கற்க கசடற..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளைக் கவரும் வகையில் கற்பித்தலில் புது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கற்க கசடற..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளைக் கவரும் வகையில் கற்பித்தலில் புது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, குழந்தைகளுக்கு வெறும் வண்ணச் சுவர்களோடு நின்றுவிடாமல், விளையாடி எழுத்துகளைப் புரிந்து கொள்ளும் வகையில் "பாலா' எனும் கட்டட வழி கற்பித்தல் முறையை மேற்கொண்டுள்ளனர்.

மழலைகளுக்கு கல்வி கற்பிப்பது எளிதானதல்ல; விளையாட்டு, நடிப்பு, கதை கூறுதல் உள்ளிட்ட நூதன முறையில் ஆசிரியர்கள் கற்பித்தால் மட் டுமே குழந்தைகளை தங்கள் வசம் இழுக்க முடியும்.

பொதுவாக அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ண ஓவியங்கள், கார்ட்டூன்கள் வரையப்பட்டிருக்கும். ஆனால் கோபாலபுரம் அங்கன்வாடி மையத்தில் சற்று வித்தியாசத்துடன் கட்டட வழி கல்வியைக் கற்று தரும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

இந்த மையம் 3,500 சதுர அடியில் ரூ.18.60 லட்சம் செலவில் அறிவியல்பூர்வமாக புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள காட்சி கவனிப்பானது இரண்டு வயது முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு கற்பனை திறனை வளர்ப்பதுடன், அறிவாற்றலையும் தரும் வகையில் உள்ளது.

"பாலா' எனப்படும் "பில்டிங் அஸ் ஏ லெர்னிங் ஏய்ட்' எனப்படும் கட்டட வழி கற்பித்தல் காட்சி கவனிப்பு, அடிப்படை கல்வியை வண்ணமயான ஓவியங்கள், விளையாட்டு மூலம் குழந்தைகளை எளிதில் கல்வி கற்க உதவுகின்றன. இந்தக் கட்டடத்தின் முகப்பு பகுதியில் வனப்பகுதியில் உள்ள மலைகள், மரங்கள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட் டுள்ளன.

வன விலங்குகளின் கார்ட்டூன் ஓவியங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

அங்கன்வாடி சுவர்களில் தமிழ் எழுத்துகளை குழந்தைகள் அசைத்து பார்த்து விளையாடும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. நகரும் வகையிலான அபாகஸ், சுவர்களில் எண்கள், ஆங்கில எழுத்துகள் பல்வேறு வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் அங்கன்வாடி வளாகத்தில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஊஞ்சல், சறுக்குதல் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் குதிப்பது, விளையாடுவது உள்பட பல்வேறு விளையாட்டு வழிகளில் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகின்றன.

இங்கு வரக்கூடிய குழந்தை கள் விளையாட்டுடன் கல்வி கற்பதால் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாக அங்கன்வாடி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:

"குழந்தைகளுக்கு, பாலர் பள்ளி சிறந்த கல்வியாற்றல் தன்னம்பிக்கையை உருவாக்குகிறது. இதுபோன்ற நிலையில் கல்வி கற்கும்போது சிந்திக்கும் திறன் அதிகரிக்கும், அது அவர்களது எதிர்காலத்துக்கு பேருதவியாக இருக்கும். இந்தக் கல்வி முறை குழந்தைகளின் விளையாட்டு உணர்வை அதிகப்படுத்துகிறது. அறிவியல் பூர்வமாக கட்டப்பட்ட பாலா அங்கன்வாடி மையம் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் எப்பகுதியைப் பார்த்தாலும் அவர்கள் ஏதோ ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள முடியும். இந்த அங்கன்வாடி மையத்துக்குள் வரும் குழந்தைகளுக்கு வனத்திற்குள் வருவது போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்கும்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com