ரத்தத்தின் ரத்தமே...  - 3

சமீபத்தில் ஒரு நாள் நாட்டுப்புறக் கலைஞர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி ரத்த பரிசோதனை செய்வதற்காக ரத்தம் சேகரித்து வர, லேப் டெக்னிஷியனை அவரது வீட்டுக்கு அனுப்பியிருந்தேன்.
ரத்தத்தின் ரத்தமே...  - 3


சமீபத்தில் ஒரு நாள் நாட்டுப்புறக் கலைஞர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி ரத்த பரிசோதனை செய்வதற்காக ரத்தம் சேகரித்து வர, லேப் டெக்னிஷியனை அவரது வீட்டுக்கு அனுப்பியிருந்தேன். நண்பர்களுடன் பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்த அவர், ரத்தம் எடுக்க வந்தவரை வாசலில் பார்த்தவுடன் "யார் நீங்கள்?' என்று கேட்டிருக்கிறார்." ரத்த பரிசோதனை மையத்திலிருந்து வருகிறேன். உங்களுக்கு ரத்தம் எடுக்கணும்' என்று நான் அனுப்பிய டெக்னிஷியன் சொல்லியிருக்கிறார்.

உடனே புஷ்பவனம் குப்புசாமி "ஓ அட்டையா வாங்க வாங்க' என்று சொல்லியிருக்கிறார். பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. "எங்க ஊர்லேயெல்லாம் ரத்தம் சேகரிக்க வருபவரை நாங்கள் அட்டை வரான் அட்டை வரான் என்று தான் சொல்லுவோம். அதாவது நமது உடம்பில் எந்த இடத்தில் அட்டைப் பூச்சி ஒட்டினாலும் அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரத்தத்தை உறிஞ்சாமல் விடாது. இவர்களும் அப்படித்தான். ஒரே ஒரு டெஸ்ட் பண்ணணும்னா கூட ஒரு ட்யூப் நிறைய ரத்தத்தை உறிஞ்சிகிட்டுத்தான் போவாங்க' என்றார்

கேலியாக...

"ஏற்கெனவே என் உடம்புல ரத்தம் குறைவாத்தான் இருக்குன்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். நீங்க ரொம்ப ரத்தம் எடுக்காதீங்க' என்று நிறைய பேர் சொல்வதுண்டு. டாக்டர் என்னென்ன பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறாரோ அதற்கு ஏற்றபடிதான் பரிசோதனை மையத்தில் ரத்தத்தை நமது உடம்பிலிருந்து எடுப்பார்களே தவிர, தேவையில்லாமல் அதிகமாக ரத்தத்தை எடுத்து எப்போதும் வீணாக்கமாட்டார்கள்.

பரிசோதனை மையத்தில் சுமார் 1 மில்லி லிட்டரிலிருந்து சுமார் 10 மில்லி லிட்டர் வரை பரிசோதனைகள் செய்வதற்காக ரத்தம் எடுப்பதுண்டு. அவ்வளவுதான் டெஸ்ட் செய்வதற்கு அதற்கு மேலெல்லாம் எடுக்கமாட்டார்கள். அப்படியே எடுத்தாலும், அடுத்த 24 மணி நேரத்தில் நமது உடலே இயற்கையாக எடுத்த ரத்தத்தைச் சரி செய்து விடும்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஒரு ஜெர்மானிய ராணுவ அதிகாரி தனது படைவீரர்களை உற்சாகப்படுத்த ""போருக்கு முன்பு அதிக வியர்வை சிந்த செய்யப்படும் அளவுக்கதிகமான போர்ப் பயிற்சியானது போர் நடக்கும் நேரத்தில் அதிக அளவு ரத்தத்தை இழக்கவிடாமல் பாதுகாக்கும். அதிக வியர்வை சிந்த உழைத்துவிட்டால் அதிக ரத்தம் சிந்தத் தேவையில்லை'' என்றார்.

"பாவம் அவளுக்கு உடம்பெல்லாம் வெளுத்துப் போய் சுறுசுறுப்பா இல்லாம எப்பவும் சோர்வா இருக்கா அவ உடம்புல ரத்தமே இல்லீங்க' என்று சிலர் சொல்வதுண்டு. "மயங்கி மயங்கி அடிக்கடி விழுந்தால் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கிறது என்றும் கோபம் கோபமாக அடிக்கடி வந்தால் உடலில் ரத்தத்தின் அளவு கூடுதலாக இருக்கும் என்றும் கிராமப்புறங்களில் பெரியவர்கள் பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. பெரும்பாலும் பெண்களைத்தான் இப்படி அதிகமாகச் சொல்வார்களே தவிர ஆண்களை இவ்வாறு அதிகமாகச் சொல்வதில்லை.

உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கிறதா கூடுதலாக இருக்கிறதா அல்லது சரியான அளவில் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

ரத்தப் பரிசோதனையின் மூலம் நமது உடலிலுள்ள ரத்தத்தின் அளவு எவ்வளவு என்று கண்டுபிடித்துவிடலாம். வயது வந்த அதாவது 18 வயது நிரம்பிய ஓர் ஆணுக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு சுமார் 70 மில்லி லிட்டர் ரத்தமும் வயது வந்த ஒரு பெண்ணுக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு சுமார் 65 மில்லி லிட்டர் ரத்தமும் 12 வயதுக்குக் கீழுள்ள ஒரு குழந்தைக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு சுமார் 100 மில்லி லிட்டர் ரத்தமும் இருக்க வேண்டும்.

மேற்கூறிய அளவுக் குறியீடுகளை வைத்துக் கொண்டு அவரவர் எடை என்ன இருக்கிறதோ அதைக்கொண்டு பெருக்கினால் கிடைக்கும் விடையே உங்கள் உடலில் இருக்கும் மொத்த ரத்தத்தின் அளவாகும். புதிதாய்ப் பிறந்த குழந்தை வளர வளர ரத்தத்தின் மொத்த அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். சாதாரணமாக நம்மூரில் பிறக்கும் ஒரு குழந்தையின் எடை சராசரியாக சுமார் 3 கிலோ இருக்கும். அப்போது சுமார் 300 மில்லி லிட்டர் ரத்தம் அந்தப் பிறந்த குழந்தையின் உடலில் இருக்கிறதென்று அர்த்தம்.

உதாரணத்திற்கு நான் சுமார் 65 கிலோ எடை இருக்கிறேன் என் சகோதரனும் 65 கிலோ எடை இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். எனக்கும் என் சகோதரனுக்கும் ஒரே அளவு ரத்தம் அவரவர் உடலில் இருக்குமா என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். இந்த சந்தேகம் நியாயமானதுதான். நீங்கள் இருவரும் ஒரே வயது ஒரே உயரம் ஒரே எடை இருந்தாலும் உங்கள் இருவருக்கும் ஒரே அளவுதான் ரத்தம் இருக்கும் என்று நீங்கள் முடிவு பண்ணிவிடக் கூடாது. உங்களது உடலிலுள்ள நீரின் அளவு தனிப்பட்ட உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, உடலிலுள்ள நோய்கள் இவைகளைப் பொறுத்து உடலிலுள்ள ரத்தத்தின் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் சேர்த்து கவனிக்க வேண்டும் (கணக்கிட வேண்டும்) என்பதால் கன்னிப் பெண்களுக்கு இருக்கும் ரத்தத்தின் அளவைவிட சுமார் 30 லிருந்து 50 சதவீதம் ரத்தம் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும். கர்ப்பிணிப் பெண்களின் உடல் பெரிதாகிவிடுவதாலும் கர்ப்பப்பை பெரிதாகி விடுவதாலும் கருவிலுள்ள குழந்தை பெரிதாகி வருவதாலும் குழந்தைக்கும் தனது உடலுக்கும் தேவைப்படும் உணவுச் சத்தையும் ஆக்ஸிஜனையும் அதிக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதாலும் கர்ப்பிணிப் பெண்களுக்கிருக்கும் மொத்த ரத்தத்தின் அளவு வழக்கமாக இருப்பதைவிட சுமார் 50 சதவீதம் அதிகமாக இருக்கும்.

ரத்தம் உடலில் குறைவான அளவில் இருந்தால் மூளைக்குப் போகும் ரத்தத்தின் அளவும் சற்று குறைந்துவிடும். இதனால் இருதயத்துடிப்பு கூடலாம். இருதயத்தின் செயல்திறன் குறையலாம். உடலில் குறைந்த அளவு ரத்தம் இருந்தால் அதை மருத்துவ மொழியில் "ஹைப்போவொலீமியா' என்று அழைப்பதுண்டு. ரத்தத்திலுள்ள திரவ அளவு குறைந்து வருகிறது என்று இதற்கு அர்த்தம்.

""அவர் உடம்புல ரத்தம் இல்ல அவருக்கு 2 பாட்டில் ரத்தம் ஏத்தணும்''என்று மருத்துவமனையில் டாக்டர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். பொதுவாக ஒரு பாட்டில் ரத்தம் ஏத்தணும் என்று சொன்னால் அது சுமார் 350 மில்லி லிட்டர் அளவைக் குறிக்கும்.

அன்றாட வேலை சரியாக நடக்கிறதா ஒழுங்காக வேலைகளை செய்ய முடிகிறதா சுறுசுறுப்பாக இருக்க முடிகிறதா அப்படியென்றால் நமது உடலில் ரத்தத்தின் அளவு சரியாகத்தான் இருக்கிறது என்று முடிவு செய்து அதைப்பற்றி யோசிக்காமல் அடுத்தக் காரியத்துக்குப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com