உலக நாடுகளை கவர்ந்த தமிழர்!

பிழைப்பு தேடி வெளிநாடு சென்ற தமிழர் ஒருவர் இன்று தனது திறமையால் உலக நாட்டு மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார் என்பது ஆச்சரியத்தக்க விஷயம் தானே. அந்தப் பெருமைக்குச் சொந்தகாரர் கந்தசாமி திருக்குமார்.
உலக நாடுகளை கவர்ந்த தமிழர்!

பிழைப்பு தேடி வெளிநாடு சென்ற தமிழர் ஒருவர் இன்று தனது திறமையால் உலக நாட்டு மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார் என்பது ஆச்சரியத்தக்க விஷயம் தானே. அந்தப் பெருமைக்குச் சொந்தகாரர் கந்தசாமி திருக்குமார்.  
தள்ளுவண்டி கடை  வைத்து உலகம் முழுவதும் பிரபலமான ஒருவர் உண்டென்றால் அது கந்தசாமி திருக்குமாராகத்தான் இருக்க முடியும். இவரது கடையின்  தோசை ருசியைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் வாஷிங்டன் சதுக்கத்தில் உள்ள தள்ளுவண்டி தோசை கடைக்குச் செல்லாமல் இருக்க மாட்டார்கள்.  கடந்த 2007-ஆம் ஆண்டு சாலையோரக் கடைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றபோது கொடுக்கப்பட்ட கோப்பை மற்றும் சான்றிதழ்கள் இவரது வாகனத்தில் வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி வைத்துள்ளார். அவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசினோம்:
""நான் யாழ்ப்பாணம்  பகுதியைச் சேர்ந்தவன். இலங்கை தலைநகர் கொழும்புவில் டிராவல் ஏஜென்சி நிறுவனம் வைத்திருந்தேன். பணி நிமித்தமாகப் பாங்காக் சென்றேன். அப்போது சமைக்கத் தெரியுமா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது சமைக்கத் தொடங்கினேன்.. அதற்கு ஊதியமும் கிடைத்தது. அது முதல் பாங்காக் செல்லும்போதெல்லாம் சமையல் வேலைகள் செய்து ஊதியம் பெற்றேன். 
தொடர்ந்து பிழைப்பு தேடி நியூயார்க் வந்தேன். 2001-ஆம் ஆண்டில் இரட்டை கோபுரம் அருகேயுள்ள பென் ரயில் நிலையம் அருகே சிறிய அளவில் தள்ளுவண்டி தோசைக் கடையை அமைத்தேன். தமிழ்நாட்டு உணவை வித்தியாசமாகக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் சுவையாகவும் குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் மலிவான விலையில் பல்வேறு வகையான தோசை இங்கு வருபவர்கள் கண்முன்னே தயார் செய்து வழங்குகிறேன். ஒரு முறை என் கடைக்கு வந்து தோசை ருசித்தவர்கள் அடுத்த முறை தேடி வந்து விடுவார்கள்.
குறிப்பாகப் பாண்டிச்சேரி மசால் கறி தோசை, தேங்காய் மற்றும் மிளகாய் பொடி தூவிய  தோசை, கீரை தோசை, சமோசா தோசை உள்ளிட்ட தோசைகள் என்னுடைய ஸ்பெஷல் ஐயிட்டங்கள். ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்படும் மொறு மொறுப்பான பேபி தோசையை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு தோசையின் விலை 7 டாலர்கள் ஆகும். விலை மிகவும் குறைவு என்பதால் விரும்பி வாங்கிச் செல்வார்கள்.
நமது உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் சத்து தோசையில் அதிக அளவு உள்ளது. எனவே, தோசையை நாம் தினந்தோறும் சாப்பிடும் போது நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட் சத்து கிடைக்கிறது.
தோசையை அதிகமாக சாப்பிடுவதனால் விட்டமின் மற்றும் மினரல்ஸ் அதிகமாக கிடைக்கிறது. தோசையோடு சாம்பார் சேர்த்து சாப்படுவதனால் புரோட்டீன் சத்தும் கிடைக்கிறது. தோசையை காலை உணவாக எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நல்லது. இதனை என்னுடைய வாடிக்கையாளர்களிடம் சொல்ல தவறுவதில்லை. 

இங்கு தோசை மட்டுமல்லாது வெங்காயம், உருளைக்கிழங்கு மசாலா நிரப்பப்பட்ட சமோசாக்களும் தயாராகின்றன. மிகவும் ஆரோக்கியமான, தரமான இந்த சமோசாக்களைக் குழந்தைகள் விரும்பி உண்கின்றனர். தோசைக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும், சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தையும் வீட்டில் தரமான பொருள்களை கொண்டு தயாரித்து எடுத்து வருகிறேன். அதனால் தரத்திலும் சுவையிலும் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆரோக்கியத்திற்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. சாலையோர கடைகளில் சாப்பிட்டால் வயிறு பிரச்னைகள் உண்டாகும் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் என்னுடைய கடைகளில் சாப்பிடுபவர்களுக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் உருவானதில்லை.  அதனால் தான் கடந்த 20 ஆண்டுகளில் இங்கு ஏராளமான சொந்தங்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். 

அமெரிக்காவில் பணியாற்றும், சாப்ட்வேர் இன்ஜினியர், டாக்டர், சிவில் இன்ஜினியர், ஏரோநாட்டிகல் இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பு படிப்புகளைப் படித்துவிட்டு கைநிறைய சம்பளத்தில் வேலை பார்த்து வரும் அனைவரும் என்னுடைய வாடிக்கையாளர்கள் தான். 

என்னுடைய கடை குறித்த விவரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கப் பத்திரிகைகளிலும் என்னுடைய நேர்காணல் வெளியாகியுள்ளது. 
தரமான உணவு அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில்  இது போன்ற தள்ளுவண்டி தோசை கடை கிளைகள் வைத்துள்ளேன். அங்குள்ள மக்களும் தமிழர்களின் உணவான தோசையை விரும்பி சாப்பிடுகிறார்கள்'' என்கிறார் திருக்குமார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com