வாழ வைக்கும் வாழை நார்!

படித்தது  என்னவோ  எட்டாவதுதான்...!  என்னால் இனி உன்னை படிக்க வைக்க இயலவில்லை...மகனே, எட்டாவது வரை படித்தது போதும்...
வாழ வைக்கும் வாழை நார்!

படித்தது என்னவோ எட்டாவதுதான்...! என்னால் இனி உன்னை படிக்க வைக்க இயலவில்லை...மகனே, எட்டாவது வரை படித்தது போதும்... இனி மாடு மேய்க்கப் போ என்று தந்தையால் படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஆனால் முருகேசனுக்கு முக்கியத் திருப்பம் பின்னாளில் வந்தது. இப்போது பிரதமர் மோடி முருகேசனின் திறமையைப் பாராட்டியிருக்கிறார்.

எப்படி சாத்தியமாயிற்று? யார் இந்த முருகேசன்?

வாழை நாரை இவர் மதிப்புக்கூட்டி பிரபலப்படுத்த, பதிலுக்கு "வாழை நார்' இவரை பிரபலப்படுத்தியிருக்கிறது. "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை இவரைப் பாராட்டிப் பேசி உலகம் முழுவதும் அறியச் செய்திருக்கிறார்.

இனி முருகேசன் தொடர்கிறார்:

""எனக்கு சொந்த ஊர் மேலக்கால் கிராமம். மதுரைக்கு அருகில் இருக்கிறது. வறுமையிலிருந்து விடுதலை பெறாத விவசாயக் குடும்பம். வருமானத்திற்காக மாடுகள், எருமைகளை வளர்க்க வேண்டிய கட்டாயம். ஒரு தருணத்தில் மாடுகளையும் எருமைகளை மேய்க்க என்னை பள்ளிக்குப் போவதிலிருந்து அப்பா நிறுத்தினார். மாடுகள் எருமைகள் தோழர்களாயினர். விவசாயத்தையும் தொழிலாக ஏற்றுக் கொண்டேன்.

""விவசாயத்தில் பழைய முறையைப் பின்பற்றாமல் புதுசா செய்யணும் ... விளைச்சலைக் கூட்டணும்..என்று மனம் யுக்திகளைத் தேடத் தொடங்கியது. ஆனால் மற்ற விவசாயிகள் பாரம்பரிய வேளாண்மை முறையில் பயணிப்பதையே விரும்பினார்கள். நெல் கதிர்களை அறுவடை செய்ய யந்திரம் அறிமுகமானபோது நான் அதை எனது வயலில் பயன்படுத்த விரும்பினேன். மனுஷங்க நெல் கதிர்களை அறுக்கிற மாதிரி மெஷின் அறுக்குமா..பயிர்கள் அழிந்துவிடும் என்று இதர விவசாயிகள் எதிர்த்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தி அந்தக் கருவி கொண்டு அவர்கள் முன்னிலையில் அறுவடையை குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் நான் செய்து முடிக்க.. நான் சொன்னதில் இதர விவசாயிகளுக்கு நம்பிக்கை வந்தது.

வயலில் எப்போதும் வழக்கமாக விதைக்கும் அரிசி வகைகளை மாற்றி புதிய ரகங்களை அறிமுகப்படுத்தினேன். ஆலோசனைகளுக்காக வேளாண்மைத் துறை அதிகாரிகளை அணுகினேன். விவசாயம் குறித்து சுற்றுவட்டாரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். அதனால் விவசாயம் குறித்த ஒரு புரிதல் என்னிடம் வந்து சேர்ந்தது.

வேளாண்மைத் துறை நடத்தும் கூட்டங்களில் கழிவுகளை மதிப்பு கூட்டி லாபம் ஈட்டும் யுக்திகள் குறித்து ஆலோசனைகளைச் சொல்வார்கள். வைக்கோலை பயன்படுத்தி காளான்களை விளைவிக்கலாம்... கரும்பு சக்கையை உரமாக மாற்றலாம்....என்று எடுத்துக்காட்டுகளை முன் வைப்பார்கள். இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்று எனக்கு அதிசயமாக இருக்கும்.

நாமும் இப்படி வித்தியாசமாக ஏதாவது செய்து காட்டணும் என்று முடிவு செய்தேன். அப்போது வயலில் வாழை பயிரிட்டிருந்தேன். வாழைகள் குலைத்தள்ளி தார்கள் வளர்ந்து பெரிதானதும் தார்களை வெட்டி எடுத்த பிறகு வாழை மரங்கள் ஒன்றுக்கும் உதவாது. வாழைகளை வெட்டி வயலிலிருந்து அகற்ற வேண்டும். அதற்கும் ஆகும் செலவு அதிகம். வெட்டிய மரங்களை எங்கே கொண்டு போடுவது? எப்படி அவற்றை அழிப்பது? பெரிய பிரச்னையாக என் முன் நின்றது.

வெட்டிய வாழைகளை உரித்து வாழைத் தண்டுகளிலிருந்து சாறு எடுத்து விற்கலாம் என்றால் எத்தனை பேர்கள் வாங்குவார்கள் என்ற சந்தேகம் எழ...அந்த எண்ணத்தைக் கை விட்டேன். சந்தைக்குச் சென்றிருந்தபோது பிளாஸ்டிக் இழைகளால் பின்னப்பட்ட வண்ண வண்ண பைகள் என்னைக் கவர்ந்தன. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அனைவரது கைகளிலும் இந்த பிளாஸ்டிக் இழைகளில் உருவாக்கப்பட்ட பைகள் இருந்தன. அதை விலைக்கு வாங்கி பையை எப்படி பின்னியிருக்கிறார்கள் என்று பார்த்தேன். சந்தையில் பிளாஸ்டிக் இழைகளால் பின்னப்பட்ட மிதியடி, கயிறும் விற்பனை ஆகிக்கொண்டிருந்தது.

வாழை நாறும் இயற்கையான இழைதான். பல நார்களை சேர்த்து பின்னினால் அது கயிறாக மாறும். ஆனால், பூக்களை கட்ட மட்டும்தான் வாழை நார் இழை ஓரளவிற்குப் பயன்படுகிறது. அதிகப்படியான வாழை மட்டைகள் மண்ணுடன் மக்கிவிடும். அல்லது காய்ந்ததும் எரிப்பார்கள். இந்த வாழை நாரில் ஏன் கயிறு, பைகள்,

கைவினைப் பொருள்கள் செய்யக் கூடாது என்று சிந்தித்தேன். தென்னை நார் கொண்டு கயிறு திரிக்கிற மாதிரி, வாழை நார்களைத் திரித்து பல தடிமங்களில் வாழை நார் கயிறுகளைத் தயாரிக்க வேண்டும். அப்படி திரிக்க கருவி வேண்டும். தென்னை மர நார்களைக் கொண்டு கயிறு திரிக்கும் கருவியில் வாழை நாரை திரிக்க முடியாது. பல இடங்களில் விசாரித்துப் பார்த்தேன். எங்கும் பொருத்தமான கருவி கிடைக்கவில்லை. இறுதியில் நானே தயாரிப்பது என்று முடிவு செய்தேன்.

தென்னை நார்களைக் கயிறாகத் திரிக்கும் கருவியை அடிப்படையாக வைத்து சைக்கிள் சக்கரத்தில் சில கொக்கிகளைப் பொருத்தி தயாரித்தேன். அதில் திரித்த வாழை நார் இழைகளைக் கொண்டு கடையில் சாமான்கள் வாங்கி வர பயன்படுத்தும் பை, பழக்கூடை, டேபிள் மேட், மிதியடி போன்ற பொருள்களை செய்து விற்பனைக்கு வைத்தேன். யாரும் வாங்கவில்லை. இறுதியில், சென்னை ஐஐடி வளாகத்தில் இயங்கும் "ரோப் இந்தியா' அமைப்பை அணுகினேன். இயற்கையில் கிடைக்கும் இழைகளைக் கொண்டு கைகளால் பின்னப்படும் அல்லது செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்தும் அமைப்புதான் "ரோப் இந்தியா'. இந்த அமைப்பினர் எனது பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார்கள். சில வாரங்களில் எனது பொருள்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. குறைந்த கால இடைவெளியில் எக்கச்சக்கமான வாழை நாரில் பொருள்களை உருவாக்க வேண்டும் என்ற சூழல் உருவானதால் கொஞ்சம் திணறிவிட்டேன்.

அதிகப்படியான கயிறு திரிக்கும் கருவிகளை அதிரடியாக உருவாக்கினேன். பணிக்கு அதிக நபர்களை பயிற்சி கொடுத்து நியமித்தேன். வங்கியில் கடன் பெற்று வேலை செய்ய கட்டடங்களை அமைத்தேன். 2009 - லிருந்து வர்த்தகம் சூடு பிடித்தது. பக்கத்து கிராமத்திலும் கிளை நிறுவனத்தை துவங்கியிருக்கிறேன். இப்போது முன்னூறு பேர்கள் என்னிடம் வேலை செய்கிறார்கள்.

கழிவு என்று ஒதுக்கப்பட்ட வாழை நார்களை நான் கொள்முதல் செய்வதால், வாழைத் தோப்பு வைத்திருப்பவர்களுக்கு உபரி வருமானம் கூடியுள்ளது. இன்னமும் வாழை நார்கள் இருக்கும் வாழை மட்டைகள் வீணாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தத் தொழிலில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி தர நான் ஆயத்தமாக இருக்கிறேன். வாழை நார்களால் செய்யப்படும் பொருள்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது'' என்கிறார் முருகேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com