அரிக்கமேடும், அலையாத்திக் காடும்

​நடந்தால் தடம் பதியும் மண் சாலை,  மாமரங்கள்- தென்னைகளுக்கு நடுவே சலசலப்பை ஏற்படுத்தும் பனை மரங்கள்,  கட்டடத்தில் வேர் பரப்பி அச்சமூட்டும் அரச மரம்,  காலங்களைக் கடக்க வைத்து மெளனமாகச் சிதிலமடைந்து
அரிக்கமேடும், அலையாத்திக் காடும்


நடந்தால் தடம் பதியும் மண் சாலை, மாமரங்கள்- தென்னைகளுக்கு நடுவே சலசலப்பை ஏற்படுத்தும் பனை மரங்கள், கட்டடத்தில் வேர் பரப்பி அச்சமூட்டும் அரச மரம், காலங்களைக் கடக்க வைத்து மெளனமாகச் சிதிலமடைந்து நிற்கும் செங்கல் கட்டடங்கள், தண்ணீரிலிருந்து வெளியே துள்ளி விளையாடும் மீன்கள், அவற்றை காலால் தூக்கிப் பசியாற்றும் கொக்குகள், கடல் பறவைகள், இதமான காலைக் கவ்விப் பிடித்துச் செல்லும் பறவைகள், துடுப்புகளை வலித்து நீரைக் கிழித்துப் பயணிக்கும் பாரம்பரிய மீனவர்கள், சிகரம் வைத்தது போல இலை, தழைகளைச் சிலுப்பி நிற்கும் அலையாத்திக் காடுகள் என பிரமிக்க வைக்கிறது அரிக்கமேடு.

அரிக்கமேடு என்றாலே அது தொல்லியல் துறையால் தோண்டப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி என்றே பலரும் நினைக்கின்றனர். அகழாய்வு இடமாக இருந்தாலும், அது இயற்கை அழகை எல்லாம் தன்னகத்தே கொண்ட பழங்காலத் தமிழர் வாழ்வின் தனித்துவ அடையாளத்தை காலம்கடந்தும் வெளிப்படுத்திவரும் வரலாற்று சூழல் சுற்றுலாத் தலம்.

புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது அரியாங்குப்பம். அங்கிருந்து வீராம்பட்டிணம் செல்லும் சாலையில் 1 கி. மீ. தொலைவில் இடதுபுறம் திரும்பினால், காக்கயந்தோப்பு உள்ளது.

அரியாங்குப்பம்-வீராம்பட்டிணம் இடையே மரங்கள், கழிமுகத்துவாரம் என காண்போரை மகிழ வைக்கும் மாமரத் தோப்புகளுக்கு இடையே சென்றால், செங்கல் தூண்கள் இரண்டு வரவேற்கின்றன. அதனருகே காலம்கடந்தும் ரோமானியக் கலாசாரத்தை காட்சிப் பொருளாக சிதிலமடைந்த செங்கல் கட்டடம் உள்ளது.

அரிக்கமேடு என்ற அகழ்வாராய்ச்சிப் பகுதி அங்கு இருப்பதற்கான அடையாளம் இதுதான். ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் மறைந்திருக்கும் கற்கால வாழ்க்கையின் அடித்தளமான கட்டடங்கள் ஏராளம்.
அரிக்கமேடு கற்காலத்துக்கு நம்மை இட்டுச்செல்லும் நிலையில் கூவும் குயில், பாடும் பறவை, ஆடும் மயில் என தனியார் தோப்புகளிலும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உயரமான மரங்களில் ஏற உதவும் ஏணிகள், மரத்தில் தங்க ஏதுவான பரண் வசதிகள், உணவுகள் என தனியார் சுற்றுலா இடங்களும் ஏராளமாக உள்ளன.

தனியார் சுற்றுலாத் தோட்டங்களில் இருந்து கழிமுகத்து வழியாகக் கடலுக்குள் அழைத்துச் செல்லும் படகுப் போக்குவரத்து வசதியும் உள்ளது. அதில் செல்லும்போது இருபக்கமும் பச்சைப் பசேல் என காட்சி தரும் அலையாத்தி மாங்குரோவ் காடுகளும், மீன் கொத்திப் பறவைகளும் நம் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

அதிகாலையில் அரிக்கமேடு பகுதியிலிருந்து படகில் செல்வோர் அலையாத்திக் காட்டு அதிசயத்துடன், கடலுக்குள் இருந்தபடியே கதிரவ உதயத்தையும் கண்டு வியக்கலாம்.

தேங்காய்த்திட்டு பகுதியில் பாண்டி மெரினா கடற்கரைப் பகுதியிலிருந்து தனியார் படகுகளில் கட்டணம் செலுத்தியே அலையாத்திக் காடுகளையும், அரிக்கமேட்டையும் இணைக்கும் தனியார் சுற்றுலாத் திட்டம் செயல்பட்டுவருகிறது.

சுற்றுலாப் பயணிகளையும், வரலாற்று ஆய்வாளர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ள அரிக்கமேடு பகுதியில் தொல்லியல் துறையும், புதுவை மாநில அரசும் சேர்ந்து தகவல் கூறுவோரை (கைடுகள்) நியமித்தும், தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை அமைத்தும் வரலாற்று சூழல் சுற்றுலா இடமாக அதை மாற்றலாம் என்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்.

கடல் வழிப்பயணத்தில் அரிக்கமேடு சரித்திரத்தை அறியும் நிலையில் அப்பகுதியில் உள்ள பிரம்மரிஷி கோயில் உள்ளிட்ட இடங்களும் அரிய பல தகவல்களின் களஞ்சியமாகவே உள்ளன.

அரிக்கமேடு, அலையாத்திக் காடுகளை மையமாக்கி பாண்டி மெரினா கடற்கரையிலிருந்து பாராகிளைடரில் பறந்து பார்க்கும் சுற்றுலாவும், முருகம்பாக்கத்தில் எண்முறையில் ஒலி-ஒளிக்காட்சியாகப் பார்க்கும் வகையிலான ரூ.10 கோடிக்கு சுற்றுலா மையமும் செயல்படுத்தப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

படம் : கி.ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com