சிட்டுக்குருவிகளை நேசிக்கும் பேராசிரியர்!

சென்னையைச் சேர்ந்தவர் கணேசன், காணாமல் போகும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 
சிட்டுக்குருவிகளை நேசிக்கும் பேராசிரியர்!

சென்னையைச் சேர்ந்தவர் கணேசன், காணாமல் போகும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

யார் இந்த கணேசன்?

தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் "கூடுகள்' என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதுவரை சென்னையில் சுமார் இரண்டாயிரம் கூடுகளை பள்ளிகளில், வீடுகளில் வைத்திருக்கிறார். இன்னும் பத்தாயிரம் கூடுகள் சென்னை நகரில் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இனி கணேசன் பேசுகிறார்:

""அலைபேசி கோபுரங்களில் கூட சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்கின்றன. நகர்ப்புறங்களில் கூடு கட்ட தேவையான மரங்கள் இல்லாது போனதும், கூடு கட்ட வசதியாக இருந்த குடிசைகள் ஓட்டுவீடுகள் மறைந்து கான்கிரீட் வீடுகள் வந்ததும், பெரிய கட்டடங்களில் சுற்றிலும் கண்ணாடிகள் பொருத்தி சூரிய ஒளியை எதிரொளிக்கச் செய்ததும்தான் பறவைகள் காணாமல் போனதற்கான காரணங்கள்.

சிட்டுக்குருவிகள் கூடு கட்ட இடம் கிடைக்காத போது, எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு இடம் பெயர்கின்றன. கட்டடங்களின் ஒளியை வடி கட்டும் கண்ணாடி சுவர்களால் சூரிய ஒளி திருப்பி அனுப்பப்படுவதால், அந்த ஒளி வானில் பறக்கும் பறவைகளின் கண்களை உறுத்த... "பளிச்' ஒளியைத் தவிர்க்க இடம் மாறி பறவைகள் திசை மாறிப் பறக்கின்றன. தவிர வாகனங்கள் கக்கும் புகையில் உள்ள மாசுக்களும் பார்வைகளைப் பாதிக்கின்றன. இந்த காரணிகளால் பொதுவாக பறவைகள் நகர்ப்புறங்களில் குறைந்துவிட்டன. சிட்டுக்குருவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தவிர எந்திர உலகில் பறவைகள் வசிக்க இரண்டு உள்ளங்கை அளவு இட வசதி செய்து தரவேண்டும் என்று நினைக்கக் கூட மக்களுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது.

சிட்டுக்குருவிக்கு இன்னொரு பெயர் "மனை உறை பறவை'. மனிதர்களுடன் இணக்கமாக வாழ விரும்பும் பறவை சிட்டுக்குருவி. சிட்டுக்குருவிக்கு முக்கியத்துவம் தரும் "சிட்டுக்குருவி காளி அம்மன் கோயில்' மதுரை சிம்மக்கல் பகுதியில் இருக்கிறது.

சிட்டுக்குருவி இனத்தை சென்னை நகருக்கு மீண்டும் வரவேற்க "கூடுகள்' அறக்கட்டளையை 2017-இல் ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நானே மரப்பலகையில் கூடுகள் செய்து இலவசமாக ஆர்வமுள்ளவர்களுக்கு வழங்கி வந்தேன். தொடக்கத்தில் கூடுகளை வெவ்வேறு வடிவங்களில் செய்தேன். போகப்போக சிட்டுக்குருவி எளிதாக வந்து போக வசதியாக இருக்கும் பெட்டியை வடிவமைக்க முடிந்தது.

திறந்து மூடக் கூடிய பெட்டிகளை இப்போது செய்வதில்லை. குருவி முட்டை போட்டிருக்கிறதா... முட்டை பொறித்து குஞ்சு வந்துவிட்டதா..என்று வீட்டில் சிறுவர்கள் தொந்தரவு செய்வதால் திறக்க முடியாத கூடுகளை உருவாக்குகிறோம். கூடுகளைப் பலம் மிகுந்த அட்டைப்பெட்டிகளிலும் செய்யலாம். பெட்டி மட்டும் செய்து வைத்தால் போதும். கூட்டில் வாழத் தேவையான வசதிகளை சிட்டுக்குருவி செய்து கொள்ளும். இந்தக் கூட்டில் சிட்டுக்குருவி மட்டும்தான் வரும். வேறு பறவைகள் வராது. கூட்டிற்கு அருகில் ஒரு கிண்ணத்தில் குடிக்கத் தண்ணீர் வைத்துவிட்டால், சிட்டுக்குருவிக்கு சொர்க்கம் கிடைத்தது மாதிரி மகிழும்.

கரோனா காலத்தில் பூட்டிக் கிடந்த பள்ளிகளில் அனுமதி பெற்று கூடுகளை வைத்தேன். ராயபுரம் சுற்றுவட்டாரத்தில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அவர்கள் வீடுகளில் வைக்க கூடுகளை வழங்கினேன். அவர்கள் மூலமாக ஆர்வமுள்ள வீடுகளுக்கும் கூடுகளை விநியோகித்தோம். தொடக்கத்தில் கூடுகளை விலைக்கு வாங்கி இலவசமாக வழங்கி வந்தேன். ஒரு கூடு நூறு ரூபாய் விலை கொடுக்க வேண்டும். பிறகு கூடுகளை நானே செய்ய ஆரம்பித்தேன். அதனால் 60 - 70 ரூபாய்க்குள் கூடுகளை செய்ய முடிகிறது. மாணவர்களுக்கு கூடு செய்ய கற்றும் கொடுத்தேன். அதனால் வட சென்னையில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்திருக்கிறது.

பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது எனது ஆசிரியர் சிட்டுக்குருவிக் கூட்டினை அறிமுகப்படுத்திப் பறவைகளுக்கு கூடு ஏற்படுத்தித் தர வேண்டிய கடமையைச் சொன்னார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்குப் பறவைகளின் அருமை தெரியும். பொந்துகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன். நகர்புறத்தில் சிட்டுக்குருவிக்குச் சரணாலயம் அமைக்க உந்துதல் ஏற்பட்டது அதன் அடிப்படையில்தான். ராயபுரத்தில் இயங்கும் தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு கூடுகள் வைக்கவும், கூடுகள் செய்யவும் இடம் வழங்கியுள்ளது.

வீடுகளில் கூடுகள் வைத்த சில நாள்களில் சிட்டுக் குருவிகள் கூடுகளில் வசிக்க ஆரம்பித்தன. கரோனா காலத்தில் பள்ளிகள் பூட்டப்பட்டிருந்ததால், மரங்கள் உள்ள பள்ளிகளில் கூடுகளை வைத்தேன். பொது முடக்கக் காலத்தில் மக்கள் நடமாட்டம்,, வாகன போக்குவரத்து அரிதாக இருந்ததால் சிட்டுக்குருவிகள் புதிய கூடுகளை நோக்கி வர ஆரம்பித்தன. தங்களது இனப்பெருக்கத்தையும் தொடங்கின. நூறு கூடுகளில் சுமார் எழுபது கூடுகள் சிட்டுக்குருவிகளால் நிரம்பின.

அடுத்தக் கட்டமாகப் பத்தாயிரம் சிட்டுக்குருவி கூடுகளைச் சென்னை நகரில் விநியோகிக்க உள்ளோம். கூடுகளை இருபதிலிருந்து முப்பது ரூபாய் செலவில் உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சிட்டுக்குருவி எழுப்பும் ஒலியுடன் தினமும் கண் விழிப்போம் என்கிறார்'' கணேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com