காவலாளியின் தமிழ் ஆர்வம்!

சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றிய நபர்  கணினி தொழில் நுட்பத்தை பயின்று தற்போது சாப்ட்வேர் வல்லுநராக வலம் வருகிறார்.
காவலாளியின் தமிழ் ஆர்வம்!


சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றிய நபர்  கணினி தொழில் நுட்பத்தை பயின்று தற்போது சாப்ட்வேர் வல்லுநராக வலம் வருகிறார்.

காவலாளியாக இருந்த  அப்துல் கற்று தேர்ந்தது எப்படி ? அவரே சொல்கிறார்:

""எனக்கு சொந்த ஊர் அசாம் குவஹாத்தி அருகில் உள்ள கிராமம்.  அங்குள்ள பள்ளியில் படித்தேன். தொடர்ந்து  கல்லூரியில் படிக்க வசதியில்லை. வேலைத் தேடி சென்னை வரலாம் எனத் தோன்றியது. எங்களுடைய ஊரில் இருந்து பலர் சென்னையில் காவலாளியாக இருக்கிறார்கள். "மஹிந்திரா வோர்ல்ட் சிட்டி' உள்ளிட்ட பல இடங்களில்  வேலை செய்கிறார்கள். 

அவர்களிடம் உதவி கேட்டால் கட்டாயம் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கையில் இருந்த ஆயிரம் ரூபாயில் 800 ரூபாய்க்கு சென்னைக்கு டிக்கெட் எடுத்தேன். மூன்று நாள் பயணம். ஒரு மாதம் சென்னையில் நண்பர்களுடன் தங்கி இருந்தேன்.  வேலை கிடைக்கவில்லை.  நான் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன் என்பதால், எனக்கு எதுவும் கிடைக்காது என நினைத்திருந்தேன். தொடர் முயற்சியால் போரூரில் உள்ள ஜோஹோ அலுவலகத்தில் காவலாளி வேலை கிடைத்தது. அலுவலகத்துக்கு வரும் பணியாளர்களை ஸ்கேன் செய்து அனுப்பும் பணி. 

பணி நேரம் தொடங்கும்போது வேலை இருக்கும். அதேபோல முடியும்போது வேலை இருக்கும். இடைப்பட்ட நேரத்தில் கம்ப்யூட்டரில் ஏதாவது படித்துக்கொண்டிருப்பேன். அதை பார்த்த அங்குள்ள அலுவலர் ஷிபு அலெக்ஸ் என்னிடம் பேச்சு கொடுத்தார். மேற்கொண்டு எப்படி படிப்பது வேலைக்கு என்ன தேவை என்பதை சொல்லிக்கொடுத்தார். 

சொந்தமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதால் ஒரு "ஆப்' செய்தேன். இதற்கு  எட்டு மாத காலம் ஆகியது. இதனை அடிப்படையாக வைத்து ஜோஹோவில் நேர்காணலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நேர்காணலில் அவர்கள் ஒ.கே. என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும் வேலைக்கு வர வேண்டும் என்றால் இது போதாது. 

கூடுதலாக கற்றுக்கொண்டால் மட்டுமே வேலை என்று சொன்னார்கள். அதனால் காவலாளி  வேலையை விட்டுவிட்டு, படிக்கத் தொடங்கினேன். 24 மாதங்கள் படித்தேன். அப்போது வேலைக்கு என்ன தேவை என்பதை முழுமையாக சொல்லிக்கொடுத்தார்கள். அந்த கோர்ஸ் முடிந்தவுடன் ஜோஹோ நிறுவனத்தில் வேலை கிடைத்தது.  இங்கு வருவதற்கு முன்னர் அஸ்ஸாமி, பெங்காலி மற்றும் ஹிந்தி மட்டுமே தெரியும். சென்னைக்கு வந்த பிறகுதான் தமிழ் பேச கற்றுக்கொண்டேன்.  தமிழ் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.''  என உற்சாகத்துடன் சொல்கிறார்  அப்துல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com