பலிக்காமல் போன ஆசை

ஜூன் 25 மைக்கேல் ஜாக்சனின் நினைவு நாள்.  பாப் இசை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கலைஞர், "தி கிங் ஆஃப் பாப்' என்று செல்லப்பெயர் பெற்றார்.
பலிக்காமல் போன ஆசை


ஜூன் 25 மைக்கேல் ஜாக்சனின் நினைவு நாள்.  பாப் இசை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கலைஞர், "தி கிங் ஆஃப் பாப்' என்று செல்லப்பெயர் பெற்றார்.
மைக்கேல் ஜாக்சனின் அப்பா ஜோ ஜாக்சன்,  ஒரு இரும்பு தொழிற்
சாலையில் தினக்கூலியாக இருந்தவர். ஆனால் அவர்தோற்றுப்போன ஒரு மேடைப்பாடகரும் கூட. அவரும் 
அவரது தம்பியும் சில நண்பர்களும் சேர்ந்து ஃபால்கன்ஸ் எனும் ஒரு இசைக் குழுவை வைத்திருந்தார்கள். சக் பெர்ரி போன்றவர்களின் பாடல்களைத்தான் அவர்கள் பாடி வந்தனர். ஜோவுக்கு ஒன்பது  குழந்தைகள். அதில் ஏழாவது குழந்தை மைக்கேல் ஜாக்சன். தனக்கு கிடைக்காத வெற்றியை எப்படியாவது தன் குழந்தைகள் வழியாக அடைந்துதான் தீருவேன் என்ற ஜோ ஜாக்சனின் விடாப்பிடியான முயற்சிதான் துவக்கத்தில் "ஜாக்சன் 5' என்கிற பெரும் 
வெற்றி பெற்ற இசைக்குழுவையும், அதிலிருந்து பின்னர் மைக்கேல் ஜாக்சன் என்கின்ற உலக இசை உச்ச நட்சத்திரத்தையும் உருவாக்கியது. 
ஜாக்சன் தான் அழகற்றவர் என்றும் தனது முகத்தோற்றம் அசிங்கமானது என்ற  மனப்பதிவு சிறு வயதிலேயே  ஜாக்சனுக்குள்ளே இருந்தது. "உனது இந்த தடித்த மூக்கும் அசிங்கமான முக லட்சணங்களும் எங்கிருந்து வந்தது? எனது குடும்பத்தில் யாருமே இப்படி பிறந்ததில்லை' என்று கேட்டு தந்தை அடிக்கடி திட்டி வந்தார் என்று மைக்கேல் சொல்லியிருக்கிறார். இதன் காரணமாக முகப்பருக்கள் முளைக்கும் பதின்பருவத்தில் கண்ணாடி பார்ப்
பதைக்கூட கடுமையாக வெறுத்தவர் மைக்கேல். பிற்காலத்தில் பலவகையான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள் செய்து தன் முகத்தை சரி செய்ய அவர் முயன்றது இக்காரணத்தால் தான்.
1984-இல் குளிர்பானம் ஒன்றின் விளம்பரப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்பொழுது அவருக்கு ஒரு பெரும் விபத்து நிகழ்ந்தது. ஒரு காட்சியை ஐந்து முறை எடுத்த பின்னரும் திருப்தி வராத மைக்கேல் ஜாக்சன் அதை ஆறாவதாகவும் படமாக்க முயலும்போது வாணவேடிக்கை ஒன்று தலையில் பாய்ந்து மிகமோசமாக தீக்காயமடைந்தார். அவரது முகமும் முடியும் உச்சந்தலையும் கருகியது. பல வகையான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள் வழியாக அதை முற்றிலுமாக குணப்படுத்த சில ஆண்டுகளாகியது. 
இக்காலகட்டத்தில் ஏற்பட்ட கடுமையான உடல் வலிகளிலிருந்து தப்பிக்க அப்போது அவர் உட்கொண்ட பல வகையான வலி நிவாரண மாத்திரைகளுக்கு அவர் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையானார். பின்னர் நடனத்திலும் பல மணிநேரம் நீளும் மேடை நிகழ்ச்சிகளிலும் ஓயாமல் செயல்பட அவர் பல வகையான செயல் ஊக்கி மாத்திரைகளையும் உட்கொள்ள ஆரம்பித்து அவற்றுக்கும் அடிமையானார். பின்னர் தூக்கமின்மையும் பசியின்மையும் அவரது நிரந்தர பிரச்னைகளாக மாறியபோது அவற்றுக்காகவும் பல வகையான மாத்திரை மருந்துகளை உட்கொண்டார். ஆபத்தான அம்மருந்து
களும் அவை உருவாக்கிய உடலுபாதைகளும் அவரது கடைசி நாள் வரைக்கும் துரத்தியது. அறுவை சிகிச்சைக்கு முன் பூரண மயக்கத்திற்காக வழங்கப்படும் "ப்ரொபொஃபோல்' என்கின்ற திரவ மருந்துதான் அவரது மரணத்திற்கு காரணமானது. 
மைக்கேல் ஜாக்சன்  150 ஆண்டுகள் வாழ விரும்பினார். அதற்காக, தலைமுடி முதல் கால் வரை தினமும் பரிசோதிக்கும் 12 மருத்துவர்களை அவர் வீட்டில் நியமித்தார்.
அவரது உணவு எப்போதும் அவர் சாப்பிடுவதற்கு முன்பு ஆய்வகத்தில் சோதிக்கப்பட்ட பின்னரே அவருக்கு வழங்கப்பட்டது. தனது அன்றாட உடற்பயிற்சி மற்றும்  உடல் பராமரிப்புகளை மட்டும் கவனிக்க அவர் மேலும் 15 பேரை நியமித்தார். ஆக்ஸிஜனின் அளவைக் கட்டுப்படுத்த தொழில்
நுட்பத்துடன் கூடிய ஒரு நவீன படுக்கையைப் பயன்படுத்தினார்.
அவருக்காக தனிப்பட்ட முறையில் பாக்டீரியாக்கள், நச்சுக் கிருமிகள் இல்லாத ஆப்பிள், காய்கனிகள் உருவாக்கப்பட்டன.அவரது உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், உடனடியாக உடல் உறுப்புதான நன்கொடையாளர்களை அறுவை சிகிச்சைக்கு தயார் நிலையில் வைத்திருந்தார்.
மேலும் இந்த உடல்தான  நன்கொடையாளர்களின் அன்றாட செலவுகளை அவரே ஏற்றுக்கொண்டார். அவர் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற கனவுடன் முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் கடைசியில் அவரின் கனவு பலிக்காது தோல்வியடைந்தார். 25 ஜூன், 2009 அன்று, தனது 50 -ஆவது வயதில், அவரது இதயம் துடிப்பதை நிறுத்தியது.
25 ஆண்டுகளாக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஒருபோதும் ஒரு அடி கூட எடுத்து வைக்காத ஒரு நபர் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற தனது விருப்பத்தை கடைசியில் நிறைவேற்ற  முடியவில்லை. ஜாக்சனின் இறுதி ஊர்வலம் 25 மில்லியன் மக்களால் நேரடி ஒளிபரப்பு மூலம் பார்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com