1 ரூபாய்க்கு  உணவு

கிரிக்கெட் பிரபலங்களும் இப்போது உணவு வழங்கும் சேவையில் இறங்கியிருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் 1 ரூபாய் உணவு திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.
1 ரூபாய்க்கு  உணவு


கிரிக்கெட் பிரபலங்களும் இப்போது உணவு வழங்கும் சேவையில் இறங்கியிருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் 1 ரூபாய் உணவு திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.  பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தன்னுடைய கிழக்கு தில்லி தொகுதியில் மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் "ஜன ரசோய்' திட்டத்தைத் தொடங்கி உணவு சேவை செய்து வருகிறார்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கவுதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.

முழு நேர அரசியல்வாதியாகி விட்ட கம்பீர், இப்போது தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கிழக்குத் தில்லியில் உள்ள காந்தி நகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தை சமையல் கூடமாக கவுதம் கம்பீர் மாற்றியுள்ளார். நவீன வசதிகளுடன் இந்த சமையற் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 100 பேர் வரை அமர்ந்து உணவு அருந்த முடியும். தற்போது, கரோனா காரணமாக 50 பேர் மட்டுமே ஒரே சமயத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். மதிய உணவாக அரிசி சோறு, பருப்பு, காய்கறிகள் வழங்கப்படுகின்றன.  மதிய உணவுக்காக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார்கள். இந்த மதிய உணவு திட்டம் முற்றிலும் கவுதம் கம்பீர் அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது. எந்த விதமான அரசு உதவியும் பெறவில்லை . தொடர்ந்து ஜனவரி 26 -ஆம் தேதியன்று குடியரசு தினத்தையொட்டி தில்லி அசோக் நகரிலும் இதே போன்ற உணவகத்தைத் திறந்துள்ளார். 

இது பற்றி கவுதம் கம்பீரிடம் கேட்ட போது சொன்னார்: 

""தெருவோரத்தில் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு இரு வேளை கூட உணவு சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர்.  இதனைப் பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. தலைநகர் தில்லியில் குறைந்த செலவில் மக்களுக்கு உணவு வழங்க உணவகங்கள் இல்லை. ஜாதி, மதம், இனம் கடந்து அனைவரும் நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை பெற வேண்டும். பொது முடக்கக் காலத்தில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில்தான் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். தில்லியில் வசிக்கும் ஒவ்வொரு மக்களும் நல்ல ஆரோக்கியமான உணவு குடிநீர் வசதியை பெற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.  இங்கு ஒருநாளில் ஐநூறு பேருக்கு உணவு வழங்கப்படும். சிறப்புத் தினங்களில், அரிசி சாதம், பருப்பு, காய்கறி கூட்டு ஆகியவை வழங்கப்படும். உணவு தேவைப்படும் நபர்கள் திரும்பவும் வாங்கிக்கொள்ளலாம். என்னுடைய கிழக்கு தில்லி தொகுதியில் இது போன்று 10 உணவகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளேன். இலவசம் என்பதை விட ஒரு ரூபாய் வாங்குவது சிறந்தது. எனவே தான் 1 ரூபாய் வசூலிக்கிறோம்'' என்கிறார்  கவுதம் கம்பீர். 

இந்த உணவு சேவை திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் பலரும் கவுதம் கம்பீரை பாராட்டி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com