மீனவ நண்பன்

மீனவர்களின் நலனில் அக்கறையுடன்  பல ஆண்டுகளாகச் செயல்படுபவர்  ஜஸ்டின் ஆண்டனி.
மீனவ நண்பன்

மீனவர்களின் நலனில் அக்கறையுடன் பல ஆண்டுகளாகச் செயல்படுபவர் ஜஸ்டின் ஆண்டனி.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, சர்வதேச எல்லையைக் கடந்ததாக பிற நாடுகளின் காவலர்களால் கைது செய்யப்பட்டாலோ, ஆபத்துகளில் சிக்கினாலோ மீனவர்கள் நாடுவது ஜஸ்டின் ஆண்டனியைதான். மனிதவள மேம்பாட்டு வல்லுநரான இவர், "மீனவர் நல அறக்கட்டளை' ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'சின்னத்துறை கிராமத்தில் மீனவர் குடும்பத்தில் பிறந்ததால், மீனவர்களின் நிலையை அறிவேன்.

காணாமல் போகும் மீனவர்களுக்காகக் கிராமமே கடற் கரையில் கண்ணீருடன் காத்துக் கிடக்கும். அதுமாதிரியான தருணங்களிலும், புயல் நேரங்களிலும் மீனவர்களை மீட்கவும், குடும்பங்களுக்கு உதவிடவும் ஆட்சியர்கள்தான் முடிவு செய்வர். இதனால் ஆட்சியராக விரும்பி பலமுறை முயற்சித்து தேர்வுகள் எழுதியும்ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற முடியவில்லை.

மனித வளத் துறையில் பயிற்சி பெற்று, வளைகுடா நாடுகளில் தனியார் நிறுவன ஊழியர்கள், நிர்வாகிகளுக்கு பயிற்சியை அளித்துவந்தேன்.

இந்த நேரத்தில் சவூதி அரேபியாவில் உள்ள ஜுபைல் நகரில் மீன்பிடி தொழிலாளர்களாகப் பணிபுரியும் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களைச் சந்திக்க நேர்ந்தது. படகு உரிமையாளர் சவூதியைச் சேர்ந்தவர்.

மீனவர்களில் ஒருவருக்கு கடுமையான வியாதி. உரிய மருத்துவ வசதிகளை செய்து தராமல் வேலை மட்டும் வாங்க, நோயால் பாதிக்கப்பட்டவர் உடல் நலம் குன்றினார். இந்தியத் தூதரகத்திடம் மீனவர்கள் சார்பாக உதவி கேட்டும் கிடைக்கவில்லை. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு விஷயத்தை மின் அஞ்சலில் தெரிவித்தபோது, பலன் கிடைத்தது.

இந்தியத் தூதரகம் என்னை அழைத்துப் பேசி சவூதி அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து, அந்த மீனவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இதர மீனவர்களின் கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவம்தான் எனக்கு தூண்டுகோலாக அமைந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட தூத்தூர் மீனவர்கள் கொல்கத்தா சென்று அங்கு தங்கி கடலில் மீன் பிடிப்பார்கள். அப்போது, வங்க தேசத்தின் கடல் காவலர்களால் 3 படகுகளுடன் 26 மீனவர்களையும் கைது செய்து, மோங்ளா சிறையில் அடைத்தனர். நான் அங்கு சென்று, அந்த நாட்டின் வழக்குரைஞர் உதவியுடன் நீதிமன்றம் மூலம் மீனவர்களை விடுவித்தேன். இவ்வாறு மீனவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து உதவுகிறேன். குரலற்ற மீனவர்களின் குரலாக அமைந்த எனது செயல்பாடுகள், ஐ.நாவின் சர்வதேச இளைஞர் குழு உறுப்பினராக தேர்வு பெறவும், அந்தக் குழு அபுதாபியில் நடத்திய கருத்தரங்கில் சொற்பொழிவு ஆற்றவும் வாய்ப்பு பெற்றுத் தந்தது.

இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக, கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளேன். அந்த நூல்களை வாசித்த குடியரசுத் தலைவர்களாக இருந்த அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பாராட்டினர்.

மீனவர் நலனுக்காக எனது பங்களிப்பினைப் பாராட்டி, பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் செய்வது குறித்து விழிப்புணர்வு வகுப்புகளையும், தன்னம்பிக்கை வளர்த்தல் தொடர்பான கருத்தரங்குகளையும் நடத்திவருகிறேன்.

நெல்சன் மண்டேலா நினைவு தினத்தை முன்னிட்டு , ஐ.நா.சபை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் எனது சொற்பொழிவு பதிவு செய்யப்பட்டு அமெரிக்காவிலிருந்தே ஒலிபரப்பப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com