கலை - கற்பனையே வாழ்க்கை

தமிழ்நாட்டின் மூத்த ஓவிய, சிற்பக் கலைஞர் முருகேசன் (87). சொந்த ஊர் மதுரை.
கலை - கற்பனையே வாழ்க்கை

தமிழ்நாட்டின் மூத்த ஓவிய, சிற்பக் கலைஞர் முருகேசன் (87). சொந்த ஊர் மதுரை. அண்மையில், இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டினை யொட்டி சென்னை லலித் கலா அகாதெமியில் நடத்தப்பட்ட சிறப்பு ஓவிய, சிற்ப கண்காட்சியில் ஓவியர், சிற்பி முருகேசனின் ஏராளமான கறுப்பு-வெள்ளை கோட்டுச் சித்திரங்களும், வண்ண ஓவியங்களும், சிற்பங்களும் இடம்பெற்றிருந்தன. இரு வாரகாலத்துக்கு நடைபெற்ற இந்த கண்காட்சியை மூத்த ஓவியர்களும் இளைய தலைமுறையினரும் திரளாக வந்து கண்டு களித்தனர்.  கண்காட்சி நடந்த அத்தனை நாள்களும் காணவந்த கலை ஆர்வலர்களோடு உரையாடி மகிழ்ந்தார் முருகேசன். அவருடன் ஒரு சந்திப்பு:

87 வயதிலும் ஓவியம் வரைகிறீர்கள், சிற்பங்கள் செய்கிறீர்கள் எப்படி?

எனக்கு வயதாகிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், கற்பனைதிறன் இன்னமும் எனக்குள்ளே பொங்கி, பிரவாகம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த கண்காட்சிக்காக, இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு சிறப்புக் கண்காட்சிக்காக புதிதாக ஏதாவது வரையலாமே?" என்று என்னிடம் லலித் கலா அகாதெமியின் நிர்வாகிகள் கேட்டார்கள்.  உடனே சம்மதித்தேன். அதற்குப் பொருத்தமாக என்ன வரையலாம் என்று யோசித்தபோது உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்தது ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய அரக்கனால்  ஏராளமான அப்பாவி இந்தியர்கள் கொடூரமாக சுட்டுக் கொன்று குவிக்கப்பட்ட   ஜாலியன் வாலாபாக் சம்பவம்தான். ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதையே வரைந்து இங்கே காட்சிப்படுத்தி இருக்கிறேன். கலைதான் என் வாழ்க்கை.  எனவே, இந்த முதுமையான வயதிலும் நான் வரைவதையும், சிற்பங்கள் செய்வதையும் நிறுத்தாமல் தொடர்கிறேன். 

பொது முடக்கக் காலம் பற்றி?

பொதுமுடக்கக் காலத்தில் நான் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதிலும் கூட சும்மா இருக்கவில்லை. தினமும் சில மணி நேரமாவது வரைவதற்கும், சிற்பங்கள் செய்வதற்கும் செலவழித்தேன். அதன் பயனாக, நேரமும் உபயோகமாகக் கழிந்தது. எனக்கும் மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்பட்டது. 

ஓவியக் கல்லூரியில் சேரும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

மதுரையில் வசதியான வியாபாரக் குடும்பம் எங்களுடையது. வீட்டில் என்னை சுதந்திரமாக வளர்த்தார்கள். பள்ளிக்கூட நாள்களிலேயே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் ஃபார்வர்டு பிளாக் கட்சிகளின் கூட்டங்களுக்குப் போவேன். காந்திஜி, மதுரைக்கு வந்திருந்த சமயம் எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களின் வீட்டில்தான் தங்கினார். அப்போது, அங்கே சென்று காந்திஜியை அருகில் நின்று பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மதுரையில் பொதுக்கூட்டங்களில் ஜீவா, முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்கள் எல்லோரும் பேசுவார்கள். அவர்கள் பேசுவது முழுமையாக எனக்குப் புரியாது என்றாலும், ஆர்வம் காரணமாக அந்தக் கூட்டங்களுக்குச் செல்வேன். 

படிக்கிற நாள்களிலேயே எனக்கு படம் வரைவதில் ஆர்வம் இருந்தது. அந்தக் காலத்தில் வெளியாகும் பத்திரிகைகளை எங்கள் வீட்டில் வாங்குவார்கள். அவற்றில் வெளியாகி இருக்கும் பல்வேறு ஓவியர்கள் வரைந்த சித்திரங்களை எல்லாம் பார்த்து வரைவேன். நான் நன்றாக வரைவதாக வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் எல்லோரும் பாராட்டுவார்கள். இப்படித்தான் என் ஓவிய ஆர்வம் வளர்ந்தது. மதுரையில் பள்ளிப் படிப்பினை முடித்துவிட்டு, வேலை பார்ப்பதற்காக சென்னைக்கு வந்தேன். 

சென்னையில் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தருவதற்காகவே தனிக்கல்லூரி இருப்பதைப் பற்றி கேள்விப்பட்டபோது, அதில் சேர்ந்து படிக்கும் ஆர்வம் வந்தது. அப்போதெல்லாம் ஒரு வார காலம் நுழைவுத் தேர்வு நடக்கும். தினமும் காலையும், பிற்பகலிலும் ஏதாவது சப்ஜெக்ட் கொடுத்து படம் வரையச் சொல்வார்கள். மற்ற சில மாணவர்களின் ஓவியத் திறமையைப் பார்த்து வியந்த நான், " நமக்கு ஓவியக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு குறைவுதான்!" என சற்று அவநம்பிக்கையோடுதான் இருந்தேன். ரிசல்ட் வெளியானபோது, தேர்வான மாணவர்களின் பட்டியலில் என் பெயர் கடைசியாக இடம் பெற்றிருந்ததைப் பார்த்தபோது, அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். 

ஓவியக் கல்லூரியில் சேர்ந்தவுடன், உலகளாவிய ஓவியக் கலையின் வரலாறு, அதன் வளர்ச்சி பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்பினேன். ஓவியக் கல்லூரியில் இருந்த நூல் நிலையத்தில் அத்தகைய புத்தகங்கள் ஏராளமாக இருந்தன. 

கன்னிமாரா நூலகத்தில் உறுப்பினர் ஆகி,  அங்குள்ள நுண்கலை பிரிவில் இருந்த பல அரிய புத்தகங்களை அங்கேயே உட்கார்ந்து  படிப்பேன். காரணம், அந்தப் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து கொண்டு போய்ப் படிக்க அனுமதி இல்லை. ஆனால், அந்தப் பிரிவின் நூலகர், என் ஆர்வத்தையும், நற்குணத்தையும் அங்கீகரிக்கும் வகையில் விரும்பிய புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதித்தார். 

ஓவியக் கல்லூரியில் படிப்பை முடித்த பின் சிறுது காலம் தில்லியில் பணியாற்றிவிட்டு, அதன் பின் ஓவியக் கல்லூரியில் ஆசிரியர் ஆனேன். நான் ஆசிரியர் ஆன பிறகு, கல்லூரி முதல்வரிடம் பேசி,  மாணவர்கள் ஓவியக் கல்லூரி நூலகத்திற்குச் சென்று,  அங்குள்ள புத்தகங்களைப் படித்து, பயன்பெற அனுமதி வாங்கிக் கொடுத்தேன். 

பொதுவாக மரம், கல், உலோகங்கள் மூன்றிலும் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன. இவற்றில் எது மிகவும் சவாலானது?

மூன்றுமே சிருஷ்டியின் வெவ்வேறு  வடிவங்கள்தான் என்றாலும், மரச் சிற்பங்களின் ஆயுள், கல் மற்றும் உலோகச் சிற்பங்களைவிட குறைவானது. மரத்தில் மிக நுட்பமான வேலைகள் செய்யவும் அதிக வாய்ப்பு இல்லை. உலோகம்தான் கையாள்வதற்கு மிகுந்த சிரமமானது. அதற்கு நீண்ட ஆயுள் உண்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com