சூழலை தீர்மானிக்க முடியாத மனிதன்!

ஒரு சினிமா ரசிகனாக எனக்கு சார்லி சாப்ளின், பாலுமகேந்திரா சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும்.
சூழலை தீர்மானிக்க முடியாத மனிதன்!

ஒரு சினிமா ரசிகனாக எனக்கு சார்லி சாப்ளின், பாலுமகேந்திரா சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதித்தவர். இரண்டாம் உலகப் போர் சமயம், உலகம் முழுக்கவே போர் அழுத்தம் மக்கள் மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கி இருந்தபோது, தன் சினிமாக்களில் பிரியத்தையும் நேசத்தையும் நிரப்பிக் கொடுப்பார் ஃப்ராங்க். சார்லி சாப்ளின், பாலுமகேந்திரா சார் படங்களிலும் நீங்கள் அந்த அழகை ரசிக்கலாம். நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுதான் இதை எடுத்தேன். படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது.  பெரிய திட்டம் எதுவும் இல்லை. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்.'' நம்பிக்கையாக பேசுகிறார் இயக்குநர் வினோத் இராஜேந்திரன். "இளமை என்னும் பூங்காற்று' உள்ளிட்ட படங்களை இயக்கி அறிமுகம் உள்ளவர். இப்போது "ஃபைண்டர்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

தலைப்பின் வழியாக எதுவும் சொல்ல வர்றீங்களா...

"ஃபைண்டர்' என்பதற்கு திருக்குறளில் அறிவன் என்று அருமையான பொருள் இருக்கிறது. இருந்தாலும் இன்றைய வியாபார உலகம் வேறு மாதிரி இருக்கிறது. அதுவும் ஓ டி டி தளங்கள் உருவான பிறகு தமிழ் சமூகம் என்றில்லாமல் எல்லோருக்குமான தலைப்பை உருவாக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். அதனால்தான் ஆங்கிலத்தில் தலைப்பு. இது சினிமா வியாபாரத்தில் இப்போது தவிர்க்க முடியாதது. எல்லோரும் பொருத்தருள வேண்டும். அதே நேரத்தில் கதையின் மனசாட்சியை இந்த தலைப்பு பிரதிபலிக்கும்.  காந்தியும் ஹிட்லரும் ஒரே தெருவில் இருந்தால் எப்படியிருக்கும். அப்படி எழுகிற ஒரு சூழலை கடக்கிற சில மனிதர்களின் கதைதான் இது. சந்தோஷத்தை எதிர் கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனுஷனுக்கு அவ்வளவு பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம். அது அந்த நேரத்தில் அழகாக இருக்கும். கீரிடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக நிற்கும். ஒரு கட்டத்தில் ஏசுநாதர் தலையில் இருந்த முள் கீரிடம் மாதிரி குத்தும். அதனால்தான் உண்மையை கண்டு ஓடி ஒளிகிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்கு தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க... பலர் சாமியாராக திரிகிறாரகள். சிலர் பைத்தியமாகிறார்கள். என்னை கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உயிரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படியோர் அனுபவம் இங்கே சிலருக்கு கைக் கூடி வருகிறது.

உள்ளடக்கம் பற்றி பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்கும்...

எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவு, நண்பர்கள் மாற்றி எழுதும் வாழ்வு என சிக்கல்கள் ஏராளம். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது மனித வாழ்வுக்கு  அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும்... அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். அமெரிக்காவில் இன்னசன்ட் ப்ராஜக்ட் என்று ஒரு டீம் உண்டு. யாராவது சூழ்நிலையால் தவறாக குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அல்லது தவறுதலாக சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொண்டால் அவர்களுக்கு உதவும். அப்படி இங்கே ஃபைண்டர் என்று ஒரு டீம். அதில் அவர்கள் சந்திக்கும் ஒரு வழக்குதான் கதை. நிறைய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

சார்லி.... இப்படி உருவெடுத்து வந்திருக்கிறார்....

இங்கே வருகிற ஹீரோ ஒரு அப்பாவித்தனம் கொண்டவராக இருக்க வேண்டும். அந்த இடத்தில் நான் சார்லி சாரைத்தான் பொருத்தி பார்த்தேன். சின்ன வயதில் இருந்தே அவரின் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அவரை காமெடி நடிகர் என்ற வட்டத்தில் மட்டும் நான் பொருத்தி பார்க்கவில்லை. "வெற்றிக் கொடிக்கட்டு' மாதிரியான சில படங்களில் படத்தை தூக்கி பிடித்து இருப்பார். அது என் மனதில் ஓடி கொண்டே இருந்தது. இதுதான் கதை என தீர்மானம் செய்த நொடியில் இருந்து அவர்தான் இதில் ஹீரோ. ஒரு நடிகர் இத்தனை வருடம் மக்களை சந்தித்துக் கொண்டே இருப்பது சிரமம். அந்த வகையில் சார்லி சார் பெரும் உழைப்பாளி. அவர் இப்போது அதிகமான படங்களில் நடிப்பதில்லை. சமீபத்தில் "எறும்பு' என்றொரு படம். நல்ல வரவேற்பில் இருக்கிறது. அது மாதிரியான படங்களைத்தான் இப்போது அவர் விரும்புகிறார். அதனால் அவரை என்னால் எளிமையாக அணுக முடிந்தது. கிட்டத்தட்ட 850 படங்களில் நடித்திருக்கிறார். அது எவ்வளவு பெரிய சாதனை. என் கதையை கேட்டதும் தேவையான விளக்கங்களை கேட்டு நடிக்க சம்மதம் தந்தார். பீட்டர் என்கிற மீனவர் கதாபாத்திரத்தில் வருகிறார். அதே போல் சென்றாயன் இன்னொரு இடத்தில் பொருந்தி வருகிறார். 

வைரமுத்து பாடல்கள் என்ன விசேஷம்...

இந்தப் படம் இப்போது தனித்து தெரிய வைரமுத்து சார்தான் காரணம். அவரின் மிகப் பெரிய ரசிகன் நான். பள்ளி, கல்லூரி நாள்களில் அவர் பாடல்கள்தான் நமக்கு எல்லாம். கவிதைகள் அவ்வளவு உத்வேகம். இந்தக் கதையில் வெவ்வேறு இடங்களில் மூன்று சூழல்கள். அதை வைரமுத்து சாரின் பேனாதான் நிரப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதை அவர் தன் கவிதையில் நிரப்பி தந்திருக்கிறார். ஓரிடத்தில் ஊக்கம் தருவதாக இருக்க வேண்டும் என்று சூழல் சொன்னேன். "திசைகள் எட்டு... விரல்களோ பத்து...' என எழுதி இந்தப் படத்தை பூர்த்தி செய்தார்.  சமூகத்தின் தற்போதைய தேவை உணர்ந்து நான் எடுத்து வைக்கிற ஒரு கதை இது. உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் ரசிக்கவும்தானே வாழ்க்கை. என் வாழ்க்கையை நானே வாழ்ந்து பார்க்கும் தருணம் இது.  லட்சக்கணக்கான மக்களைச் சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்  சுப்பிரமணியம் சாருக்கு நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com