ரோஜா மலரே! - 93: மனைவிக்குப் பரிசு பொருள் கேட்ட நடிகர் - குமாரி சச்சு

எப்போழுதுமே நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் உண்டு. அவர்கள் எந்த விதமான வசனம் பேசினாலும், மக்கள் சிரித்து விடுவார்கள்.
ரோஜா மலரே! - 93: மனைவிக்குப் பரிசு பொருள் கேட்ட நடிகர் - குமாரி சச்சு


எப்போழுதுமே நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் உண்டு. அவர்கள் எந்த விதமான வசனம் பேசினாலும், மக்கள் சிரித்து விடுவார்கள். அதில் உள்ள சிறப்பு என்னவென்றால், கே.ஏ.தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் இவர்கள்  நாடகத்தில் இருந்து வந்தவர்கள். நாடக அனுபவம் மிக்கவர்கள். 
சிங்கப்பூரில் நடந்த  ஒரு கலை நிகழ்ச்சி  பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது மூன்று நாள் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. இதில் ஃபேஷன் ஷோ, ஸ்கிட், போன்ற கலை நிகழ்ச்சிகளும் இருந்தன. நாங்கள் முன்பே மூன்று பேரும், சென்னையிலேயே ஒத்திகை பார்த்துக் கொண்டோம். நாங்கள் மேடை ஏற நேரமும் வந்தது. 
முதலில் தங்கவேலு அண்ணன் தான் மேடைக்குப் போக வேண்டும். அப்புறம் உசிலைமணி செல்ல வேண்டும். அதன் பிறகு தேங்காய் சீனிவாசன் நுழைய வேண்டும். இவர்கள் மூன்று பேரும் சென்ற பிறகே நான் மேடையேற வேண்டும். உசிலைமணிக்கு பேச அதிகம் வசனங்கள் கிடையாது. எங்கள் மூன்று பேருக்கும் தான் வசனங்கள் அதிகம். அவர்கள் இருவருக்கும் பதில் சொல்லும் விதமாக எனது வசனங்கள் இருந்தன. 
சொன்னபடி அனைவரும் மேடையேற நானும் அவர்களுடன் மேடைக்குப் போய் நின்றேன். தங்கவேலு அண்ணன் ஒரு வசனம் பேச, அதற்குத் தேங்காய் சீனிவாசன் உடனேயே எதிர் வசனம் பேச, இப்படி அவர்கள் இருவரும் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்கள்.  மேடையில் நான் இருப்பதையே இருவரும் மறந்து விட்டார்கள். அவர்கள் பேசியது அத்தனையும் புது வசனங்கள். சென்னையில்  மூவருக்கும் ஒத்திகை பார்த்த போது இல்லாத வசனங்கள். அவர்கள் பேசும் வசனங்களின் நடுவில் நான் எங்கு, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். அவர்கள் இருவரும் நிறுத்தினால் தானே நான் என்னுடைய வசனங்களைப் பேச முடியும். நானும் நாடகம் அனுபவம் பெற்றவள் என்ற முறையில், எங்கு அவர்கள் நிறுத்துவார்கள் என்று எனக்குத் தோன்றுகிறதோ, அங்கு நான் நுழைந்து வசனங்களைப் பேசத் தொடங்கினேன். 
வசனங்கள் புதிதாக இருந்தாலும், கதைக்குப் பொருத்தமான வசனம் பேசுவதில் இருவரும் கில்லாடிகள். எனக்கும் நாடக அனுபவம் இருந்ததால், அவர்கள் பேசும் வசனங்கள் புரிந்து, ஒரு புரிதல் உருவானது. நாடகம் சிறப்பாக அமைந்தது. எங்கள் பிரச்னை ரசிகர்களுக்குத் தெரியாததால், அரை மணி நேர நாடகத்தை ஆர்வமாகவே ரசித்தார்கள். 
நாடகமும் பெரும் வெற்றி பெற்றது.
நாங்கள் சென்னை கிளம்பும் வரை தேங்காய் சீனிவாசன் மிகவும் பிஸியாக இருந்தார். அவருக்கு ஷாப்பிங் செய்வதற்குக் கூட நேரமில்லை.  விமான நிலையம் வந்த பிறகு என்னிடம் வந்து, "சச்சுமா நான் என் மனைவிக்கும், வீட்டில் உள்ள  எல்லோருக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு போக வேண்டும். எனக்கு  உதவி செய்யுங்கள்', என்று கூறினார். 
விமானநிலையக் கடைகளில் ஏதாவது பொருள்கள் இருக்கிறதா என்று பார்த்தேன். நாங்கள் இருந்த இடத்தில் எந்த கடையும் இல்லை. அதனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. சென்னைக்கு விமானம் வந்து இறங்கிய போது, அங்கிருந்த கடைகளில் அவருக்குப் புடவைகள், இதரப் பரிசு பொருட்கள் வாங்கிக்  கொடுத்தேன். 
நாகேஷுடன் 50 படங்களில் நடித்திருப்பேன். அதே அளவு படங்கள் சுருளிராஜனுடனும் நான் நடித்திருக்கிறேன். அதுவும் பெரும்பாலான படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தேன். சுருளிராஜன் அந்தக் காலத்தில், கல்யாண் குமார் நடத்திய நாடகக் குழுவில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். நான் பார்த்த நாடகத்தில் அவர், நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. 
அந்த நாடகத்தில் புடவை விற்கும் வியாபாரியாக வருவார். அதற்காக "புடவை புடவை' என்று கூவிக் கொண்டு நடிக்க வேண்டும். அந்த நாடகத்தில் தான், நான் சுருளிராஜனை முதன் முதலாகப் பார்த்தேன். என்னிடம் அவரைப் பற்றிக் கூறும் பொழுது, "புதிதாக வந்த நடிகர், சிறப்பாக நடிக்கிறார். நகைச்சுவை வேடங்களில் நன்றாக நடிக்கக் கூடியவர்' என்று கூறினார்கள். அப்பொழுதே அவர் "எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்திருக்கிறார்' என்றார்கள். அப்படியே "எந்த வேடம்?' என்று கேட்டேன். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com