சமூக நீதிக்கான தேவை
By DIN | Published On : 21st March 2021 06:00 AM | Last Updated : 21st March 2021 06:00 AM | அ+அ அ- |

நிதிதா திரைக்களம் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம் "தொடரும்.' மாதேஷ், கனிஷ்கா, சித்து, ஹேமா, ஜீவிதா, ஊமை ஜெயராமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை மாரி கருணாநிதி இயக்குகிறார். "" தற்கால உயர்கல்வி, விவசாயம், தற்கொலை. மூட நம்பிக்கை, சாதிமறுப்புத் திருமணம் என இந்த கதை பேசப் போகும் விஷயங்கள் ஏராளம். இன்றைய கல்வி முறை என்பது சமூக சிக்கல்களைக் கலைவதற்கான ஆயுதமே தவிர, அதுவே வாழ்க்கை இல்லை என்பது இந்தப் படத்தின் முக்கிய கரு. உயர் கல்வி வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படும் மாணவர்களின் போர் குரலாகவும் சமூக நீதிக்கான தேவையை முன்னிறுத்தியும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறேன்.
பசியைத் தீர்ப்பது ஒரே கனிதான். ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம். பசியும் ஆசையும் உயிர்களை ஒரே பாதையில் துரத்திக் கொண்டே இருப்பது ஏன்... என்ற கேள்விதான் அவ்வப்போது பிரதானமாக எழும். சோமாலியாவில் பசியால் சாகக் கிடக்கும் குழந்தையைத் தின்னக் காத்திருக்கும் அந்த கழுகையும் காட்சியையும் புகைப்படம் எடுத்தவர், அந்தக் குற்ற உணர்விலேயே மனம் மாறி தற்கொலை செய்து கொள்கிறார். சுமார் 5 ஆயிரம் வருடங்கள் தமிழினம் போர்ச் சூழல் இல்லாமல் வாழ்ந்ததற்கு விவசாயமே அடிப்படை. உலகின் ஆதி இனம்... விதைத்து, அறுத்து, உழைத்துத் தின்னும் கலாசாரத்தை உருவாக்கிய இனத்தை... நிலம் இழந்த துயரப் பரப்புகளில், பசியின் உதிரம் பெருகப் பெருக அலைய விட்ட வரலாற்றை எந்தச் சாபம் தண்டிக்கப் போகிறது. முக்கியமான தேவை என்பது நீர் ஆதாரம்தான். விவசாயிக்கு வேறு எதுவுமே தேவையில்லை. தண்ணீர் தந்தால் போதும், அவன் தற்சார்பு மனிதனாக மாறி விடுவான். இப்படியொரு முக்கிய விஷயம் இதில் பேசு பொருளாக இருக்கும்'' என்றார் இயக்குநர். படம் வரும் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...