வரலாறு காட்டும் ஏரி பராமரிப்பு

சென்னைக்கு அருகே குன்றத்தூரிலிருந்து சுமார் 10 கி.மீ.  தொலைவில் "சோமங்கலம்'  என்ற ஊர் அமைந்துள்ளது.
வரலாறு காட்டும் ஏரி பராமரிப்பு

சென்னைக்கு அருகே குன்றத்தூரிலிருந்து சுமார் 10 கி.மீ.  தொலைவில் "சோமங்கலம்'  என்ற ஊர் அமைந்துள்ளது.  இங்கு ஏரிக்கரையில் அமைந்துள்ள சோமநாதீசுவரர் கோயில் பல்லவர்கள் காலத்திலேயே சிறப்புற்று விளங்கியதற்கான அடையாளமாக, சிற்பங்கள் காணப்படுகின்றன.

இந்தக் கோயிலில் முதலாம் குலோத்துங்கச் சோழன்,  இரண்டாம் ராஜாதிராஜன்,  மூன்றாம் குலோத்துங்கச் சோழன்,  மூன்றாம் ராஜாதிராஜன், சுந்தரபாண்டியன், விஜயநகர மன்னன், மல்லிகார்ஜுனராயர், வீரப்பிரதாபதேவராயர் போன்ற மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் தொடர்ச்சியாகப் போற்றப்பட்டு வந்ததை அறிய முடிகிறது.  நவக் கிரகங்களில் சந்திரன் வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

இந்தக் கோயில் கல்வெட்டில் இவ்வூர்  "இராஜசிகாமணி சதுர்வேதிமங்கலம்', "பஞ்சநதி வாண சதுர்வேதி மங்கலம்'  எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டதைக் அறிகிறோம்.

கோயிலின் அருகே உள்ள ஏரி மிகப் பெரிய அளவு உடையதாக விளங்குகிறது. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சி காலத்தில் (கி.பி. 1178-1218) 12-வது ஆட்சி ஆண்டு (கி.பி. 1190) ஆண்டில் பெரும் மழை பெய்து சோமங்கலம் ஏரியில் ஏழு இடங்களில் உடைப்பு எடுத்தது.  இதை கண்ட "திருச்சுரக்கண்ணப்பன் திருவேங்கம்பமுடையான்" என்பவர் அவற்றை அடைத்து சரி செய்தார். இதன்பிறகு இதே சோழ மன்னரின் 13-ஆவது ஆட்சி ஆண்டிலும் இரண்டு இடங்களில் ஏரிக்கரை உடைப்பு ஏற்பட்டது.

அதனையும் திருச்சுரக்கண்ணப்பனே சரிசெய்து ஊரையும், வேளாண்மைக்கும் பெருந்தொண்டு செய்துள்ளதை அறிய முடிகிறது. "திருச்சுரம்" என்பது இன்று "திரிசூலம்" என அழைக்கப்படும் ஊராகும்.  ஏரியை சீரமைத்த திருச்சுரக்கண்ணப்பன் இவ்வூரைச் சேர்ந்தவனாக இருந்திருக்க வேண்டும்.

பின்னர் இந்த மன்னரின் 14-வது ஆட்சி ஆண்டில் இவ்வூர் சபையினர் 40 பழங்காசுப் பெற்று,  அதனால் கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும் ஏரியை தூர் எடுத்துக் கரையை பராமரிக்கவும், பலப்படுத்தவும் செய்தனர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.  இந்த நற்காரியத்தை  சூரியன்,  சந்திரன் இருக்கும் வரை செய்வோம் என்று உறுதி அளித்தனர் என அறிய முடிகிறது.

பண்டைய நாளில் வேளான்மைக்கும், ஊர் மக்களுக்கும் பெரும் பயன்படும் ஏரியை தூர் எடுத்துக் கரையை உறுதியாக்கும் செயலை ஊர்சபை செய்து வந்த செய்தியை கோயிலில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுவதும், ஊர் மக்களின் பங்களிப்பையும் அறிய முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com