நூற்றாண்டைக் கடந்த கவிஞர் திருச்சி தியாகராஜன்

இந்தியாவின் முதல் குடியரசு தினத்தில் நடைபெற்ற விழாவில், அனைத்து மாநிலத்தையும் சேர்ந்த இசைக் கலைஞர்கள்.
நூற்றாண்டைக் கடந்த கவிஞர் திருச்சி தியாகராஜன்


இந்தியாவின் முதல் குடியரசு தினத்தில் நடைபெற்ற விழாவில், அனைத்து மாநிலத்தையும் சேர்ந்த இசைக் கலைஞர்கள். அவரவர் மொழியில் ஒரு பாடலைப் பாடினார்கள். தமிழ்நாடு சார்பாக எம்.எம்.தண்டபாணி தேசிகர் "இன்பவனம் ஒன்றுள்ளது எல்லோரும் வாருங்கள்' என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் திருச்சி தியாகராஜன். 

திருச்சிராப்பள்ளிக்கும் திரையுலகிற்கும் எப்பொழுதுமே ஒரு பந்தமுண்டு. சினிமா பாடலாசிரியர் திருச்சி டி.வி.நடராஜ ஆச்சாரியார், சினிமா பாடலாசிரியர் தங்கவேல் என்ற திருச்சி பரதன், கவிஞர் வாலி (ஸ்ரீரங்கம்), இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் (பிச்சாண்டார் கோயிலில்), இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா, இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி, பாடகர் திருச்சி லோகநாதன், நடிகர் ரஞ்சன் (லால்குடி), நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் (திருக்காம்புலியூர்), நடிகர் (அமைச்சர்) திருச்சி செளந்தரராஜன்,  டி.ஏ.மதுரம் (ஸ்ரீரங்கம்), ஆகியோருடன் பாடலாசிரியர் திருச்சி தியாகராஜனும் இப்பட்டியலில் இணைகிறார். காவிரிக் கரையிலிருந்து திரைத்துறைக்கு வந்த திருச்சி தியாகராஜன் பிறந்தது 27 - 03 - 1920- இல். 

தனது படிப்பு முடிந்ததும் கவிஞர் தியாகராஜன் பம்பாய் கடற்கரை பிரிவில் வைசிராய் கமிஷண்ட் அலுவலர் பணியில் இருந்தார். இப்பணி பிடிக்காமல், பம்பாயிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு திரும்பி, சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். அடுத்ததாக 1958- இல் கவிஞர், தான் ஆற்றி வந்த ரயில்வே குமாஸ்தா பணியிலிருந்து கட்டாய பணி ஓய்வு பெற்றார். அதாவது, கவிஞரின் குணங்களுக்கு ஏற்ற பணிகள் கிட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. 

திருப்பதி வெங்கடாசலபதியைப் பற்றி பாடல்கள் எழுதும்படி ஹெச்.எம்.வி. கம்பெனியிடமிருந்து அழைப்பு வந்தது. ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடும் விருப்பமும் இல்லாத காரணத்தால் அந்த வாய்ப்பை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

ராதாகிருஷ்ணன் பிள்ளை, டி.கே. லட்சுமணன் போன்றவர்களிடம் கர்நாடக சங்கீதத்தை கற்றார் இவர். சிதம்பரம் ஜெயராமனின் உறவினரும் திருவையாறு இசைக் கல்லூரியின் முதல்வருமாகிய ஒரு பிரபலம், திருச்சியாரை தண்டபாணி தேசிகரிடம் அறிமுகப்படுத்தினார். நல்ல குரல் வளமும் கர்நாடக சங்கீதம் அறிந்தவருமான தியாகராஜன், சிந்துபைரவி ராகத்தில் எழுதிய தமது "தாமரை பூத்த தடாகமடி' என்ற புகழ் பெற்ற தனிப்பாடலை தேசிகரிடம் பாடிக் காட்டி, தேசிகரின் பாராட்டை பெற்றார். 

இசையருவி (பாகம் -1), இசையருவி (பாகம் - 2), கலை விருந்து, சிந்தனைச் செல்வம், வெளிச்சம், செங்கீதங்கள், ஆறறிவின் அவலங்கள், சமுதாய சாட்சி - ஆகிய நூல்களை எழுதியுள்ளார் இக்கவிஞர். 1950-இல் கவிஞர் தனது 76 இசைப் பாடல்களின் தொகுப்பாக "இசையருவி' என்ற நூலை வெளியிட்டார். கம்யூனிச சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட இசைப் பாடல்களின் தொகுப்பாக "செங்கீதங்கள்' என்ற நூலையும் எழுதினார். தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில், காமராஜரின் தலைமையில் 06 - 01 - 1974 அன்று கவிஞரின் "வெளிச்சம்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. முதல்பிரதியை சிவாஜி கணேசன் பெற்றுக் கொண்டார். 

இவருடைய இசைப் பாடல்கள்; ஆகாஷ்வாணி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, லண்டன் பி.பி.ஸி. போன்ற வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

தமது உறவுக்கார பெண் சாந்தி என்பவரை கவிஞர் மணந்தார். பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும், சென்னையின் உதவி மேயருமான தெய்வசிகாமணியின் தங்கை நவநீதம்மாளின் மகள்தான் இந்த சாந்தி. தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் இவருக்கு 1971- இல் "கலைமாமணி' விருது அளித்து  கெளரவித்தது. 

தனது அண்ணன் ராஜுப் பிள்ளையின் மகன் கிருஷ்ணன், காமராஜரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார் என்பதில் கவிஞருக்கு ஒரு மகிழ்ச்சியும் பெருமிதமும் உண்டு. 1967- இல் நடைபெற்ற தேர்தலில் காமராஜர் தோற்றதும், காமராஜர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி யில் இணைந்தார் கவிஞர். தோல்வியை சந்தித்த கட்சியில் சேர்ந்த, கவிஞரின் மன உறுதியை காமராஜர் பாராட்டினார். காங்கிரஸின் ஓர் அங்கமாக "தேசிய சிந்தனையாளர் மன்றம்' என்ற அமைப்பு செயல்பட்டது. இந்த மன்றத்தின் தலைவராக கவிஞர் தியாகராஜனும் செயலாளராக "தீபம்' நா.பார்த்தசாரதியும் செயல்பட்டார்கள்.  

காமராஜரின் மறைவிற்குப் பின்பு தமிழக காங்கிரஸ் சிதறு தேங்காய் போல் ஆனது. மூப்பனார், நெடுமாறன், குமரி அனந்தன், 

பா.ராமச்சந்திரன், ஆகிய காங்கிரஸ் பிரபலங்கள் ஆளுக்கொரு பாதையில் சென்றார்கள். இந்த சூழ்நிலையில் கவிஞர் பொதுவுடமை கட்சியில் இணைந்தார். பின்பு கொள்கை முரண்பாடு காரணமாக கம்யூனிச இயக்கத்திலிருந்தும் கவிஞர் விலகினார். இவர் 1959 முதல் 1974 வரையிலான 15 ஆண்டுகளில் 21 படங்களில் மொத்தம் 37 பாடல்கள் எழுதியுள்ளார். 

19 - 05 - 2002 - இல் கவிஞர் இயற்கை எய்தினார். 

சிந்தையைக் கவர்ந்த திருச்சியார் பாடல்கள்:
செங்கமலத் தீவு - மலரைப் பரித்தாய் தலையில் வைத்தாய்
செங்கமலத் தீவு  - சிந்தித்தால் சிரிப்பு வரும் 
உல்லாச பயணம் - (ஆண்டுக்கு மாதங்கள்) சித்திரைப் பெண்ணே 
உல்லாச பயணம் - போடா போடா பைத்தியமே 
நானும் மனிதன்தான் - இந்தா இந்தா நில்லு 
தாழம்பூ - வட்டவட்ட  பாத்தி கட்டி 
வாலிப விருந்து - எங்கே எங்கே என் மனது 
செல்வியின் செல்வன் - நான் உங்களைக் கேட்கிறேன்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com