ரோஜா மலரே! - 95: படப்பிடிப்பில் ஜோதிடம் சொன்ன பிரபலம்! - குமாரி சச்சு

நானும் சுருளிராஜனும் எங்கள் உதவியாளர்களுடன் ரயிலில் ஒரே பெட்டியில் ஏறினோம். ரயில் கிளப்பிய சிறிது நேரத்தில் டிக்கெட் பரிசோதகர்வந்தார்.
ரோஜா மலரே! - 95: படப்பிடிப்பில் ஜோதிடம் சொன்ன பிரபலம்! - குமாரி சச்சு

நானும் சுருளிராஜனும் எங்கள் உதவியாளர்களுடன் ரயிலில் ஒரே பெட்டியில் ஏறினோம். ரயில் கிளப்பிய சிறிது நேரத்தில் டிக்கெட் பரிசோதகர்வந்தார். சுருளியை பார்த்து, "உங்கள் டிக்கெட்டை கொடுங்கள்' என்றார். தயாரிப்பு நிர்வாகி சுருளியிடம் தந்த டிக்கெட்டை பரிசோதகரிடம் தந்தார். அவர் அந்த டிக்கெட்டை பார்த்து விட்டு, சுருளியை பார்த்தார். " உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டார். சுருளிராஜன் என்று கூறினார். "நீங்கள் நடிகர் சுருளிராஜன் தானே? உங்கள் டிக்கெட்டில் கோவிந்தன் என்று பெயர் போட்டு இருக்கிறது. நீங்கள் இந்த டிக்கெட்டில் பயணம் செய்யக் கூடாது', என்று கூறினார். அது வரையில் சுருளியை அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. காரணம், சுருளிராஜன் சாதாரணமாக ஒரு சட்டை மற்றும் லுங்கி அணிந்துக் கொண்டிருத்தார். சுருளிராஜனுடைய குரல் தான் அவரை காட்டிக் கொடுத்து விட்டது.
என்னிடம் திரும்பி "உங்கள் டிக்கெட் கொடுங்கள்' என்றார். நான் டிக்கெட்டை எடுத்து நீட்ட, "நீங்கள் நடிகை சச்சு தானே' என்று கேட்டார். ஆமாம் என்று கூறினேன். "உங்கள் டிக்கெட்டும் வேறு பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இருவரது டிக்கெட்டும் உங்கள் பெயரில் இல்லை. வேறு ஒருவர் டிக்கெட்டை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள். உங்கள் டிக்கெட் எங்கே?' என்று கேட்டார். இன்று உள்ளது போல் அன்று எங்களிடம் செல்போன் வசதி இல்லை. "நாங்கள் படப்பிடிப்புக்கு சென்று விட்டு, சேலத்தில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டு இருக்கிறோம். அவசர அவசரமாக ரயிலை பிடிக்க வந்த வேளையில், சரியான டிக்கெட்டை தயாரிப்பு நிர்வாகி எங்களிடம் கொடுக்கவில்லை' என்று தெரிவித்தோம்.
டிக்கெட் பரிசோதகர் எங்கள் நால்வரையும் (எங்கள் உதவியாளர்களுடன் சேர்த்து) ரயிலை விட்டு இறக்காமல், அபராதம் செலுத்தி தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்தார். ஒருவழியாக நாங்கள் நால்வரும் சென்னை வந்து சேர்த்தோம். இந்த சம்பவத்தை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால், சுருளிராஜனின் சிறப்பு தன்மையே அந்தக்குரல் தான், அவரைக் காட்டிக் கொடுத்து விட்டது என்று மறுபடியும் சொல்வேன். சுருளிராஜன் இன்னும் கொஞ்ச காலம் இருந்து இருக்கலாம். சாகக்கூடிய வயதில்லை. திறமைசாலி, நல்ல மனிதர், சுறுசுறுப்பானவர். அது மட்டுமல்ல, நடிப்பின் மீது ஆர்வமும், பற்றும் கொண்டவர்.
"காதலிக்க நேரமில்லை' படத்திற்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய படம் "வெண்ணிற ஆடை'. அதில் நிறையப் புது முகங்களை அவர் அறிமுகப்படுத்தினர். அதில் ஒருவர் மூர்த்தி. அந்தப் படம் வெளியானதற்குப் பிறகு அவர் பெயருக்கு முன்னால், அந்தப் படத்தின் பெயரும் இடம் பிடித்தது. "வெண்ணிற ஆடை' மூர்த்தி தனது நடிப்பிற்கு ஒரு ஸ்டைல் வைத்து இருந்தார். வாயால் ஒரு விதமான சத்தம் எழுப்பியபடி வசனம் பேசுவார். அது மட்டுமல்ல, இரட்டை அர்த்த வசனம் பேசுவது போல் பேசுவார். ஒரு முறை அவர் இரட்டை அர்த்த வசனம் பேசுவார் என்று நான் நினைத்து தயங்கிய போது பிரச்னை இல்லாமல் வசனங்களைப் பேசினார்.
நான் அவரை அதிசயமாய் பார்த்துக் கொண்டு இருந்த போது, என்னிடம் வந்து
எப்படி இரட்டை அர்த்த வசனமும் பேசலாம். அதனையே எப்படி? மாற்றிப் பேசுவது என இரண்டையும் பேசிக் காட்டினார். அவருக்கு இயக்குநர்கள் அனுமதி அளித்தால் பேசுவார், இல்லை என்றால் பேசமாட்டார். அவர் வக்கீலுக்குப் படித்தவர், பண்பாளர், நானும் அவரும் சேர்ந்து நடித்தது பல படங்கள். அதில் குறிப்பிடக்தக்கவை "உத்தரவின்றி உள்ளே வா', "ஆசை 60 நாள்', "டாடா பிர்லா'. இதில் எங்கள் நகைச்சுவையை மக்கள் ரசித்தார்கள்.
அவர் படித்துக் கொண்டு இருக்கும் போதே எனக்குத் தெரியும். அவரது மனைவி மணிமாலா, அவரது மகன் ஆகியோருடன், நட்சத்திர நிகழ்ச்சிகளுக்கு எனது சகோதரியுடன் சேர்ந்து சென்று இருக்கிறேன். ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கு நான், ராஜேஷ், "நிழல்கள்' ரவி, டெல்லி கணேஷ் மற்றும் பலரும் போய் இருந்தோம். நாங்கள் சென்ற நாடுகள் இத்தாலி, பாரிஸ். துபாய்.
நாங்கள் எல்லோரும் இத்தாலி விமான நிலையத்தில் இறங்கியவுடன், எங்கள் நிகழ்ச்சி நிர்வாகி, "ஒவ்வொருவருக்கும் அமெரிக்க பணம் 20 டாலர் கொடுங்கள்', என்றார். தங்களிடம் இருந்த பணத்தில் இருந்து அவர் கேட்ட 20 டாலரை எல்லோரும் கொடுத்தோம். நாங்கள் விமான நிலையத்தை விட்டு கிளம்புவதற்குள் எங்களிடம் 20 ஆயிரம் யுரோ (இத்தாலி நாட்டு பணம்) கொடுக்கப்பட்டது. இது எதற்கு என்றால், அவசரத்திற்கு ஏதாவது வாங்க வேண்டும் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. 20 டாலர் கொடுத்தால், 20 ஆயிரம் யுரோ நமக்குக் கிடைக்கிறது. ஷாப்பிங் போக வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். "நிகழ்ச்சி முடியட்டும் நாங்களே ஊரை சுற்றி காண்பிக்கிறோம். அப்பொழுது நீங்கள் ஏதாவது ஷாப்பிங் செய்து கொள்ளுங்கள்' என்றார் நிகழ்ச்சி நிர்வாகி. ஆண்கள் எல்லோரும் முன்னே நடந்து போய் கொண்டு இருந்தார்கள். நானும் டெல்லி கணேஷ் மனைவி தங்கமும் பின்னாடி நடந்து வந்து கொண்டு இருந்தோம். அப்பொழுது எனக்குத் தாகம் எடுத்தது.
ஒரு ஹோட்டலில் போய் குடிக்கத் தண்ணீர் கேட்டோம். அவர்கள் தரவில்லை. சரி, நாமே வாங்கிக் கொள்வோம் என்று ஒரு கடையில் போய் கேட்டோம். ஒரு பாட்டில் தண்ணீர் 10 ஆயிரம் யுரோ என்று சொன்னார்கள். திரும்பவும் கேட்டோம். ஒரு பாட்டில் தண்ணீர் 10 ஆயிரம் யுரோ என்று சொன்னதையே அந்தக் கடைக்காரர் திரும்பவும் கூறினார். நம்மை இவர் ஏமாற்றுகிறார் என்று எனக்குத் தோன்றியது. நிகழ்ச்சி நிர்வாகியை அழைத்து, அந்தக் கடைக்காரர் கூறியதைச் சொன்னேன். அதற்கு அவர், "கடைக்காரர் கூறியது சரிதான். உங்கள் கையில் இருப்பது 20 ஆயிரம் பைசா தான்', என்றார். இதை மூர்த்தியிடம் கூறி சிரித்தேன். "அந்த 20 ஆயிரத்தில் இத்தாலியை வாங்க முயற்சி செய்தீர்களா?' என்றார் மூர்த்தி.
அவருக்கு ஜோதிடம், ஜாதகம் பார்க்க தெரியும். படப்பிடிப்பு இடைவேளையின் போது பலருக்குப் பலன்கள் சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். நானும் அவரும் பல படங்களில் நடித்து இருக்கிறோம். நான் முதன் முதலாக நடித்த தொலைக்காட்சி தொடரின் பெயர் "தினேஷ் கணேஷ்'. அவருக்கும் அதுதான் முதல் டிவி தொடர். ஜெய்ஸ்ரீ பிக்சர்ஸ் எஸ்.வி.ரமணன் அந்தத் தொடரை எடுத்தார். ஒரு தொலைக்காட்சி தொடருக்கு முதன் முதலில் வெளிப்புறப் படப்பிடிப்பு நடந்தது என்றால், இந்த சீரியலுக்கு தான். அந்தக் காலத்தில் ஒரு சிறிய பட்ஜெட்டில் தான் தொலைக்காட்சி தொடரே எடுப்பார்கள். ஆனால் "தினேஷ் கணேஷ்' தொடருக்காக நாங்கள் எல்லோரும் ஊட்டி, குன்னூர் சென்றோம். நாங்கள் எல்லோரும் என்றால், அதில் நடித்த ரவிச்சந்திரன், சுலக்சனா, டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, சுமதி, மற்றும் பலர் இருந்தார்கள். அது மறக்க முடியாத அனுபவம்.
ஒரு புகழ் பெற்ற நடிகை. அவர் அந்தஸ்தில் உள்ள நபர்கள் எல்லாம் காரில் வருவார்கள். ஆனால் அவர் ஸ்டூடியோவிற்குக் காரில் வரமாட்டார். பின் எப்படி?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com