உயிர் சுவாசமான.. திருக்குறளின் நேசிப்பு!

சென்னை அண்ணா நகரில் வசிப்பவர் வெற்றிவேல். டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகப்பணியாற்றி வருகிறார்.
உயிர் சுவாசமான.. திருக்குறளின் நேசிப்பு!


சென்னை அண்ணா நகரில் வசிப்பவர் வெற்றிவேல். டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகப்பணியாற்றி வருகிறார். தனது வீட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தங்கள் மற்றும் ஐந்தாயிரம் இதழ்களை பத்திரமாக பாதுகாத்து வருகிறார். படிக்கும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களுக்கும் உதவி வருகிறார். உலக புத்தக தினத்தையொட்டி வெற்றிவேலிடம்,  புத்தக சேகரிப்பு குறித்து  மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்ட போது சொன்னார்:

திருக்குறள்

""1982-ஆம் ஆண்டு முதுகலை தமிழ் இலக்கியம் படித்து கொண்டிருந்த போது பள்ளி மாணவி ஒருவர் 1330 திருக்குறள்களையும் மனப்பாடமாகச் சொன்னார் என்ற செய்தியை பத்திரிகையில் படித்தேன். அப்போது தான் நாமும் ஏன் அது போல மனப்பாடம் செய்யக்கூடாது என்று நினைத்தேன். உடனடியாக செயலில் இறங்கினேன். படிக்கப் படிக்க ஆர்வம் பெருகி சில மாதங்களிலேயே அத்தனை திருக்குறள்களையும் மனப்பாடம் செய்துவிட்டேன். ஒரு அதிகாரத்தில் உள்ள திருக்குறளின் எண்ணைச் சொன்னால் அந்தக் திருக்குறளை கூறுவது, என எப்படிக் கேட்டாலும் திருக்குறளைச் சொல்வேன். இது தவிர திருக்குறளுக்கு ஒரு வரியில் உரையெழுதி நூலாக வெளியிட்டு உள்ளேன். திருக்குறள் பெருமை கூறும் நான்கு புத்தகங்களையும் எழுதியுள்ளேன். இந்த அடிப்படையிலேயே எனக்கு திருக்குறள் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளாக திருக்குறளே உயிர் சுவாசமாக கொண்டு பலருக்கும் பயிற்றுவித்து வருகிறேன். 

எம்.ஜி.ஆர் கையெழுத்து

மதுரையில் நடைபெற்ற தமிழ் சங்க விழாவில் நான் பேசியதை பாராட்டி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கையெழுத்திட்டு வழங்கிய நூலை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அவரது நினைவாக எனது இதழியல் ஆவணக் காப்பகத்துக்கு "எம்.ஜி.ஆர் இதழகம்' என் பெயரிட்டுள்ளேன். இது தவிர தலைவர்களின் கையெழுத்து, திருமண பத்திரிகை அரசியல் நிகழ்வுகளை சேகரித்து வைத்துள்ளேன். 

சவாலான இதழ்கள் சேகரிப்பு

அரசியல், சினிமா, இலக்கியம், கலை, மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் என ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட இதழ்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை சேமித்து பாதுகாப்பது பெரும் சவாலாக உள்ளது. 
நான் சேகரித்துள்ளேன் என்பதை விட நாங்கள் சேகரித்துள்ளோம் என்பதே பொருத்தமானது. என்னை விடவும் என்னுடைய மனைவி,  மகளுக்கு ஆர்வமும் அக்கறையும் அதிகம் என்று சொல்லலாம்.

கஷ்டப்பட்டு சேர்த்த புத்தகங்களை செல்லரித்துப் போய்விடாமல் இருக்க மாதம் ஒரு முறை வாக்குவம் கிளீனரில் கற்பூரத்தூளைப் போட்டு புத்தகங்களின் மீது தெளித்து பூச்சிகள் வராமல் பார்த்து கொள்கிறோம். என் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட பீரோக்களில் துணிகளுக்கு பதிலாக புத்தகங்களை வைத்து பாதுகாத்து வருகிறேன். 

நாங்கள் குடியிருக்கும் வீட்டிலும், தாம்பரத்திலுள்ள எனது மாமனார் வீட்டிற்கு ஒரு லாரி புத்தகத்தை அனுப்பி அங்கு வைத்து பராமரித்து வருகிறோம். புத்தகங்களைப் பாதுகாப்பதில் பூச்சிகள், எண்ணிக்கை மிகுதியாதல் எனும் சங்கடங்களைத் தாண்டி தண்ணீரிலிருந்து பாதுகாப்பது பெரிய பணியாக உள்ளது. 

வாழ்க்கையை மேம்படுத்தும் வாசிப்பு

இன்றைய இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. வாசிப்பு வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்தும். இன்று இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அவர்களுக்கு கையருகே உலகம் காத்திருக்கிறது.  அவர்கள் வளர வேண்டுமென முயற்சித்தால், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் நோக்கில் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம். இளைஞர்கள் தங்களுக்கான தனித்திறமை என்னவென்று அடையாளம் கண்டு கொண்டு, வெற்றியை நோக்கி ஓரடி முன் வைத்தால், உலகம் முன்னோக்கித் தள்ளவும் வளர வைக்கவும் காத்திருக்கிறது'' என்கிறார் வெற்றிவேல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com