எளிய மனிதனின் கோபம்!

""அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது.
எளிய மனிதனின் கோபம்!

""அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி ஒருவனை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. அதே நேரத்தில் இப்போது எது தேவையோ, அதை அக்கறையாக முன் வைக்கிற படம்.'' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடித்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் .  "ஆள்', "மெட்ரோ' என தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த கதை சொல்லி. இப்போது "கோடியில் ஒருவன்' படத்தின் மூலம் களம் காண்கிறார்.  

வசீகரமான தலைப்பாக இருக்கிறதே....

வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. இது அவ்வளவு உண்மை. நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனும், அவன் உலகத்தில் ஹீரோதான். அப்படி நான் சந்தித்த பல சுவாரஸ்யமான ஹீரோக்கள்தான் இந்தப் படத்தின் நாயகர்கள். கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம்.  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும்.  எளிய மனிதனின் உள் கோபத்தை, அரசியலை, அவனின் சமூகப் பார்வையை  முன் வைக்கிற கதை. இதுதான் இதன் சிறப்பு.

எப்படி இருப்பான்.... "கோடியில் ஒருவன்'....

வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனை சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது.  விஜய ராகவன் என்கிற தனி மனிதன். தன் அம்மாவே உலகம் என சார்ந்து இருக்கிற வாழ்வு. ஒரு சின்ன காதல் என  சாமானிய வாழ்க்கை.  நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வரும். எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம்.

இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். அதைக் கடக்கிற நேரத்தில் அவனுக்கு வந்து போகிற அனுபவங்கள்தான் முழுப் படமும். இதை இப்படி ரொம்பவே சுலபமாக சொல்லி விட்டுப் போகலாம். ஆனால், இதில் வருகிற அழுத்தம் எல்லாத் திசைகளுக்கும் உங்களைக் கொண்டு போகும். இன்றைக்கும் பாருங்கள்...  நமக்கு ஆகாத, பிடிக்காத ஒரு விஷயத்தை எங்கேயும், எந்த நிமிஷமும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மொத்தமாகவே, சகலத்திலும் ஊழல் என்கிற இடத்தில் வந்து இப்போது நின்றுக் கொண்டு இருக்கிறோம்.  சகித்துக் கொண்டால் வாழ்வு வசப்படும். பொறுமை இழந்தால், வாயைத் திறந்து, கண்கள் சிவந்து கேள்வி கேட்டால் அங்கேதான் பிரச்னை ஆரம்பம். அப்படி ஒரு கட்டம் விஜய ராகவனுக்கு வந்து விடுகிறது. சமூகத்தை  அள்ளி அணைக்கிற அவர், எதிரிகளைத் துள்ளி அடிக்கிறார். அதுதான் படம்.  அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது... நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்து கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை என்று ஒரு வரையறைக்குள் நாம் எல்லோரும் வரலாம். 

எப்படி பொருந்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி...

இந்தப் படத்தை ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறவர் செய்ய முடியாது. அதற்கு கீழ் இருக்கிறவர் செய்யவும் முடியாது. அப்போது என் தேர்வாக வந்து நின்றவர் விஜய் ஆண்டனி. கதை சொல்லப் போனேன். இடைவேளை வரை கேட்டதுமே, இதை நாம் சேர்ந்து செய்யலாம் என புன்னகைத்து நம்பிக்கை தந்தார் விஜய் ஆண்டனி. அதுவே என் முதல் நம்பிக்கை. கதையின் உணர்வை புரிந்துக் கொண்டு நடிக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். அதை அவ்வளவு நேர்த்தியாக கொண்டு வந்தார். கதை பிடித்து நடிப்பதை விட, அதை புரிந்து கொண்டு எனக்கு பலமாக நின்றார். விஜய் ஆண்டனிக்கு நன்றி. 

சும்மா ஒரு பார்வைக்கு வந்து விட்டு போகிற நடிகர் இல்லை அவர். அனுபவம் கூடி வந்து, அவருக்கே குறை நிறைகள் புரிந்து, தெளிந்து, நடிப்பதன் செளகரியம் அறிந்து கை கூடி வந்த நடிப்பு இது.  கதையின் தன்மைகளை, உணர்வை முழுமையாகப் புரிந்து கொண்டால் தவிர இத்தகைய நடிப்பு எட்டிப்பார்க்காது. இதை அருமையாக செய்து கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அடுக்கடுக்கான திருப்பங்களின் முடிவில் என்ன நடக்கும் என்பதுதான் நாம் காணப்போகிற விடை. அதை இயல்பாகக் கொண்டு வருவதற்கு அவர் அத்தனை உதவியாக இருந்தார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா.  முக்கிய கதாபாத்திரத்தில் ராமச்சந்திர ராஜூ, பூ ராம்,  சூப்பர் சூப்பராயன், திவ்ய பிரபா என நம்பிக்கையான நடிகர்கள். எல்லாமே சுபம்.

சமீப சினிமா வரவுகளில் சிறந்த கதை சொல்லியாக அறியப்படுகிறீர்கள்....

நன்றி... நல்ல சினிமாக்கள் பார்த்து வளர்ந்தவன். அப்படியே வளர்ந்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். எது சரி.... எது தவறு...என புரிந்து வைத்திருக்கிறேன். மற்றபடி எதுவும் என்னிடம் இல்லை.  நிவாஸ் கே. பிரசன்னா. அவர்தான் இந்தப் படத்துக்கு மியூசிக். நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அதுக்கு பதில் மரியாதையாக அதை செழுமையாக பயன்படுத்தியிருக்கோம். விஜய் ஆண்டனி சார் ஒரு எடிட்டராகவும் இதில் பணியாற்றியது மகிழ்ச்சி.  இதைச் செய்வதில் அனுபவம் கூடியவர்கள் உதவிக்கு வந்தார்கள்.  எல்லோருக்கும் நன்றி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com