ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..!

தமிழ்நாட்டின் ஹாக்கி பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில், சென்னையில் 'ஆசிய  ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி' கோலாகலமாக நடைபெற்றது.
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..!

தமிழ்நாட்டின் ஹாக்கி பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில், சென்னையில் 'ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி' கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி திகழ்கிறது. எட்டு முறை ஒலிம்பிக் சாம்பியன், ஒருமுறை உலகச் சாம்பியன் என இந்தியா ஹாக்கியில் கிங் மேக்கராகவே இருந்தது.

எனினும், 1980களில் மேற்கத்திய நாடுகளில் 'பாஸ்ட் ஹாக்கி', 'அட்டாக்கிங் ஹாக்கி' என்ற நோக்கில் புதிய விதிமுறைகளை ஏற்படுத்தினர்.

குறிப்பாக, செயற்கை புல்தரை மைதானம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், புல் தரையில் அபாரமாக ஆடும் திறனை இந்திய வீரர்களால் புதிய மைதானங்களில் சாதிக்க முடியவில்லை. எனவே, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்டவை பலம் வாய்ந்த அணிகளாக மாறின.

தொடக்கத்தில் அதிக பணம் தேவைப்பட்டதால், இந்தியாவில் 'ஆஸ்ட்ரோ டர்ஃப்' எனப்படும் செயற்கை புல்தரை மைதானங்கள் மிகக் குறைவாகவே அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்திய ஹாக்கி கூட்டமைப்பும் புதிய விதிமுறைகளுக்கு ஏற்றவாறு அணியை கட்டமைத்து, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டன.

நான்காம் இடத்தில் இந்திய அணி:

தொடர் முயற்சியாலும் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தாலும் இந்திய அணி உலகத் தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளது.

ஆசிய அளவில் இந்தியாவும்பாகிஸ்தானும்தான் பரம வைரி அணிகளாக உள்ளன. தற்போது தென் கொரியா, மலேசியா, சீனா, ஜப்பான் அணிகளும் சவால் விடும் வகையில் ஆடி வருகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசியக் கோப்பை, ஆசியப் போட்டிகள் ஆகிய இரண்டிலும் 8 அணிகள் இடம் பெறும். ஆசியக் கோப்பையில் சாம்பியனாகும் அணி நேரடியாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். ஆசியப் போட்டியில் தங்கம் வெல்லும் அணி நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி:

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையே முக்கிய போட்டிகள் நடைபெறும் நிலை ஏற்பட்டதால், ஆண்டுதோறும் நடைபெறும் வகையில் 'ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி' 2011இல் அறிமுகம் செய்யப்பட்டது. தலைசிறந்த 6 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 2011, 2016, 2018 என மூன்று முறை இந்தியாவும், 2012, 2013, 2018 என மூன்று முறை பாகிஸ்தானும் அதிகபட்சமாக வென்றுள்ளன. 2021இல் நடைபெற்ற போட்டியில் ஜப்பானை வீழ்த்தி தென்கொரியா முதல் பட்டத்தைக் கைப்பற்றியது.

16 ஆண்டுகளுக்குப் பின்னர்..:

2007இல் ஆசிய கோப்பை ஹாக்கியும், 1995இல் தெற்காசிய போட்டி ஹாக்கி ஆட்டங்களும் சென்னையில் நடைபெற்றன. சென்னையில் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் சர்வதேச ஹாக்கி போட்டியாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை நடத்தப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.18 கோடியை ஒதுக்கியது. பழைமையான மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கமும் புதுப்பிக்கப்பட்டது.

பாரிஸ் ஒலிம்பிக் தரத்தில்:

2024இல் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அங்கு ஹாக்கி ஆட்டங்கள் நடைபெறவுள்ள மைதானத்தின் தரத்தைப் போலவே மைதானத்திலும் நவீன செயற்கை இழை ஆடுகளம் நிறுவப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேட்டியில் கேப்டன்கள்: இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் 6 அணிகளின் கேப்டன்களும் வேட்டி அணிந்து கோப்பையுடன் காட்சி அளித்தனர்.

தமிழ்நாட்டுக்கு நெடிய ஹாக்கி பாரம்பரியம்:

தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சிறந்த ஹாக்கி வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்று ஆடியுள்ளனர். தமிழ்நாட்டின் முதல் ஹாக்கி வீரராக சந்திரசேகர், தெற்கு ரயில்வே அணியில் ஆடினார். பின்னர், 1935இல் லாகூரில் நடைபெற்ற இன்டர் ரயில்வே போட்டியில் பங்கேற்றார்.

தலைசிறந்த வீரர்களாக ரங்கநாதன் பிரான்ஸிஸ், முனிர் சேட், சார்லஸ் ஹக்கின்ஸ், லெஸ்லி பெர்ணான்டஸ், நைனாகண்ணு, சார்லஸ் கார்னெலியஸ், நைஜல் ரிச்டர், முருகேஷ் டிபன்டர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி, வி.பாஸ்கரன், முகமது ரியாஸ், அட்டாதுல்லா கான், ராஜசேகரன் மீட்பீல்டர்களாகவும் அலங்கரித்தனர்.

சுதந்திர இந்தியாவுக்கு முன்பு நடைபெற்ற அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பதக்கம் வென்ற இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

12 ஒலிம்பியன்கள், 8 உலகக் கோப்பை வீரர்களை தமிழகம் உருவாக்கியுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஹாக்கி லீக் போட்டி நாட்டின் பழைமையான லீக் போட்டிகளில் ஒன்றாகும். இத்தகைய நெடிய பாரம்பரியத்தை கொண்டுள்ள தமிழ்நாட்டில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்றது சிறப்புவாய்ந்த ஒன்றாகும்.

செஸ் ஒலிம்பியாட், டபிள்யுடிஏ டென்னிஸ், சர்ஃபிங், உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரிசையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டியும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் விளையாட்டு மையமாக 'தமிழ்நாடு திகழும்' என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com