தெரியுமா?...

வ.உ.சி யின் குழந்தைகளில் கடைசியாகப் பிறந்தவர் "வாலேஸ் வரன்'
தெரியுமா?...


வ.உ.சியும் வாலேஸ்வரனும்


வ.உ.சி யின் குழந்தைகளில் கடைசியாகப் பிறந்தவர் "வாலேஸ் வரன்'

வ.உ.சி பேரனாகிய செல்வராமனின் அப்பாவான வாலேஸ்வரனுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று மற்றொரு பேரனாகிய சிதம்பரநாதன் கூறினார்.

சுவையாக இருந்தது அந்த விஷயம் சென்னையில் மயிலாப்பூரில் உள்ள சப்த சிவஸ்தலங்களான கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் ஆகிய பெயர்களில் ஒன்றான வாலீஸ்வரர் பெயரை வைத்திருப்பாரோ என்று எண்ணியிருந்த வேளையில், அவர் பெயர், வாலீஸ்வரன் அல்ல; வாலேஸ் வரன் என்று உரைத்தது.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வ.உ.சி, வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், சட்டம் பயின்ற அவர் வழக்கு மன்றம் ஏறாமலிருக்கும்படி அவரது "சன்னத்'தைப் பறித்தும் ஆங்கிலேய அரசாங்கம் அவருக்குத் தண்டனை அளித்தது. பின்னர் ஒரு நாள் அவரது சிறைத் தண்டனையைக் குறைத்தும் அவர் மீண்டும் வக்கீல் தொழிலில் ஈடுபடவும் வகை செய்து ஒரு ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் பெயர் "வாலஸ்'. அவர் நினைவாக வ.உ.சி அவர்கள் தனது கடைசிக் குழந்தைக்கு இட்ட பெயர்தான் "வாலேஸ்வரன்'.

இட்லி கவிதை


கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை லயோலா கல்லூரியின் தமிழ் மன்றத்தில் உரையாற்றச் சென்றிருந்தார். விழா துவங்கு முன்பாக, மாணவர்கள், கவியரசருக்கு தங்கள் கல்லூரி உணவு விடுதியில் சிற்றுண்டி வழங்கினார்கள்.
சூடாக இருந்த இட்லியைக் கவியரசர் விரும்பிச் சுவைத்தார்.

மாணவர்களில் ஒருவர்,"ஐயா நீங்கள் எதைப் பற்றியும் கவிதை எழுதுவீர்கள் இல்லையா?' என்று கேட்கவும், கவியரசர், ஆமாம்'என்று பதில் சொன்னார்.

உடனே, அந்த மாணவர், "எங்கள் விடுதி இட்லியைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் ஐயா!' என்றார்.

சட்டென்று அடுத்த நொடியே கவியரசர் இப்படிச் சொன்னார்:

இட்டிலியே ஏன் இளைத்துவிட்டாய்? - எவனைஇங்கே நீ காதலித்தாய்?

அதுதான் கவியரசர்!

கவிஞர் வாலியின் குறும்பு

"உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர் வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்' என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது.. ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா?' என்றார். எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சமாதானம் அடைந்தார்..!

நான் சின்னக் கவிஞன்


மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் ஒருமுறை நிருபர்கள் கேட்டனர்..

அய்யா.. தமிழ்ப் புலவர்கள் எல்லாம் கம்பன், இளங்கோ, வள்ளுவர் என சிறிய பெயராக வைத்திருந்தார்கள்.. நீங்கள் இவ்வளவு பெரிய பெயராக வைத்துள்ளீர்களே..?

அவர்கள் எல்லாம் பெரிய கவிஞர்கள்.. சிறிய பெயராக வைத்திருந்தனர்.. நான் சின்னக் கவிஞன்.. பெயராவது பெரிதாய் இருக்கட்டுமே..!


கேட்டு சாத்தறான்


கலைவாணர் காரில் சென்றுகொண்டிருக்கும் போது இருப்புப்பாதை கதவை சாத்திக்கொண்டிருந்தார்கள்.. உதவியாளர் ஓட்டுநரை விரைவு படுத்தும் நோக்கில் " கேட்டு சாத்தறான்.. கேட்டு சாத்தறான்.." என்று கத்தினார்..

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த கலைவாணர் சாந்தமாக, "ஏன்யா கத்துறே.. கேட்டுதானே சாத்துறான்.. உன்னை கேட்காம சாத்தியிருந்தா கோவப்படலாம்.. கேட்டு சாத்தறவனை என்ன பண்ண முடியும்..?' என்றார்.

பல கை வேண்டும்

உமையாள்புரம் சிவராமன் ஒரு கச்சேரிக்காகக் கோவை நகருக்கு வந்திருந்தார். சங்கீத அன்பர் ஒருவர் அவரை தனது வீட்டில்  விருந்துக்கு வருமாறு அழைத்தார். 

இலை போடப்பட்டது. மேஜைச் சாப்பாடு அல்ல. தரையில்தான். எல்லோரும் இலை முன்னால் அமர்ந்திருந்தார்கள். மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு வந்திருந்த உமையாள்புரம் சிவராமன் அமராமல் நின்று கொண்டே இருந்தார். அவர் நிற்கக் காரணம், உணவு வகைகள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்த சங்கீத அன்பர் மறந்து போய் தரைச் சாப்பாட்டுக்கு முக்கியமான ஒரு பொருளை ஏற்பாடு செய்யாததுதான்.

"ஏன் நிற்கிறீர்கள்?' என்று தயங்கியவாறே சிவராமனைக் கேட்டார் அவர். "மேஜைச் சாப்பாடு என்றால் சாப்பிட எனக்கு, இரு கை போதும், தரைச் சாப்பாடு என்றால் இரு கை போதாது. பல கை வேண்டும்' என்றார் சிவராமன்.
மறதியால் கிடைத்த சிலேடையை ரசித்தவாறே, உட்காரப் பலகையைக் கொண்டுவந்து போட்டார் அந்த சங்கீத அன்பர்.

அரசியல் ஆர்வம்

"கதர்பக்தி' என்ற நாடகத்தில் நடித்த போது எம்.ஜி.ஆருக்கு முதன்முறையாக அரசியல் ஆர்வம் மனதில் துளிர்விட்டது. தேசப்போராட்டத்தில் நேரிடையாக கலந்துகொள்ள ஆர்வம் உருவானது. காங்கிரஸ் கட்சியில்  உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு கதர்த்துணியும் கையில் காங்கிரஸ் தலைவர்களின் படங்களுடனும் எப்போதும் காட்சியளிக்கத் துவங்கினார். காங்கிரசில் இருந்தாலும் அவர் காந்தியின் வழியைப்பின்பற்றவில்லை. காங்கிரசில் இருந்துகொண்டே கலகக்குரல் எழுப்பிக்கொண்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மீது அவருக்கு ஈர்ப்பு உண்டானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com