விருதுநகர் புரட்சி: குப்பை வங்கி!

விருதுநகரில் வித்தியாசமான முறையில் "குப்பை வங்கி' செயல்பட்டுவருகிறது.
விருதுநகர் புரட்சி: குப்பை வங்கி!

விருதுநகரில் வித்தியாசமான முறையில் "குப்பை வங்கி'செயல்பட்டுவருகிறது. குப்பை சேகரிப்பு மட்டுமல்ல; வீடுகளிலேயே குப்பையை ரகம் பிரித்து சேகரித்து, அவற்றை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதுதான் இந்த வங்கியின் சிறப்பம்சம்.

இந்த முன்மாதிரித் திட்டத்தை "இதயம்' எண்ணெய் நிறுவனக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜவள்ளி ராஜிவ், இவரது மாமியார் மலர்விழி முத்து ஆகிய இருவரும் செயல்படுத்திவருகின்றனர்.

இதுகுறித்து ராஜள்ளி ராஜிவ் கூறியதாவது:

""சிறுவயது முதலே நான் பேருந்து, ரயில் பயணங்களின்போது ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இயற்கையை ரசிப்பேன். அப்போது ரசித்த பசுமை காணாமல் போய்விட்டது. இப்போது எங்கே பார்த்தாலும் வண்ணமயமான பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன. அதைப் பார்க்கும்போதெல்லாம் என் மனசு கனத்தது. கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் திருமணமானது. சமூகச் சேவையில் ஈடுபட தொடங்கினேன்.

நான் பேச்சாற்றலை வளர்க்க உதவும் "டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப்' மூலமாக, விருதுநகரில் 2018-ஆம் ஆண்டு அக். 2-இல் காந்தி ஜெயந்தியன்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை நடத்தினோம். பள்ளி மாணவர்கள் 20 ஆயிரம் பேரை திரட்டி, ""நமது ஊர்! நமது கடமை'' என்ற தலைப்பில் பல்வேறு வகையான குப்பைகளையும் வீட்டிலேயே ரகம் பிரிக்க வேண்டியதன் அவசியத்தையும் செய்முறையையும் விளக்கினோம்.

இதேபோல், 2019-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்றும் எட்டு மணி நேரத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளைச் சேகரித்து, மறுசுழற்சிக்குக் கொடுத்ததும் கின்னஸ் சாதனையானது.

கரோனா காலத்தில், 2020-ஆம் ஆண்டு அக். 2-இல் ஆன்லைனில் 18 பள்ளிகளைச் சேர்ந்த 1, 500 மாணவர்கள் தூய்மை இந்தியா உறுதிமொழியை ஏற்கும் நிகழ்ச்சியை நடத்தினோம்.

அப்போது, பலர் தங்கள் மறுசுழற்சி அனுபவங்களை மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் சாதனையானது.

இதையறிந்த மதுரையைச் சேர்ந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி வல்லுநரும், எங்களது வழிகாட்டியுமான பேரா. வாசுதேவன், "ஆண்டுதோறும் சாதனைகளெல்லாம் சரிதான்! தினசரி, தங்களது வீட்டுக் குப்பைகளை எத்தனை பேர் ரகம் பிரித்து உங்களிடம் கொடுக்கிறார்கள்?'' என்றார். அப்போதுதான் உண்மையான பணி என்னவென்று புரிந்து, "குப்பை வங்கி' உருவானது.

எங்கள் வீட்டு வளாகத்திலேயே வசிக்கும் மூன்று குடும்பங்களிலிருந்து முதலில் ஆரம்பித்தோம். ஈரக் குப்பை (சமைலறைக் கழிவுகள்), காகிதம், பிளாஸ்டிக், உலோகங்கள், கண்ணாடி என்று ரகம் பிரித்து அவற்றுக்குரிய பெட்டிகளில் போட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தோம்.

ஈரக் குப்பையை சேகரித்து, குழிகளில் போட்டு இயற்கை உரத்தைத் தயாரிக்கத் தொடங்கினோம். அடுத்த மூன்று மாதங்களில் எங்கள் வீட்டில் இருந்து ஒரு சிறு குண்டூசி கூட குப்பை என்று வெளியில் போகவில்லை.

வீட்டில் செய்ததை சுற்றுப்புறத்தில் வசிப்போரிடமும் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மாணவர்களுக்கும் குப்பையை ரகம் பிரித்து வைக்க பைகளையும் விநியோகித்தோம். அவர்களே எங்களிடம் கொண்டு வந்து கொடுக்கத் தொடங்கினர். ஓரிடத்தில் அவற்றை வாங்கி சேகரித்தோம். ஒரு எடை தராசை வாங்கி, அவரவர் கொண்டு வந்து கொடுக்கும் குப்பையை எடை போட்டு, ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தோம். "ரகம் பிரித்துதான் கொடுக்க வேண்டும்; ரகம் பிரிக்காத குப்பையை வாங்கக் கூடாது' என்பது எங்கள் கொள்கை.

இந்தப் பணியால் ஈர்க்கப்பட்ட எங்கள் ஊழியர் ஒருவர், "நானும் என் சைக்கிளில் சில வீடுகளுக்குச் சென்று குப்பையை ரகம் பிரித்துத் தரச் சொல்லி வாங்கி வருகிறேன்' என்று கூறி ஈடுபாட்டுடன் பணிபுரிந்தார்.

ஆரம்பித்த ஐந்து மாதங்களில், ரகம் பிரித்த குப்பைகளை வைக்க இடம் போதவில்லை. கிடங்கு அமைத்து, இருவரை பணிக்கு அமர்த்தினோம். அடுத்த ஓராண்டில் குப்பை சேகரிக்க ஒரு வண்டி வாங்கினோம்.

அடுத்தகட்டமாக, விருதுநகரை ஆறு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் குப்பையை சேகரிக்கத் தொடங்கினோம். இந்தத் திட்டத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

தற்போது குப்பை வங்கியில் நான்கு ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சேகரிக்கப்படும் குப்பை எடை போட்டு, கணக்கில் வரவு வைக்கப்படும்.
குப்பையை விற்பனை செய்து, கிடைக்கும் வருவாயில் நிர்வாகச் செலவுக்கு சிறு பகுதியை எடுத்து கொள்கிறோம். மீதியை ஒவ்வொருவர் கணக்கிலும் 300 கிலோ ஆனதும் சேர வேண்டிய தொகையை கணக்கிட்டுக் கொடுக்கிறோம்.

ஒரு பள்ளிக்கு இந்தவகையில் முப்பதாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறோம்.

இதோடு, "பஞ்சகவ்யாசெய்வது எப்படி?, "வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?, "இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?' என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறோம். மண்ணைத் தொட்டுப் பழகிவிட்டால், மாணவர்களுக்கு மண்புழு நண்பனாகிவிடும். அவர்களுக்கு மண்வாசனை பிடித்துவிடும். அதன்பிறகு, மண்ணுக்குக் கேடு விளைவிக்கும் எதையும் செய்ய அவர்களுக்கு மனம்வராது. மன மகிழ்ச்சிக்காக, மனத் திருப்திக்காக அதை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிப்போடு செய்வார்கள்.

"குப்பைக்கு நாங்கள் பணம் கொடுக்காவிட்டாலும், நீங்கள் குப்பையை ரகம் பிரிப்பதைத் தொடர்ந்து செய்வீர்களா?' என்று சர்வே செய்தபோது, "அவசியத்தை நாங்கள் அறிந்து செய்துகொண்டிருக்கிறோம். பணத்துக்காக இல்லை' என்று பதில் சொல்லி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

இதுவரை குப்பை வங்கி மூலமாக 1.17 லட்சம் கிலோ குப்பையை ரகம் பிடித்து சேகரித்திருக்கிறோம். அவற்றில் 1.10 லட்சம் கிலோ குப்பையை மறுசுழற்சி செய்திருக்கிறோம் இந்தத் திட்டத்தை எந்த ஊரிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். ஆர்வம் உள்ளோர் தொடர்புகொண்டால், அவர்களுக்கு வழிகளைச் சொல்லிக் கொடுக்க நாங்கள் தயார்!'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com