தோசைக்கும் வந்தாச்சு மெஷின்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தோசை அனைவருக்குமே பிடிக்கும். ஆனால் இதற்கான தயாரிப்பு நேரம் இல்லத்தரசிகளுக்கு மிகவும் அதிகம். ஆனால், இப்போது தோசை தயாரிப்பு இயந்திரத்தில், மாவை கொட்டினால் போதும்.  
தோசைக்கும் வந்தாச்சு மெஷின்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தோசை அனைவருக்குமே பிடிக்கும். ஆனால் இதற்கான தயாரிப்பு நேரம் இல்லத்தரசிகளுக்கு மிகவும் அதிகம். ஆனால், இப்போது தோசை தயாரிப்பு இயந்திரத்தில், மாவை கொட்டினால் போதும்.  

நிமிடத்தில் அடுத்தடுத்து வருகின்றது என்றால் ஆச்சரியம்தான்!

தென்னிந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் தோசைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதிலும் பொன்னிறத்தில் மொறுமொறுப்புடன் கூடிய லேசான தோசையை விரும்பாதவர்கள் யாராவது உண்டா?

கிரைண்டர் அறிமுகமாகும் வரை ஆட்டுக்கல்லில் அரிசி,  உளுந்து உடன் வெந்தயத்தையும் மாவாக ஆட்டி கலந்து தோசைக்கல்லில் பக்குவமாக வார்த்து வீட்டில் அனைவருக்கும் பரிமாறி தானும் சாப்பிட்ட பெண்ணுக்கு எவ்வளவு நேரமாகும். அதனால்தான் இட்லி, தோசையெல்லாம் முன்பு ஏதாவது முக்கிய பண்டிகைகளின்போது வீடுகளில் செய்யப்படும் உணவாக இருந்தது. ஆனால் இன்று தோசை என்பது வாழ்வின் தினசரி அங்கமாகிவிட்டது. காரணம் தொழில்நுட்பம். கிரைண்டரில் மாவை அரைத்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டால் சில நாள்களுக்கு ஒருமுறை மாவு அரைத்தால் போதும்.

இப்போது அமெரிக்கா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளிலும்,  தோசை உள்ளிட்ட உணவுகள் மிகவும் பிரபலமாகிவிட்டது.

இந்த நிலையில், வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தியில் உலகம் முழுவதும் மிகப் பிரபலமான இந்திய பிராண்டான பட்டர்பிளை நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் இருந்த வி.எம்.எல். செந்தில்நாதன், ஏன் தோசை சுடும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்கக் கூடாது என்று யோசித்ததன் விளைவும் "ஈசி பிலிப்' என்ற தோசை பிரிண்டர்.

சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள "ஈவோ செப்' என்ற புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர் செந்தில்நாதன். குறுகிய காலத்தில் ஆராய்ச்சி செய்து தோசை பிரிண்டரை உருவாக்கியுள்ளார்.

தரம் வாய்ந்த பொருள்களைக் கொண்டு  உருவாக்கியுள்ள  இந்த இயந்திரத்தில் சுமார் 700 மி.லி. மாவை இயந்திரத்தில் உள்ள பாத்திரத்தில் கொட்டி  பட்டனைத் தட்டினால்போதும். இயந்திரம் சூடாக 3 நிமிடம், அதற்கடுத்த நிமிடத்தில் இருந்து சுவையான, மொறுமொறுப்பான, லேசான தோசை ஏ 4 சைஸில் தயாராகி விழுந்து கொண்டே இருக்கிறது.

தேவையான எண்ணெய், நெய் அல்லது வெண்ணெயை மட்டும் போதுமான அளவுக்கு தோசையின் மீது ஊற்றினால் போதும்.

இதுதொடர்பாக  ஈவோசெப் நிறுவன நிறுவனர் வி.எம்.எல். செந்தில்நாதன் கூறியதாவது:

""ஈசி பிலிப் தோசை இயந்திரத்தில் தோசை,  கம்பு தோசை, ராகி தோசை, சோளதோசை, ரவா தோசை, அடை என அனைத்தையும் மிகவும் லேசாக சுட முடியும். இந்த இயந்திரத்தின் மூலம் மசாலா தோசை, பொடி தோசை  சுடுவதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.   முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த தோசா பிரிண்டர் 4 வண்ணங்களில் கிடைக்கின்றன.  உலகில் முதல் தோசா பிரிண்டர் இதுதான். கடந்த 3 மாதங்களாக தோசை இயந்திரம் விற்பனையில் உள்ளது. பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர இல்லத்தரசிகளின் பணியை மேலும் குறைக்கும் வகையில் சமையலறை ஆட்டோமேன் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.

தோசை இயந்திரம் மூலம் இல்லத்தரசிகளின் வேலைப்பளு மிகவும் குறையும். 

எங்களது தோசா பிரிண்டர் ஆராய்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் பெருமையாக உள்ளது''  என்றார்.

-ஆர்.வேல்முருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com