அமெரிக்காவில் அசத்தும் முருகன் கோயில்..!

அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் உள்ள முருகன் கோயில், அங்குள்ள இந்தியர்களை மட்டுமல்லாமல் அமெரிக்கர்களையும் அசத்தி வருகிறது. 
அமெரிக்காவில் அசத்தும் முருகன் கோயில்..!

அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் உள்ள முருகன் கோயில், அங்குள்ள இந்தியர்களை மட்டுமல்லாமல் அமெரிக்கர்களையும் அசத்தி வருகிறது.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. கோயில்களில் காலங்களைக் கடந்து நிற்கும் கட்டடக் கலை, அறிவியல் தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்திலேயே வான சாஸ்திரத்தை அறிந்து அதற்கேற்ப கோயில்களை வடிவமைத்தனர் நம் முன்னோர்கள்.
"திரை கடலோடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழிக்கேற்ப உலகெங்கும் பல்வேறு துறைகளில் இந்தியர்கள் கோலோச்சி வருகின்றனர். ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் மேற்கத்திய கலாசாரத்தில் வாழ்ந்தாலும், ஆன்மிகத்தை மறக்காமல் அங்கும் பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து அமெரிக்கா சென்ற டாக்டர் குருசாமி, பழனி முருகன் மீதிருந்த பக்தி காரணமாக, அங்கு முருகன் கோயிலை 1999-இல் கட்டினார். " மேரிலேண்ட்' மாகாணத்தில் லேன் ஹேம் என்ற இடத்தில் அமைந்துள்ளது வட அமெரிக்க முருகன் கோயில் என்று அழைக்கப்படும் இந்தக் கோயில்.
சுற்றிலும் அடர்ந்த மரங்களுடன் சிறு குன்றின் மேல் அமைந்துள்ள கோயிலின் தோற்றம் குறிஞ்சி நிலக் காட்சியை கண்முன் கொணர்கிறது. அடிக்கல் நாட்ட திருமுருக கிருபானந்த வாரியார், பேரூர் ஆதீனம், ஹவாய் ஆதீனம் போன்றோர் வருகை புரிந்து சிறப்பித்திருக்கின்றனர். கிருபானந்த வாரியாரின் அறிவுறுத்தலின்படி திருமணக் கோலத்தில் வள்ளி - தெய்வானையுடன் முருகர் சிலை வடிவமைக்கப்பட்டது.
இங்கு போக நிலை, யோக நிலை என முருகன் வீற்றிருக்கிறார். ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்
வாஷிங்டன், வெர்ஜீனியா, மேரிலேண்ட் மாகாண பக்தர்கள் பெரும்பாலானோர் கோயிலுக்கு தொடர்ந்து வருகை புரிகின்றனர்.
முருகனுக்கு வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், திருகார்த்திகை, தைப்பூசம், ஆடி கார்த்திகை, கந்த சஷ்டி விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
ஆனி மாத விழா: ஆனி மாதத்தில் பத்து நாள்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கொடியேற்றத்துக்கு முதல் நாள் யாகங்கள் செய்யப்பட்டு, பூசணியை வெட்டி துர் சக்திகள் விரட்டப்படுகின்றன. நல்லுணர்வுகளுடன் மறுநாள் கொடியேற்றம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் வேள்விகள் நடத்தப்படுவதுடன் சிறப்பு அலங்கார, அபிஷேகங்கள் அங்கு வீற்றிருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் நடத்தப்படுகிறது.
உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் தினமும் வலம் வரும் காட்சியும் உண்டு. முன் நின்று விழாவினை நடத்துபவருக்கு கையில் காப்பு கட்டப்படுகிறது. கொடிமரத்தில் கட்டப்படும் கொடியில் நடுவில் ஓம் என்றும் இருபுறமும் வேலும், மயிலும் பொறிக்கப்பட்ட உருவங்கள் உள்ளன.
தேர்த் திருவிழா: ஒன்பதாம் நாள் நடைபெறும் விழா தேர்த் திருவிழாவை மட்டும் அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழர்களால் எடுத்து நடத்தப்படுகிறது நல்லூர், கதிர்காமம் பகுதிகளைச் சார்ந்த இவர்கள் கனடா, நியூயார்க், நியூஜெர்சி முதலிய இடங்களிலிருந்தும் இங்கு வந்து ஒன்று கூடி நடத்துகின்றனர்.
தேர்த் திருவிழாவன்று நல்லூர் இலங்கைத் தமிழர்கள் தண்ணீர்ப் பந்தல் அமைத்திருந்தது நம் ஊரை நினைவுப்படுத்துவதாக இருந்ததுடன் நம் பண்பாட்டின் மிகச் சிறந்த கூற்றை பிரதிபலிப்பதாக இருந்தது.
அழகன் முருகனுக்கு அழகிய வேலைப்பாடுகளுடன் தேர் அமைத்து முதுகில் அலகு குத்தி இழுத்து வரும் காட்சி பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் காட்சியாகும்.


தைப்பூச விழா: மலேசியத் தமிழர்களால் எடுத்துக் கொண்டாடப்படுகிறது.
அம்சங்கள்: பூஜைகள் தமிழிலேயே சைவ முறைப்படி நடக்கின்றன. தமிழர்கள் மட்டுமல்லாமல் மொழிபாகுபாடில்லாமல் வழிபாடு செய்ய அனைவரும் வருகை தருவது வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் இந்திய கலாசாரத்தை நினைவூட்டுகிறது.
இதுதொடர்பாக கோயிலின் தலைமை அர்ச்சகர் கணேஷ் பட்டர், அர்ச்சகர் கௌரி சங்கர் கூறியதாவது:
"அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய முருகன் கோயில் இதுதான். மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. அனைத்து விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இதற்கு தமிழர்கள் மட்டுமில்லாமல் அமெரிக்கர்களும் மிகுந்த ஒத்துழைப்புத் தருகின்றனர். இக்கோயிலில் தமிழில் சைவ முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன. 2023 -ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கிருபானந்த வாரியாரை பெருமைப்படுத்தும் விதத்தில் 63 நாயன்மார்களின் விக்கிரகங்களுடன் அவரது சிலையும் வைக்கப்பட்டுள்ளது. தமிழர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு'' என்றார்.
- ஆர்.வேல்முருகன்
படங்கள்: மயில்விழி சுந்தரராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com