வந்தாரை வரவேற்கும் இல்லம்

அந்த வீட்டிற்குக்  கதவுகள் இருக்கிறது. ஆனால்  இல்லை. அது, "புதிர்' சுமந்து நிற்கும் வீடு அல்ல. "அன்பு', "கருணை' என்னும் இரண்டு கரங்களை நீட்டி வருபவர்களை வரவேற்கும் புனித இல்லம்.  அந்த வீட்டிற்கு யாரும
வந்தாரை வரவேற்கும் இல்லம்

அந்த வீட்டிற்குக் கதவுகள் இருக்கிறது. ஆனால் இல்லை. அது, "புதிர்' சுமந்து நிற்கும் வீடு அல்ல. "அன்பு', "கருணை' என்னும் இரண்டு கரங்களை நீட்டி வருபவர்களை வரவேற்கும் புனித இல்லம். அந்த வீட்டிற்கு யாரும் வரலாம். எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் தங்கலாம் தயாராக இருக்கும் அரிசி .. காய்கறிகளை எடுத்துச் சமைத்துச் சாப்பிடலாம்... அங்கே வைக்கப்பட்டிருக்கும் ஆடைகளில் பிடித்தமானதை எடுத்து அணிந்து கொள்ளலாம். அலமாரியில் இருக்கும் புத்தகங்களை எடுத்து வாசிக்கலாம்... அப்படியே குட்டி தூக்கம் போட்டு ஓய்வும் எடுத்துக் கொள்ளலாம்..'.

யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். "நீங்கள் யார்... எதற்காக வந்தீர்கள்.. யாரைக் கேட்டுச் சமைத்தீர்கள்.. சாப்பிட்டீர்கள்.. உடைகளை எடுத்து ஏன் உடுத்தினீர்கள் எப்போது புறப்படுகிறீர்கள்?' என்று யாரும் ஒரு கேள்விகூடக் கேட்கமாட்டார்கள்.

அந்த இல்லத்தின் பெயர் "அந்தரி இல்லு' (அனைவரது இல்லம்). மிகவும் பொருத்தமான பெயர். ஹைதராபாத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் இருக்கும் "கோதாபேட்'டில் உள்ளது. "கோதா பேட்' பல்வகைப் பழ அங்காடிகளுக்குப் பெயர் போனது. எவ்வித பேதம் பாராமல் பாச மழை பொழியும் "அந்தரி இல்லு'வை நிர்வகிப்பவர்கள் மருத்துவத் தம்பதிகளான சூரிய பிரகாஷ் விஞ்சமூரி - காமேஸ்வரி.

"இங்கே யார் வேண்டுமானாலும் வரலாம். அடையாள அட்டை எதுவும் தேவையில்லை.' என்கிறார் டாக்டர் சூரிய பிரகாஷ் விஞ்சமூரி. ஆங்கில மருத்துவர். "உயிரைக் காப்பாற்றுங்கள், உடல்நலம் பேணுங்கள்' என்ற குறிக்கோளுக்காகத் தொடங்கிய பொது நல தொண்டு நிறுவனத்தை 1999 - லிருந்து நடத்தி வருகிறார். டாக்டர் சூரிய பிரகாஷ் விஞ்சமூரியின் மனைவி காமேஸ்வரியும் ஆங்கில மருத்துவர்தான்.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் முற்பகல் நேரத்தில் எங்கள் வீட்டிற்கு ஒருவர் வந்து பசிக்கிறது.. ஏதாவது இருந்தால் கொடுங்க என்று கேட்பார். எங்களுக்காக சமைத்ததை அவருக்குப் பரிமாறினோம். பசியின் தாக்கத்தால் அவசரம் அவசரமாக அள்ளி அள்ளி விழுங்கினார். கை கழுவி நாற்காலியில் சாய்ந்தவர் அழ ஆரம்பித்துவிட்டார்.

பதறிப் போய் "ஏன் அழுகிறீர்கள்..' என்று கேட்டதற்கு, "இரண்டு நாளா பட்டினி.. பசியால் செத்துவிடுவேனோ என்று பயந்தேன்... சாப்பிட்டதும் கொஞ்சம் தெம்பு வந்திருக்கு' என்றார். அவர் சொன்னது எங்களுக்குள் ஒரு திருப்பத்தை விதைத்தது.

யார் வேண்டுமானாலும் வந்து உணவு சமைத்து பசியைப் போக்கிக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தினால் என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தோம்.

ஆரம்பமாக வாழைப் பழங்களைத் தள்ளுவண்டியில் வைத்து பசியோடு இருப்பவர்களுக்குத் தினமும் வழங்கச் செய்தோம். சிறிது நாளில் அந்த சேவை போதாது என்று கருதி, "அந்தரி இல்லு' 2006-இல் தொடங்கினோம். இந்த இல்லத்தில் யார் வேண்டுமானாலும் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். சமையலுக்குத் தேவையான பொருள்கள் இருக்கும். சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம். பிறகு நூல்களை வாங்கி வைத்தோம். அது நூலகமாகியது. இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூலகங்கள் தெலுங்கானா மாநிலத்தில் ஏற்படுத்தியிருக்கிறோம். தன்னார்வத் தொண்டர்கள் இந்த நூலகங்களை நடத்துகிறார்கள்.

"அந்தரி இல்லு'விற்கு வருபவர்கள் தங்கள் மனக்குறைகளைச் சொன்னால் அவற்றைப் பொறுமையுடன் கேட்டு ஆறுதல் சொல்கிறோம்.

எனது சமூக பங்களிப்பு தொடங்கி 36 ஆண்டுகள் ஆகின்றன. நான் "அந்தரி இல்லு'வின் அறங்காவலர் மட்டுமே. எனக்கு சொந்தமாக வேறு எதுவும் இல்லை. சொந்தமாக ஏதாவது இருந்தால் அது தொடர்பான பிரச்னைகள், துயரங்கள் தொடங்கிவிடும். பிறகு அதன் பின்னால் ஓட வேண்டிவரும்... வாழ்க்கை பெரிய சோகமாகிவிடும். நான் "அந்தரி இல்லு'விற்காக யாரிடமும் நன்கொடை கேட்டதில்லை.

சமூகப் பங்களிப்பு என்பது தானாக வரவேண்டிய பண்பு. மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டிய சேவை. கட்டாயப்படுத்தி செய்ய வைக்க முடியாது. நன்கொடைகள், அரிசியாக, காய்கறிகளாக, எரிவாயுவாக உடைகளாக நூல்களாக வருகின்றன. மனைவி கருத்தரித்தல் குறித்த கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். மருத்துவ ஆலோசனை இலவசம். சிகிச்சைக்குப் பணம் தர இயலாதவர்களுக்கு இலவச சிகிச்சைக்கு நாங்கள் உதவுவோம்.

தெலங்கானாவில் படிக்காத பெண்களிடையே மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பை அரசு எங்களிடம் ஒப்படைத்துள்ளது. பணத்திற்காகச் சுமார் 22 லட்சம் பெண்களுக்கு அவசியமே இல்லாமல் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார்களாம். அதனால் வாரத்தில் மூன்று நாட்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று பெண்களுக்கு மருத்துவ விழிப்புணர்வை 2021 ஜனவரியிலிருந்து பரப்பி வருகிறோம்'' என்கிறார் டாக்டர் சூரிய பிரகாஷ் விஞ்சமூரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com