கவனம் ஈர்த்த மலையாள சினிமாக்கள் !
By -ஜி.அசோக் | Published On : 16th May 2021 06:00 AM | Last Updated : 16th May 2021 06:00 AM | அ+அ அ- |

இந்திய அளவில் மலையாள சினிமாக்களுக்கென தனி ரசிகர்கள் வட்டம் உண்டு. தரமான சினிமாக்கள் எங்கிருந்து வருகின்றன என்பதற்கு இன்னும் அடையாளம் காட்டப்படும் இடமாக கேரளம் இருக்கிறது. இந்த கரோனா காலத்தில் மலையாளத்தில் சமீப காலங்களில் வெளியான எந்தெந்த சினிமாக்களை ரசிகர்கள் தேர்வு செய்து பார்க்கலாம்... இதோ குட்டி ட்ரெய்லர்!
நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா சாந்தி கிருஷ்ணனுக்குப் புற்று நோய், இதை வீட்டினருக்குத் தெரியப்படுத்திவிட்டு சிகிச்சை எடுக்க ஆரம்பிக்க வேண்டும் என கணவர் சாக்கோவுடன் சேர்ந்து முடிவெடுக்கிறார். இதுதான் படம் முழுக்க நடக்கும். அதை அழுது வடிந்து கொண்டும் எடுக்க முடியும், மிக சகஜமாக ஒரு மென்மையான சிரிப்பை வரவழைக்கும் படியும் எடுக்க முடியும். இயக்குநர் அல்தாஃப் சலீம் இரண்டாவது முறையில் படத்தைக் கொடுத்திருந்தார். படத்தில் யாருக்கும் முதன்மை கொடுக்காமல் ஒவ்வொரு கதாபாத்திரங்களாகக் கையாண்டிருந்தது, அறிவுரை, நேர்மறை எண்ணங்கள் கொண்ட ஆகச் சிறந்த சினிமா. மிக இயல்பாக நகரும் கதை ஓட்டத்துக்காக இந்தப் படத்தை மலையாள சினிமா உலகம் கொண்டாடி தீர்த்தது.
மாயாநதி
மாத்தன், அபர்ணா இருவரும் காதலர்கள், ஆனால் பிரிந்துவிட்டார்கள். மாத்தன் மதுரையில் சட்டத்துக்குப் புறம்பான வேலைகள் செய்யும் ஒருவரிடம் வேலை செய்கிறான். அப்படி ஒரு வேலைக்காக செல்லும் இடத்தில் பிரச்னையாகிவிட சொந்த ஊருக்குச் செல்கிறான். இப்போது மறுபடி அபர்ணாவை சந்திக்கிறான். அடிக்கடி சந்திக்கிறான். இந்த சமயத்தில் மதுரையிலிருந்து மாத்தனைத் தேடி போலீஸ் வருகிறது. போலீஸின் தேடலையும், அபர்ணா - மாத்தன் இடையிலான ஊடலையும் வைத்து "மாயாநதி' ஓடும். இயக்குநர் ஆஷிக் அபு சிறந்த இயக்குநர்களின் பட்டியலிலும் இணைந்து கொண்டார். எந்த செயற்கையும் இல்லாமல், நீங்கள் எதிர்பார்ப்பதே தான் நடக்கும். ஆனால் அது உங்களுக்கு நிறைவையும் கொடுக்கும் என்பதுதான் "மாயாநதி" படத்தில் நடந்த மேஜிக்.
டேக் ஆஃப்
குடும்பத்தின் பணத் தேவைக்காக ஈராக் செல்லும் பெண், அவளது திருமண சூழல், சென்ற இடத்தில் அவளுக்கு நேரும் சிக்கல், அங்கிருந்து தப்பித்தல் என அட்டகாச சினிமாவாக வந்தது "டேக் ஆஃப்'. 2014-ஆம் ஆண்டு நடந்த நிஜ சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான படம் என்பதால் ரசிகர்களுக்கு நெருக்கமான உணர்வையும் கொடுத்தது. கூடவே பார்வதி அழகான நடிப்பைக் கொடுத்திருந்தது படத்துக்கு மிகப் பெரும் பலமாக அமைந்திருந்தது. படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயண் தன்னை சிறந்த இயக்குநராக அறிமுகம் செய்தும் கொண்டார். சமீப ஆண்டுகளில் சிறந்த படமாகவும் ஜொலிக்கிறது "டேக் ஆஃப்".
அங்கமாலி டைரீஸ்
அங்கமாலியின் சில இளைஞர்கள், அவர்களின் தினசரி நடவடிக்கைகள் என அங்கமாலியின் அத்தனையும் தான் படம். வின்சென்ட் பீப்பேதான் கதையின் நாயகன். அவன் சந்திக்கும் பெண்கள், அவன் பார்க்கும் தொழில், அது சார்ந்து நடக்கும் பிரச்னைகள், அவனைச் சுற்றிய நண்பர்கள், அங்கமாலியின் உணவு இவ்வளவு தான் கதை. ஆனால், ஒவ்வொரு காட்சியையும் அமர்க்களப்படுத்தி செம்பன் வினோத் எழுதியிருந்த கதையை, அச்சுக் குலையாமல் படமாக்கியிருந்தார் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி. மலையாள சினிமா விரும்பிகள் எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாத படம் இது.
தொண்டி முதலும் த்ரிக்ஷாக்ஷியும்
ஃபகத் பாசில் எனும் கலைஞனை நீங்கள் ஒரே படத்தில் உணர "தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்ஷியும்' போதும். படத்தில் ஃபகத் ஒரு திருடன். ஒரு பேருந்து பயணத்தின் போது, நிமிஷா சஜாயனிடமிருந்து செயினை திருடி விடுவார். நிமிஷாவும், சுராஜும் வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்து கொண்ட ஜோடி. ஃபகத் திருடியதையும், நகையை விழுங்கியதையும் பார்த்த ஒரே நபர் நிமிஷா மட்டுமே. ஆனால், அடித்து நொறுக்கியும் ஃபகத் தான் திருடவில்லை என நிலையாய் இருக்கிறார். இனி என்ன நடக்கிறது என்பதுதான் கதை. படம் முழுக்க உங்களை அசத்த அத்தனை காட்சிகள் இருக்கும்.
ஒழிவுதிவசத்தே களி
இது படமில்லை. அதில் ஒரு சினிமாவாக நாம் காணக்கூடிய எந்தத் திருவிழா கோலாகலமும் இல்லை. நமது கண்களைப் பார்த்துக்கொண்டு ஒரு நடிகனோ, நடிகையோ சவால் வைக்கவில்லை, அல்லது உதடு நனைக்கவில்லை. அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த ஒரு பாஷையில் தங்களிடம் உள்ள ஒரு கதையைத் தங்களிடம் இருந்த சொற்ப காசில் படமெடுத்துக் காட்டி பாராட்டுகளை வாங்கிப் போனார்கள். "காளி ஆட்டம்' என்கிற சிறு தொகுப்பில் இந்தக் கதை இருக்கிறது. தமிழில் மொழிபெயர்த்தவர், சுகுமாரன். பாசில் ஜோசப் எனும் இயல்பான ஓர் இயக்குநரை இதில் காணலாம்.
கன்யகா டாக்கீஸ்
அன்றாடம் புரண்டு வருகிற செய்திப் பிரவாகங்களில் நாம் தித்திப்புடன் சப்புக் கொட்டுகிற தீமைகள் யாவும் காமத்தின் மறுசுழற்சிதான். "கன்யகா டாக்கீஸ்" முடிந்து போகிற ஒரு செக்ஸ் பட தியேட்டரைப் பற்றிய படம். அதேநேரம், அது அந்தக் கிராமத்தைப் பற்றிய, ஊரை உலகை மனிதர்களைப் பற்றிய படம்.
முரளி கோபியின் நடிப்புக்கு சிறந்த உதாரணமாக இப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். நடிப்பதற்கான எவ்வளவோ தருணங்கள் படத்தில் அவருக்காக இருந்தன. முழுக்கவே இயக்குநரின் படம். ஒவ்வொரு பிரேமும் ஒவ்வொரு ஐடியாவைக் கொண்டிருக்கிறது என்பதைப் படம் நெடுகப் பார்த்தவாறு இருக்கலாம். இயக்குநர் மனோஜ் தவிர்க்க முடியாத கதை சொல்லியாக உருவெடுத்தார்.