Enable Javscript for better performance
நக்கீரராகவே இருந்தாலும் குற்றமே!: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  நக்கீரராகவே இருந்தாலும் குற்றமே!: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  By   |   Published On : 01st August 2021 06:00 AM  |   Last Updated : 01st August 2021 06:00 AM  |  அ+அ அ-  |  

  sk1


  சென்றவார தொடர்ச்சி....

  பரிசும் மானமும் ஒருங்கே இழந்து பரிதவித்தவனாய், தருமி ஆண்டவன் சந்நிதியை அடைந்தான். "கதியிலேன் என்பதற்காய், விதியிலாப் பாடலைத் தருதல் முறையோ?' என விம்மினான். "வறுமையே சொத்தாய் இதுவரை உனை வழிபட்டவன் நான். பரிசிழந்த பரிதவிப்பிற் பேசவில்லை. பேரறிவினனான பிஞ்ஞகா! உன்கவியில், சிற்றறிவு கொண்ட மற்றவர் பிழையுரைப்பின், யாருனை மதிப்பார்? அதுவே என்கவலை என உரைத்து," ஐயனே!' என அழுது நின்றான்.

  வறுமைநோய் பிணிப்பப் பன்னாள் வழிபடும் அடியேன் நின்பால்
  பெறுபொருள் இழந்தேன் என்று பேசிலேன் யார்க்கும் மேலாம்
  கறைகெழு மிடற்றோய்! நின்றன் கவிக்குற்றஞ் சில் வாழ்நாள் சிற்
  அறிவுடைப் புலவர் சொன்னால் யாருனை மதிக்க வல்லார்.

  ஏழையின் அழுகை இறைவனைச் சுட்டது. அறிவினால் ஆணவம் கொண்ட நக்கீரர் தருக்கடக்க, உருவிலா அப்பெருமான் தன்பெருமை சுருக்கி, புலவனாய் வேடம் கொண்டு பொங்கியே வந்தான்.

  எந்தை இவ்விகழ்ச்சி நின்னதல்லதை எனக்கு யாதெனாச்
  சிந்தைநோய் உழந்துசைவச் சிறுவன் நின்றிரங்க யார்க்கும்
  பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனுமான
  சுந்தரவிடங்கன் ஆங்கோர் புலவனாய்த் தோற்றம் செய்தான்.

  புலமையின் முடிவே புலவனாய்த் தோன்றி, அறிவின் பங்கம் நீக்கச் சங்கம் புகுந்தது. "பங்கம் உரைத்தார் யார்? என் பாடலுக்' கென்று, இறையனார் வினவ, வந்தவன் ஆண்டவன் என உணராது, ஆணவம் அறிவை மறைக்க, "நானே' என அகங்காரத்துடன் எழுந்தார் நக்கீரர்.

  ஆரவை குறுகி நேர்நின்(று) அங்கிருந்தவரை நோக்கி
  யாரை நங்கவிக்குக் குற்றம் இயம்பினார் என்னா முன்னம்
  கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் நின்ற
  சீரணி புலவன் குற்றம் யாதெனத் தேராக் கீரன்.

  "சொல்லிற் பிழையா? பொருளிற் பிழையா?' சோதிவானவன் கேள்வி தொடுத்தனன். ஆணவம் நிறைய, அசையா நெஞ்சொடு "பொருளே பிழை" எனப் புகன்றார் கீரர். பொருளெலாமான பொருளை, அப்பொருள்தரு கவிதைப் பொருளைப் பிழையென உரைத்துப் பேதைமை கொண்டார் தன்குற்றமறியா அத்தமிழ்ப்புலவர். "என்குற்றம்?" என இறைவன் கேட்டதும், "மங்கையர் கூந்தலுக்கு மலர்களின் சார்பாலன்றி, எக்காலத்தும் இயற்கையில் மணமில்லை. உண்டென உரைத்தது எங்ஙனம்?' படைத்தவன் தனக்கே பாடம் நடத்தினார் அப்பாவலர்.

  சொற்குற்றம் இன்று வேறு பொருட்குற்றம் என்றான் தூய
  பொற்குற்ற வேணி அண்ணல் பொருட்குற்றம் என்னை? என்றான்
  தற்குற்றம் வருவ(து) ஓரான் புனைமலர்ச் சார்பால் அன்றி
  அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்.

  அறிவேயான அவ்வாண்டவன், அறியான் போலக் கேள்வி தொடுத்தான். "உத்தமஜாதி உயர் குலப்பெண்டிர் பத்மினி குழலுமோ?' படைத்தவன் கேட்க அறியாமையையே அறிவாய்க் கொண்டு, "ஆங்கதும் அனைத்தே' என்றார் கீரர். "தெய்வ மங்கையர்தம் திருக்குழலும் அஃதேயோ?'ஆண்டவன் தன் கேள்விகளை அடுக்கினான். "இந்திராணி முதலிய தேவப் பெண்களுக்கும், கூந்தல் வாசனை தரப்பட்டதன்றி வரப்பட்டதல்ல.' அறியாப்பொருள் பற்றித் தெரியாப் புலவர் அடித்துப் பேசினார்.

  பங்கயமுகம் மென்கொங்கைப் பதுமினி குழலோ என்ன
  அங்கதும் அனைத்தே என்றான் ஆலவாயுடையான் தெய்வ
  மங்கையர் குழலோ என்ன அன்னதும் மந்தாரத்தின்
  கொங்கலர் அளைந்துநாறும் கொள்கையாற் செய்கை என்றான்.

  ஆண்டவன், அவர் ஆணவத்தின் எல்லையறிய, அடுத்துத் தொடுத்தனன் கேள்வியை. "ஒரு காலத்தும் நீ மறவாது வணங்கும், திருக்காளத்தி அப்பன்தன் தேவியாம் ஞானப்பூங்கோதைதன் குழலும் நறுமணம் இலதோ?' சிந்தையும் மனமும் செல்லா அச்சிவனவன் தேவி தன்னின், பங்கமில் கூந்தல் பற்றிப் பகர்தற்கு நான் யார்? என்று, சங்கத்தலைவர் சாற்றினார் அல்லர். ஆணவம் பொங்க, "அன்னை கூந்தலும் அஃதே' என்றார்.

  பரவிநீ வழிபட் டேத்தும் பரஞ்சுடர் திருக்காளத்தி
  அரவு நீர்ச் சடையார் பாகத் தமர்ந்த ஞானப் பூங்கோதை
  இரவினீர்ங் குழலும் அற்றோ? என அஃதும் அற்றே யென்னா
  வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்.

  நக்கீரர் ஆணவத்தின் எல்லை தொட்டார். தமிழ்ப்புலவன் எனும் தரம் பெற்றதால் அப்போதும் அவர்க்கு அறிவூட்ட விரும்பிய ஆண்டவன், நெற்றிக்கண் திறந்து சிறிது காட்ட, அதுகண்டும் நக்கீரர் ஆணவம், அசையவில்லை. இறைவன் ஞானக்கண் திறந்து காட்டியும் நக்கீரரின் அறிவென்னும் ஊனக்கண் திறக்கவில்லை. ஆண்டவன், தன்னை அடையாளம் காட்டிய பின்னும் செந்தமிழால் வந்தனை செய்யாது நிந்தனை செய்தார் நக்கீரர். "தேவர் பதிபோல தேகம் முழுதும் கண்கள் காட்டினும், மொழிந்த உம்பாட்டில் குற்றம் குற்றமே!'என, தன் குற்றம் அறியாது தருக்கோடு உரைத்து நின்றார் அவர்.

  கற்றைவார் சடையார் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப்
  பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம்
  முற்றுநீர் கண்ணானாலும் மொழிந்த உம்பாடல் குற்றம்
  குற்றமே என்றான் தன்பால் ஆகியகுற்றம் தேரான்.

  தமிழறிந்தும், தருக்கொழியா நக்கீரர் செருக்கால், சினம் கொண்டான் சிவன். கண் திறந்தது! கனல் பறந்தது! கதை முடிந்தது! அனல் தாங்காது கீரர் புனல் சேர்ந்தார். பொற்றாமரைக்குளம் அவரைப் புதைத்துக் கொண்டது.

  தேய்ந்த நான்மதிக் கண்ணியான் நுதல்விழிச் செந்தீப்
  பாய்ந்த வெம்மையிற் பொறாது பொற் பங்கயத் தடத்துள்
  ஆய்ந்த நாவலன் போய்விழுந்(து) ஆழ்ந்தனன் அவனைக்
  காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்.

  திருவிளையாடற் புராணத்தின் திருஆலவாய்க் காண்டத்தில் வரும், "தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்' கூறும் கதையிது. முதலில் வாசகர்க்குக் கதை தெரிவதற்காய்ச் சற்று அழகூட்டிக் கதையுரைத்தேன். இனி, விடயத்திற்கு வரலாம்.

  திருவிளையாடற்புராணக் கதையைக் கூறுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். பாமரர்கள் மட்டுமன்றிப் படித்தவர்கள் கூட இன்று ஒருவரைக் குற்றஞ் சாட்டும்போது, "நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே!' என, கூறி வருகின்றனர். அங்ஙனமாய்க் கூறுவோர்தம் மனத்தில் நக்கீரன் இறைவனது பாட்டில் குற்றம் கண்டது சரியென்றும் இறைவன் பாடல் குற்றமுடையது என்றும், இறைவன் தன்னையுணர்த்திய பின்பும், சிவனேயாகிலும் குற்றம் குற்றமே! என, அஞ்சாது நக்கீரர் உரைத்தது, அறிவின் தெளிவால் வந்த, திமிர்ந்த ஞானச் செருக்கென்றும் நினைப்புண்டு.

  அவர்கள் அதுபோலவே தாமும் உரைப்பதாய்க் கூறி, தம் வாதங்களை நியாயப்படுத்த முனைகின்றனர். நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே! எனும் நக்கீரர் கூற்றை, இன்று மரபுத்தொடராய்ப் பயன்படுத்துவோர் பெரும்பாலும் மேற்சொன்ன கருத்துடனேயே இத்தொடரைப் பயன்படுத்துகின்றனர். அக்கருத்துப் பிழையானது என்பதை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கமாம்.

  சிவன்மேற்கொண்ட பக்தியால் நக்கீரரைப் பழி சொல்லும் முயற்சியோ இதுவெனின் நிச்சயம் அது இல்லையாம். அங்ஙனமாயின் நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே! என்ற நக்கீரர் கூற்றின் பிழைதானென்ன? கேள்வி பிறக்கும். ஆராய்வாம்.

  இறையனார் தந்த கவிதையை தருமி தமிழ்ச்சங்கத்தார்க்குக் காட்டுகிறான். சங்கத்தில் இருந்தார் அனைவரும் தரமிக்க புலவர்களே. அளக்கில் கேள்வியார் என, அவர்தமை குறிப்பிடுகிறார் புராண ஆசிரியர். சங்கத்தை அமைத்த பாண்டியனும் தமிழ் வல்லவனே. அவர்கள் அனைவரும் தருமியின் கவிதையைத் தரமென்று பாராட்டுகின்றனர். நக்கீரர் மட்டும் பிழையுரைக்கின்றார். பிழையான கவிதையாயின் சங்கத்துப் புலவோர் அதைக் கண்டிக்காமல் விட்டது ஏன்? இது முதற் கேள்வி.

  தருமியின் கவிதை பிழையாயின், சங்கத்தில் அக்கவி படிக்கப்பட்டபோது பிழை சொல்லாமல் இருந்துவிட்டு அரசனிடம் சென்று தருமி பாராட்டுப் பெற்று, பொற்கிழியை எடுக்கப் போகும்போது கவிதையிற் குற்றம் சொல்லி நக்கீரர் தடுத்தது எதற்காக? இது இரண்டாம் கேள்வி.

  இக்கேள்விகளை எழுப்பி ஆராய, சங்கத் தலைவராயிருந்தும் தன்னால் இயற்ற முடியாத கவிதையை மற்றொரு சிறு புலவன் இயற்றியதில் நக்கீரர் பொறாமை கொண்டனர் என்பது புலனாகிறது. அப்பொறாமை மெல்லமெல்ல வளர்ந்து தருமியை அரசன் பாராட்ட அதிகரித்து பொற்கிழி வழங்க, பொங்கி வெளி வந்தது போலும். அப்பொறாமைத் தீயே இறையனார் பாடலிற் பொருட்குற்றம் காணத் துணையாயிற்றோ?

  இறையனார் அவைக்கு வந்து, "எனது பாடலில் என்னகுற்றம்?' என்று கேட்க "பொருட்குற்றம்' என்கிறார் நக்கீரர். மங்கையர் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை என்பது நக்கீரர் வாதம். மணம் இயற்கையாய் இருப்பதாய்க் குறிப்பினாற் கூறும் இப்பாடற் பொருள் பிழை என்கிறார் நக்கீரர். இங்கும் ஒரு கேள்வி பிறக்கிறது.

  பெண்ணென்பது ஒரு பிறவி வகையே எனினும், அதனுள், பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என வேறுபாடுகள் உண்டென்று இன்ப நூல்கள் பேசும். ஆதலால் இப்பிரச்னையில் சாதி ஒருமையால் நீதியுரைக்க முடியாதென்பது தெளிவு. அப்படியிருக்க, பெண்கள் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை என நக்கீரர் கூறுதல் எங்ஙனம்?

  நக்கீரர் இல்லறத்தாரே ஆயினும், தன் மனைவியின் கூந்தல் பற்றி உரைக்கவே அவர்க்கு உரிமை உண்டு. பல பெண்களைக் கூடி அவர்தம் இயல்பறிந்து உரைக்கும் வன்மை இன்பத்துறையில் எளியரானார்க்கே கைகூடும்.

  கல்விச் சிறப்பாலும் ஒழுக்கத்தாலும் தமிழ்ச்சங்கத்தின் தலைமையேற்ற நக்கீரர் அங்ஙனம் இன்பத்துறையில் எளியராய் இருந்திருக்க நியாயமில்லை. அப்படியிருக்க, பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா? எனும் வினாவுக்கு, இல்லையென உறுதிபடப் பதில் கூற நக்கீரரால் எப்படி முடிந்தது? இறையனார் கவியிற் குற்றம் காணும் நோக்கத்தால், தன் அறிவுக்கு உட்படாத விடயம் எனத் தெரிந்தும் நக்கீரர், இறையனார் பாடலிற் பிழை கண்டிருக்கிறார் என்றே கொள்ளவேண்டியுள்ளது.

  மேற்சொன்ன வாதத்தினைக் கடந்து, பெண்கள் கூந்தலுக்கு இயற்கை வாசனை இல்லை என்பதை நூலறிவால், நக்கீரர் தெரிந்திருந்தார் எனக் கொள்ளினும் அம்முடிவு இவ்வுலகில் வசிக்கும் மானுடப் பெண்களைப் பற்றியதாய்த்தான் அமைய முடியும்.

  இறையனார் தெய்வப் பெண்களைப் பற்றிக் கேட்கவும் நக்கீரர், அவர்கள் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை என வாதிடுவது நிச்சயம் அறியாமையின்பாற்பட்ட வாதமேயாம். அவ்வாதமே, அவர்தம் மனக்கோட்டத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

  படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழிலைச் செய்பவன் அப்பரமன். வரம்பில் ஆற்றலுடைமை கொண்ட அப் பரமன் எப்பொருளையும் எப்படியும் படைக்க வல்லான். தமிழைத் தெளிவுறக் கற்று, தமிழ்ச்சங்கத் தலைமை ஏற்ற நக்கீரர், தமிழ் நூல்கள் கூறும் இறை பற்றிய மேற்சொன்ன கருத்துக்களை அறியாதவர் அல்லர்.

  இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்து தன்னை இனங்காட்டுகிறான். வந்தது பரமன் எனத் தெரிந்த பின்பும், அவனே இவ்வுலகைப் படைத்தவன் என்பதை அறிந்த பின்பும், அவன் நினைத்தால் எப்பொருளையும் எப்படியும் படைக்க முடியும் என்பதறிந்த பின்பும், அவன் படைத்த உலகின் இயல்பை அவனை மறுத்துத் தானுரைப்பது தவறென்றுணராது, நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே எனக்கூறி நின்ற நக்கீரர் செயல் அறிவாணவத்தின் உச்சநிலை மட்டுமன்றி, அறியாமையின் உச்சநிலையுமாம்.

  இறைவன், தன் கவிதையைத் தருமியின் கவிதையாய்க் கொடுத்தனுப்பியது குற்றம் அல்லவா? கேள்வி பிறக்கும். கற்றோர் அவையில் கரவியற்றும் இச்செயல், மற்றோர் செய்தால் குற்றமே. உலகில் எப்பொருளோடும் இறைவன் ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்பவன். அத்தகுதி கொண்டதால், தருமி வடிவிலும் பரமன் பதிந்தே நிற்கிறான். அஃதுணர, தன் கவிதையை மாற்றானிடம் கொடுத்தனுப்பியது குற்றம் எனும் கூற்று இறைவற்குச் செல்லாது என்பதறியலாம்.

  இச்சம்பவம் நடந்தது மதுரையில். மதுரை முழுதாண்டு மாண்புடன் நிற்கும் மீனாட்சி அருகிருக்க, நக்கீரரிடம் கேள்வியெழுப்பும் சிவனார், அவ்வன்னை கூந்தலுக்கு வாசனையுண்டோ எனக் கேளாது எங்கோ இருக்கும் காளத்தியான்தேவி ஞானப்பூங்கோதையின் பெயர் சொல்லி அவள் கூந்தலுக்கு மணம் உண்டோ எனக் கேட்டது எதனால்?

  ஞானமே வடிவான செறிந்த வாசனை மிக்கக் கூந்தலைக் கொண்டவள் என்பது, ஞானப்பூங்கோதை எனும் பெயரின் விளக்கமாம். ஞான வடிவத்தில் புறப்பொருள்கள் கலத்தல் கூடுமோ? கூடாதென்பது திண்ணம்.

  கூந்தலுக்கு மணம் உண்டு என்பதை ஒப்பும் நக்கீரர், அம்மணம் புறப்பொருள்களின் கலப்பால் செயற்கையாய் அமைந்தது என்றே வாதம் செய்கிறார். அது உண்மையாயின், புறப்பொருள்களின் கலப்பு சாத்தியமாகாத ஞானமே வடிவான அன்னை கூந்தலில் வாசனை செயற்கையால் அமைவது எங்ஙனம்? இக்கேள்வி பிறக்க, அன்னை கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டென்பது தெற்றெனப் புலனாகிறது.

  அது புலனாக அன்னையின் வடிவான பெண்கள் கூந்தலும் இயற்கை மணம் கொள்ளும் என்பதை உய்த்துணரலாம்.

  நக்கீரர் இவ்வறிவைப் பெற்றேனும் தன்பிழை திருந்தட்டும் எனும் கருணையினாலேதான் இறையனார் அருகிருந்த அன்னை மீனாட்சியைத் தவிர்த்து ஞானப்பூங்கோதையின் கூந்தலுக்கும் மணமில்லையோ? எனக் கேட்டனர் போலும்.

  தன்விருப்புக்குரிய மாணவன், பதில் கூறி வெற்றி கொள்ளவேண்டும் என்பதற்காய், விடைக்குறிப்புக் கொண்ட வினாவை ஆசிரியன் கேட்பது போன்றதாய் ஆண்டவன் செயல் அமைகிறது. அவ்வருட்பெரும் கருணை உணராது, நக்கீரனார் அன்னை கூந்தலும் செயற்கை மணமுடையதே என சாதித்துப் பழிகொண்டார்.

  மொத்தத்தில், இறையனார் நெற்றிக்கண் காட்டவும், மெய்யுணராது குற்றம் குற்றமே! என உரைத்து நிற்கும் நக்கீரனார் கூற்று அறிவுத் தெளிவால் விளைந்ததன்று. ஆணவச் செறிவால் விளைந்ததேயாம். அஃதுணராது, இன்றும், குற்றம் குற்றமே! எனப் பேசி நக்கீரர் போல் தாமுமென நினைவார் நக்கீரர் வார்த்தைகளின் குற்றம் உணர்தல் அவசியம்.

  நக்கீரர்தைம் கூற்றாய் வரும், ‘குற்றம் குற்றமே!" எனும் தொடரின் முடிவில் வரும் ஏகாரத்திற்குத் தேற்றப் பொருள் கொடுப்பது தவறு. வினாப் பொருள் கொடுப்பதே அறிவுடையார் கருத்துக்குப் பொருத்தமாம். அங்ஙனம் வினாப் பொருள் கொடுக்க அத்தொடர்க்கான கருத்து குற்றம் குற்றமோ? என்பதாய் அமையும்.

  அஃதே அத்தொடர்க்காம் உண்மைப் பொருளாம்.

  (நிறைவு பெற்றது)


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp