1930 நவம்பர் 20-ஆம் நாள் ஒரு வங்கியைத் தொடங்கினார் எம்.சி.டி.எம்.சிதம்பரம் செட்டியார். அந்த வங்கிக்கு "இந்தியன் ஓவர்சீஸ் வங்கி' எனப் பெயரிட்டார். வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு ஆதரவான கொள்கைகளை முன்னெடுத்து செல்ல,  இவரின் தந்தை பர்மாவில் தொடங்கிய எம்.சி.டி வங்கியின் அனுபவங்கள் உதவி புரிந்தன. 

இவ்வங்கியின் ஆரம்ப முதலீடு ரூ,25 லட்சம். "செட்டியார்கள் வங்கி' என கருதப்பட்ட போதிலும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு அப்போது மிகப்பெரிய வங்கியாக இருந்த இம்பீரியல் வங்கியை விட சிறப்பான அளவில் உதவி புரிந்தது ஐ.ஓ.பி . அது மட்டுமின்றி இந்தியத் தொழில் துறைக்கும் அனுசரணையாக ஐ.ஓ.பி செயல்பட்டது.

இதன் நிறுவனர் குழுவில் அழகப்பச் செட்டியார், நாகப்ப செட்டியார், கன்னிலால் மேத்தா, "ஹிந்து' கே.சீனிவாசன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இதன் ஆரம்ப அலுவலகம் 11 செகண்ட் லைன் பீச்   லேன் சென்னையில் இருந்து செயல்பட்டது. பின்னர் சென்னை எஸ்பிளனேடில் இருந்த யுனைடெட் இந்தியா கட்டடத்துக்கு மாறியது.

வங்கியின் செயல்பாடுகள் 1937-இல் காரைக்குடி, சென்னை, ரங்கூன்,  நகரங்களில் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன. அடுத்த பத்து ஆண்டுகளில் சென்னை மற்றும் தென்னிந்தியா தவிர பம்பாய், கல்கத்தா,  தவிர சிங்கப்பூர், கொழும்பு, பினாங்கு, ஈப்போ, மலாக்கா, ஹாங்காங், பாங்காக் ஆகிய நகரங்களில் ஐ.ஓ.பிக்கு கிளைகள் அமைந்தன.

இதன் முதல் பொது மேலாளர் எஸ்.டி சதாசிவம். இவர் சென்ட்ரல் வங்கியில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். 1945-இல் வாடிக்கையாளரைச் கவர மருத்துவ சோதனைகளின்றி ஆயுள் காப்பீட்டுத் திட்டமும்,  சேமிப்புத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு  மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது.

"வங்கி என்பது மக்கள் தாங்கள் பணத்தை சேமிக்கவும், கடன் பெறவும், வாழ்க்கை மற்றும் சொத்துக்களை காப்பீடு செய்யவும், குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்யவும், வழிவகைகள் செய்யவும் உதவ வேண்டும்' என்பது எம்.சி.டி.எம் சிதம்பரம் செட்டியாரின் தாரக மந்திரமாக இருந்தது.

இவ்வாறு அரும்பணியாற்றிய எம்.சி.டி.எம் சிதம்பரம் செட்டியார். யுனைடெட் இந்தியா லைப் அஷ்யூரன்ஸ்,யுனைடெட் இந்தியா ஃபயர் அண்ட் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ், திருவாங்கூர் ரேயான்ஸ் போன்ற நிறுவனங்களின் நிறுவனரும் ஆவார். அவர் 1954 பிப்ரவரி 16-இல்  மறைந்த  15-ஆவது ஆண்டில், 1969-இல் இந்தியாவிலுள்ள வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதில் கடைசியாக அறிவிக்கப்பட்ட வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிதான்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று 3217 உள்நாட்டுக் கிளைகளை கொண்டு முதன்மை வங்கியாகத் திகழ்வதுடன் சிங்கப்பூர், ஹாங்காங், கொழும்பு, பாங்காக் நகரங்களில் வெளிநாட்டு கிளைகளையும் கொண்டிக்கிறது. இதன் தற்போதைய மேலாண் இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பார்த்தா பிரதிம் சென்குப்தா பணியாற்றி வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com