4 ஆண்டுகளில் 40 லட்சம் மரக்கன்றுகள்...

ஒருநாளின் அதிகபட்ச நேரத்தை அறுவைச் சிகிச்சை அரங்கிலேயே கழிக்கும் அளவுக்கு பிஸியான மருத்துவரான மாதேஸ்வரன், கடந்த 4 ஆண்டுகளில் நட்ட மரக் கன்றுகளின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டுகிறது.
4 ஆண்டுகளில் 40 லட்சம் மரக்கன்றுகள்...

ஒருநாளின் அதிகபட்ச நேரத்தை அறுவைச் சிகிச்சை அரங்கிலேயே கழிக்கும் அளவுக்கு பிஸியான மருத்துவரான மாதேஸ்வரன், கடந்த 4 ஆண்டுகளில் நட்ட மரக் கன்றுகளின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டுகிறது. அவர் 100 மாதங்களில் 10 கோடி மரங்களை நட வேண்டும் என தனக்குத் தானே இலக்கை நிர்ணயித்து பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.

இயற்கையை நேசிக்கும் அவர் கோவை ராயல் கேர் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலரும் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான சித்தோடு க.மாதேஸ்வரன்.
அவரிடம் பேசியபோது:

"புவி வெப்பமயமாதல், கடல்நீர் மட்டம் உயர்ந்து வருதல், பருவம் தவறும் பருவ மழைகள் போன்ற பிரச்னைகள் இயற்கை அளிக்கும் எச்சரிக்கை ஒலியாகும். இயற்கையுடன் போராடி வெல்ல முடியாது; அதனால் இயற்கையுடன் அரவணைத்துப் போனால் சரி செய்ய முடியும்.

அடிப்படையில் நான் ஒரு விவசாயி. என்னை மருத்துவர் என்றழைப்பதைவிட விவசாயி என்று அழைத்தால் பெருமை கொள்வேன்.

என் தாயின் கனவுக்காக, மருத்துவம் பயின்றேன். சிறு வயதில் இருந்தே மரங்கள், செடி, கொடிகள் மீது எனக்கு தீராதக் காதல் இருந்து வந்துள்ளது. எந்த இடத்தில் எந்தச் செடி அல்லது மரத்தைக் கண்டாலும், விதை கிடைத்தாலும் அதை எடுத்துவந்து வீட்டுத் தோட்டத்தில் வைத்து வளர்ப்பேன்.

மருத்துவம் பயின்றபோது, எனக்கு நேரம் கிடைக்கவில்லை. தற்போது மருத்துவமனையைத் தொடங்கிய பிறகு எனது லட்சியத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறேன். ஆனால் தோட்டத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற பழைய லட்சியம் அல்ல, கண்ணில் காணும் எல்லா இடங்களிலும் மரங்களை வளர்த்துவிட வேண்டும் என்ற புதிய லட்சியம்தான் அது.

இதற்காக 2018இல் "உயிரின் சுவாசம்' எனும் அறக்கட்டளையைத் தொடங்கினேன். 2022ஆம் ஆண்டுக்குள் 2 கோடி மரங்கள் என்ற இலக்கைக் கொண்டிருந்தேன். ஆனால் கரோனா இடைவெளியால் அதை எட்ட முடியாமல் போனது. இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும், விவசாயிகளின் தோட்டங்களிலும் நடவு செய்திருக்கிறேன்.

100 மாதங்களில் 10 கோடி மரங்கள் என்பது இலக்கு. பெரிய இலக்குதான் என்றாலும், சிறிது சிறிதாகச் செய்தால் எட்டிவிடும் இலக்குதான்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்குள் 75 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கை வைத்து உயிரின் சுவாசம் பயணிக்கிறது. இதற்காக எங்கள் அமைப்பின் சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகளைத் தயாராக வைத்திருக்கிறோம். 10 லட்சம் பனை விதைகள், 50 லட்சம் விதைப் பைகளைத் தயாரிக்கிறோம்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வார இறுதியில் பயணம் செய்து விவசாயிகளிடம் பேசி, அவர்களின் தோட்டங்களில் தேக்கு, மகோகனி, மலைவேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு, சமூகக் காடுகளை உருவாக்குவதுடன், அவர்கள் நிலையான வருவாய் ஈட்டமுடியும் என்றும் பேசி வருகிறேன்.

விவசாயிகள் தங்களின் பட்டா, சிட்டா, அடங்கல் ஆவண நகல்களைக் கொடுத்து எங்களிடம் மரக்கன்றுகளை பெற்றுச் செல்கின்றனர்.

கோவை ராயல் கேர் மருத்துவமனையில் மிகப் பெரிய நர்சரியை அமைத்து, நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், பார்வையாளர்கள் என தினமும் பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, 3 ஆயிரம் மரக்கன்றுகள் வரை வழங்கப்படுகின்றன.

செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்துவிட்டு 4 மரக் கன்றுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தோம். தற்போது எத்தனை தேவைப்படுகிறதோ அத்தனையையும் எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

"மரங்கள் இருந்தால் எல்லாமும் நன்றாக இருக்கும்' என்பது எனது எண்ணம். அதற்காக எனது வருவாயில் 20 சதவீதத்தை மரக்கன்றுகள் நடுவதற்காகவே பயன்படுத்தி வருகிறேன்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, பொது இடங்களை அசுத்தப்படுத்தாமல் இருப்பது, குப்பைகளை வீசாமல் இருப்பது, தாவரங்கள், விலங்குகளுக்கு தீங்கிழைக்காமல் இருப்பது போன்று தங்களின் சில செயல்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தாலே அவர்கள் சுற்றுச்சூழலுக்கு பேருதவி செய்பவர்களாவார்கள்.

இயற்கை அன்னையாக வழங்குவதுடன் நிற்காமல், சூழலையும், அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டும். இயற்கை பாதுகாக்கப்பட்டால் அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்படும். அதன்மூலம் மனித வளமும் பாதுகாக்கப்படும்'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com