இமயம் தொட்ட இட்லி சந்தை!

மக்களைக் கவர்ந்த இந்த இட்லி சந்தை அதிகாலை 3 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சுடச்சுட இயங்குகிறது.
இமயம் தொட்ட இட்லி சந்தை!

'20 ஆயிரம் இட்லிகள்

மக்களைக் கவர்ந்த இந்த இட்லி சந்தை அதிகாலை 3 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சுடச்சுட இயங்குகிறது. இட்லி சந்தையில் தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் இட்லிகள் வரை விற்பனையாகிறது. முகூர்த்த நாள்களில் 1 லட்சம் இட்லி கூட விற்பனையாகிறது.


தமிழகத்தில் ஆடு, மாடு, காய்கறி, பூக்கள், மளிகை என பல்வேறு சந்தைகள் இருந்தாலும் இட்லிக்கு என்று தனியாகச் சந்தை இருப்பது ஈரோட்டில் மட்டுமே. அரை நூற்றாண்டுகளாக ஈரோட்டின் புகழைப் பரப்பிவரும் இட்லி சந்தை ஈரோட்டின் மற்றொரு அடையாளமாக உருவாகியிருக்கிறது.

கருங்கல்பாளையம், திருநகர் காலனியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தயாரித்துப் பாத்திரத்தில் வைத்துத் தலைச்சுமையாக வீதிவீதியாகச் சென்று விற்பனை செய்யப்பட்ட, இட்லி வியாபாரம் இப்போது வெளிமாவட்டங்களில் இருந்தும் தேடி வந்து இட்லி வாங்கிச் செல்லும் அளவுக்கு வளர்ந்திருப்பதோடு இட்லிக்கு என்று தனிச் சந்தையாக 50 ஆண்டுகளுக்கு மேலாக மாறியுள்ளது.

விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த நாட்களில் இட்லி சந்தையில் கூட்டம் அலைமோதுகிறது. ஈரோடு மற்றும் அருகாமையில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடக்கும் திருமணம், கோயில் விழாக்கள் பலவற்றுக்கும் காலை உணவுக்கு இங்கிருந்துதான் இட்லி செல்கிறது. தவிர ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களுக்கு இட்லி சந்தையில் இருந்துதான் இட்லி விநியோகம் செய்யப்படுகிறது.

பள்ளி, கல்லூரி விடுதிகள், அரசியல் கூட்டங்களுக்கும் இங்கிருந்தே இட்லி அனுப்பி வைக்கப்படுகிறது. இட்லிக்குத் தொட்டுக்கொள்ளத் தேங்காய் சட்னி, காரச் சட்னி, குருமா என சைவம் மட்டுமே வழங்கப்படுவதால் சபரிமலை, பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட இட்லி சந்தையில் இட்லிகளைப் பொட்டலம் போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

60 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் இப்போதுள்ள இட்லி சந்தைக்குப் பின்புறமாகக் கால்நடை சந்தை நடந்து வந்தது. சந்தைக்கு வரும் வியாபாரிகள், கால்நடை வளர்ப்போருக்காக இட்லி கடை தொடங்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் தீபாவளி போன்ற விசேஷ நாள்களில் மட்டுமே வீடுகளில் இட்லி கிடைக்கும் பண்டமாக இருந்ததால் வெளியூர்களில் இருந்து மாட்டுச் சந்தைக்கு வரும் வியாபாரிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் இட்லியை விரும்பிச் சாப்பிட்டனர். இதனால் வியாபாரம் மெல்ல சூடுபிடித்து. இப்போது, அப்பகுதியில் மாட்டுச் சந்தை மறைந்து இட்லி சந்தை மட்டுமே நிலைத்து நிற்கிறது.

முதன்முதலில் இப்பகுதியில் இட்லி வியாபாரம் தொடங்கிய தனபாக்கியத்துக்கு இப்போது 82 வயதாகிறது. தனபாக்கியத்தின் மகள், பேரன் என 3-ஆவது தலைமுறையாகத் தொடர்ந்து இட்லிக் கடையை நடத்திவருகின்றனர்.

தனபாக்கியத்தின் பேரன் எல்.கார்த்திக்கிடம் கேட்டோம்: இட்லி வியாபாரத்தை என் அம்மாயி(பாட்டி) தனபாக்கியம் 20 வயதில் தொடங்கினார். 60 ஆண்டுகளாக எங்க குடும்பத்துக்கு இதுதான் தொழில். சட்னி, குருமாவோடு சேர்ந்து ஒரு இட்லி ரூ.6. இட்லி மட்டும் தனியாக ரூ.3.50க்கு விற்பனை செய்கிறோம். கூடையில் வைத்து வியாபாரம் செய்த பாட்டி தனபாக்கியம் இங்குக் கடைத் தொடங்கி 40 ஆண்டுகள் ஆகின்றன. பாட்டியின் மகள்கள் 3 பேர் உள்பட இப்பகுதியில் 10 இட்லிக் கடைகள் நடத்துகின்றனர்.. அனைத்துக்கும் விதை பாட்டி தனபாக்கியம் போட்டது தான்.

எங்க கடையில காலையும், மாலையும் சேர்த்து சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் இட்லி விற்பனையாகுது. விசேஷ நாள் மூணு மடங்கு அதிகமாக விற்பனையாகும். அரிசி, உளுந்து, கடை வாடகை, மின்கட்டணம், ஆட்கள் கூலினு எல்லா செலவும் போக ஒரு நாளைக்கு ரூ.ஆயிரம் மிச்சமாகும்.

பொன்னி அரிசி, ஐஆர் 20, இட்லி அரிசி, சாதா உளுந்து, ஆமணக்கு இதைத்தான் நாங்க பயன்படுத்துறோம். விறகு அடுப்புலதான் இட்லியை வேக வைக்கிறோம். 20 கிலோ அரிசியை அரைச்சா ஒரு அண்டா மாவு கிடைக்கும். இதுல 800 இட்லி வரை அவிக்கலாம்.

காலை 4 மணிக்கே சந்தையில் சுடச்சுட இட்லி கிடைக்கும். அனைத்துத் தரப்பு மக்களும் இங்கு வந்து சாப்பிட்டு போவாங்க, பார்சலும் வாங்குவாங்க. இங்கு டோர் டெலிவரி கிடையாது. ஒருமுறை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அன்னதானத்துக்குக் கோயில் வளாகத்தில் 1 லட்சம் இட்லி அவித்துக்கொடுத்தோம். இப்போதும் திருமண ஆர்டர்களுக்கு மண்டபத்துக்குச் சென்றே இட்லி அவித்துக்கொடுத்து வருகிறோம். திருமண ஆர்டர்களில் 5ஆயிரம் முதல் 30 ஆயிரம் இட்லி வரை அவித்துக்கொடுப்போம்.

எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவிலேயே இங்க மட்டும்தான் இட்லிக்குனு சந்தை இயங்கிட்டு இருக்கு. மலேசியாவுல உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது பாரம்பரிய தமிழர் உணவான இட்லியை பரிமாற விரும்பினாங்க. இதுக்காக எங்கள்ல சிலரை மலேசியாவுக்கு அவங்களே செலவழித்து அழைச்சிட்டு போனாங்க.

அதே மாதிரி பல இடத்துல இட்லிக் கடை போடச் சொல்லி கூப்பிடுறாங்க. மும்பையில் தமிழர்கள் பெருமளவு வாழும் தாராவியில கூட கடை நடத்தச் சொல்லி கேட்டாங்க. இதுக்கெல்லாம் காரணம் தரம், சுவை, சுகாதாரம் தான். தரத்துல குறைஞ்ச அரிசி, உளுந்தை நாங்க அரைக்கறது இல்லை.

விறகு அடுப்பிலேயே இட்லி கடை செயல்பட்டு வருவதை நேரில் பார்த்த பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தினர் எரிவாயு அடுப்புகளை அமைக்கும் கட்டமைப்பு உருவாக்கி தருவதாக கூறியுள்ளனர்.

இப்போது உள்ள விலை 6 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதனால் தனி இட்லி ரூ.4 ஆகவும், சட்னி, குருமாவுடன் இட்லி ரூ.6.50க்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். விலை உயர்வு ஓரிரு மாதங்களில் அறிவிக்க இருக்கிறோம்.

இட்லி வகைகள் ஏராளம்: இட்லிக் கடை நடத்தி வரும் காந்திமதி, மல்லிகாவிடம் பேசிய போது சொன்னார்கள்:

""பொதுவாக வீடுகளில் இட்லிக்கு மாவு அரைக்கறப்ப வெந்தயம் சேர்ப்பாங்க. ஆனா, நாங்க வெந்தயத்துக்குப் பதிலா ஆமணக்கு சேர்க்கறோம். இதனால துணில இட்லி ஒட்டறதில்லை. பூ போல உதிராம மெத்து மெத்துனு இருக்கும்.

குஷ்பு இட்லி, கப் இட்லி, ஹார்ட்டின் இட்லி, இளநீர் இட்லி, சுண்டல் இட்லி, புதினா மசாலா வைச்ச சான்ட்விச் இட்லி, சீரகம் மிளகு கொத்தமல்லி சேர்ந்த காஞ்சிபுரம் இட்லினு எல்லா வகையான இட்லியும் இங்கே கிடைக்கும். ஒருபோதும் பழைய மாவு, புளிச்ச மாவில் இட்லியைத் தயாரிக்க மாட்டோம். அதே மாதிரி காலைல மிச்சமான இட்லியை மாலையில் விற்க மாட்டோம். எப்பவும் சுடச்சுட இட்லி கிடைக்கும்'' என்றார்.

படங்கள் ஆர்.ரவிச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com