கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடன் வாழ்ந்தால் கோடி நன்மைகளைப் பெறலாம்.

கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடன் வாழ்ந்தால் கோடி நன்மைகளைப் பெறலாம். அதற்கு உதாரணம் தான் சென்னையைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள். சிறிய அளவில் தொடங்கிய இட்லி தொழிலில் இன்று உச்சம் தொட்டு இருக்கிறார்கள். 

சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் "நலா' என்கிற பெயரில் இட்லி தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். 

இட்லியால் எப்படி இத்தனை உயரத்தை எட்ட முடிந்தது? சகோதரர்களில் கடைக்குட்டியான தீபக்ராஜிடம் பேசினோம். பல சுவையான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

""என்னுடைய இரண்டு அண்ணன்கள் பாஸ்கர், ரமேஷ். நாங்கள் மூவரும் சேர்ந்து யதார்த்தமாகத் தொடங்கியது தான் இட்லி வியாபாரம். ஒரு நாள் எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இட்லி வாங்க முயன்ற போது கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த இட்லி சுகாதாரமாக இல்லை. அப்போது எங்களுக்குள் உருவானது தான் இந்த இட்லி தொழில். 

மறைமலைநகர் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு, செங்கல்பட்டிலிருந்து "குஷ்பு இட்லி' என்று தயாரித்து வந்து கொடுப்பார்கள். கடைக்காரர்கள் அதை வாங்கி சிறு லாபம் வைத்து விற்பனை செய்வார்கள். இதையே நாம் செய்தால் என்ன என தோன்றியது. இதற்காக எங்கள் அம்மா சகுந்தலாவை சென்னைக்கு வரவழைத்தோம். எங்கள் சித்தி சித்ரா வேலை செய்த உணவகத்திலேயே தினசரி 200 இட்லிக்கு ஆர்டர் பிடித்து கொடுத்தார்.  நாங்கள் மொத்தமாக இட்லியை அவித்துத் தொழிற்சாலைகளுக்குச் சப்ளை செய்பவர்களிடம் கொடுத்து விடுவோம். 

ஆரம்பத்தில் 200 இட்லியாக இருந்த எங்கள் தயாரிப்பு அதற்கடுத்து சின்னச் சின்ன கடைகள், கேட்டரிங் என ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்னை வந்துவிட்டோம்.

காலையில் வேலைகளைத் தொடங்கி விடுவோம். மூன்று பேரின் மனைவிகள் தான் இட்லி தொழிற்சாலையை நடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். மூன்று ஷிப்ட்களாக வேலை பார்ப்போம். ஒரு கட்டத்தில் இந்தப் பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனங்களிலிருந்து ஆர்டர்கள் வரத் தொடங்கின. இப்போது தனி நிறுவனமாகச் செயல்படத் தொடங்கியுள்ளோம். எங்களிடம், பெரிய ஓட்டல்கள் முதல், சாலையோர தள்ளுவண்டி கடைக்காரர்கள்வரை இட்லி வாங்குகின்றனர்.

நாங்கள் அடிக்கடி உணவு கண்காட்சிக்குச் செல்வோம். அங்கே தரமான அரிசி, உளுந்து எங்கே கிடைக்கும் என்ற விவரத்தை தெரிந்து கொள்வோம். பொதுவாக இட்லி ருசியாக வருவதற்கு அரிசி, உளுந்தின் தரம் மிகவும் முக்கியம்.  இட்லி உப்பலாக வர வேண்டும் என்பதற்காக மாவில் எந்த விதமான பொருள்களையும் கலப்பதில்லை. அதே நேரத்தில் இட்லி சுவையிலும் அளவிலும் சமரசம் செய்து கொள்வதில்லை. முக்கியமாக எங்களது இட்லியை மூன்று நாள்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும்.

உணவகங்கள், திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு ஆர்டர் எடுத்து மொத்தமாக இட்லி சப்ளை செய்கிறோம். முழுக்கமுழுக்க மனித சக்தியால் மட்டுமே இட்லி தயாரித்து விற்று வந்த நாங்கள் தற்போது அனைத்து பணிகளுக்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளோம். இதனால் 4 பேர் பணிபுரிந்த இடத்தில் 1 நபர் பணியாற்றினால் மட்டும் போதும். 

இட்லிக்கு மாவு ஊற்றும் சிஎன்சி இயந்திரத்தில் தட்டை வைத்து, எத்தனை கிராமில் இட்லி எடை இருக்கவேண்டும் என்பதை மட்டும் செட் செய்துவிட்டால் போதும். அதுவே ஒரே சீராக இட்லிக்கு மாவு ஊற்றிவிடும். நாம் அந்த இட்லி மாவு தட்டை எடுத்து "ஸ்டீம்மர்' எனப்படும் நீராவி கொள்கலனில் வைத்து, அடுத்த 15 நிமிடங்கள் கழித்து எடுத்தால் பூ போன்ற இட்லிகள் தயார்.

மேலும், கைபடாமல் தயாரிக்கப்படும் தூய, ஆரோக்கியமான இட்லிகள் கிடைக்கின்றன. கைகளால் இட்லிகளை தயாரித்தபோது ஓவ்வொரு இட்லியும் வெவ்வேறு எடைகளில் வடிவங்களில் இருந்தது. தற்போது ஒரே சீரான வடிவத்தில், எடையில் கிடைக்கிறது என்பதே இயந்திரங்களை பயன்படுத்தி இட்லி சுடுவதன் சிறப்பாகும்.

கரோனா தொடங்குவதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் இட்லி தயார் செய்து கொடுத்தோம். இப்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதால் ஆர்டர் குறைந்துவிட்டன. 

அதனால் 20 ஆயிரம் இட்லிகள் தயாரித்துக் கொடுக்கிறோம். இவை பெரும்பாலும் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால் முடிந்த வரை நாங்களும் தூய்மையாக இருந்து மறைமுகமாக கரோனா நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்கி வருகிறோம். 

இப்போது சில்லி இட்லி, சில்லி ப்ரை இட்லி தயிர் இட்லி, பொடி இட்லி, மின்ட் இட்லி போன்ற பல ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். பீட்சா, பர்கர் போன்றவற்றிற்கு மாற்றாக இட்லி கொண்டு வர வேண்டும். காரணம் இவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்காதவை என்ற நோக்கத்தில் புது முயற்சி மேற்கொண்டுள்ளோம். எங்கள் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு இட்லி இலவசமாக வழங்கி வருகிறோம்.

நமது பாரம்பரிய உணவான இட்லியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பயணித்து வருகிறோம்'' என்றார் தீபக்ராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com