மகிழ்ச்சியாக வாழ்வதே வாழ்க்கை..!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக யாசகமாக பெற்ற தொகையில் ரூ.53 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்குக் கொடுத்துள்ளேன்.
மகிழ்ச்சியாக வாழ்வதே வாழ்க்கை..!

"கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக யாசகமாக பெற்ற தொகையில் ரூ.53 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்குக் கொடுத்துள்ளேன்.  எனது இலக்கு ஒரு கோடி ரூபாய். அதை விரைவில் எட்டுவேன். வசதியாக வாழ்வது அல்ல வாழ்க்கை; மகிழ்ச்சியாக வாழ்வதே வாழ்க்கை'' என்கிறார் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட  ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த முத்தையா  மகன் எம்.பூல்ப்பாண்டியன். 
எழுபத்து மூன்று வயது நிரம்பிய இவர் பல்வேறு இடங்களில் யாசகமாக பெறும் தொகையை ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று,  அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்களைச் சந்தித்து முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு நன்கொடையாகக் கொடுத்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,  ஆட்சியர் மா.ஆர்த்தியைச் சந்தித்து ரூ.10 ஆயிரம் நிதியுதவியை  வழங்கினார்.
நிகழ்வு முடிந்ததும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியில் வந்து கொண்டிருந்த  பூல்ப்பாண்டியனிடம் பேசியபோது:
"சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று  அந்தந்த மாவட்ட ஆட்சியர்களைச் சந்தித்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையை அளித்துள்ளேன்.  
எனக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் நல்ல முறையில் இருக்கிறார்கள். என்னுடைய மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் அனைவருக்கும் உதவி செய்யும் குணமுடையவர்.அவரது இறப்பு வெகுவாக என்னைப் பாதித்தது.அவரைப் போல நாமும் பிறருக்கு உதவி செய்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி என்ற எண்ணம் வந்தது.
இந்த எண்ணத்தின்படி பலரிடமும் யாசகம் பெற்று அதிலிருந்து கிடைக்கும் தொகையை முதலில் எனது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்தேன்.  இது தொடர்ந்தது.
திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்துள்ளேன். 
யாசகம் பெறுவதும்,அதை பிறருக்காக செலவு செய்வதும் என் குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. யாசகம் பெறும் தொகையை அவர்களிடம் தருமாறு கேட்டு வற்புறுத்தினார்கள். அதனால் குடும்பத்தைவிட்டே வெளியில் வந்து சாலையோரங்களிலும்,பேருந்து நிலையங்களிலும் தங்கி வாழ்ந்து வருகிறேன்.
வியாபாரிகளைச் சந்தித்து அவர்கள் தருகிற தொகையை சேமித்து வைத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கொடுத்து வருகிறேன்.நிதியை பணமாக கொடுக்காமல் வங்கியில் செலுத்திய செலானாக மட்டுமே அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கொடுப்பேன். எப்போதுமே கையில் பணமாக வைத்துக் கொள்வதில்லை. பிச்சைக்காரன் என நினைத்து பணத்தை பிடுங்கிக் கொள்வார்கள் என்ற பயமே காரணம்.
மதுரை மாட்டுத்தாவணியில் காய்கறிக்கடை, திருநெல்வேலி, நாகர்கோயில் போன்ற இடங்களில் உள்ள பல வியாபாரிகள் எனக்கு அடிக்கடி பணம் கொடுத்து உதவுகிறார்கள். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன்.என்னைப் போல யாரும் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்துக்காகத்தான் யாசகமாக பெறக்கூடிய தொகையை அரசுக்கு கொடுத்து வருகிறேன். 
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை யாசகமாக பெற்ற தொகையில் ரூ.53 லட்சம் கொடுத்துள்ளேன். எனது இலக்கு ஒரு கோடி ரூபாய். அதை விரைவில் எட்டுவேன்.எனக்கு இதில் இனம்புரியாத பேரானந்தம் கிடைக்கிறது.அதனால் தொடர்ந்து நிதி வழங்கி வருகிறேன். எனக்கு படிக்கவோ,எழுதவோ தெரியாது. நானும் தேவையில்லாமல் எந்தச் செலவும் செய்ய மாட்டேன்.
கழுதை பேப்பரை சாப்பிடும்,. ஆனால் அதே கழுதைக்கு 100 ரூபாய்க்கு கிலோ கணக்கில் பேப்பர் வாங்கி சாப்பிடலாம்னு தெரியாது,வாங்கவும் தெரியாது. எது பணம்,எது பேப்பர்னும் தெரியாது.பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று நினைத்து பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.என்னைப் பொருத்தவரை வசதியாக வாழ்வதல்ல வாழ்க்கை,மகிழ்ச்சியாக வாழ்வது தான் வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com