ஒன் மேன் சினிமா!

போலி சாமியார்களும், பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கும் ஜோதிடர்களும் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை நெகிழ்ச்சியான காட்சிகள், நேர்த்தியான...
ஒன் மேன் சினிமா!

போலி சாமியார்களும், பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கும் ஜோதிடர்களும் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை நெகிழ்ச்சியான காட்சிகள், நேர்த்தியான திரைக்கதை, சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் இயல்பான நகைச்சுவை வசனங்கள் என "வெங்காயம்' படத்தின் மூலம் யதார்த்தமாகச் சித்திரித்திருந்த சங்ககிரி ராச்குமாரின் அடுத்த முயற்சி "ஒன்'.

திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, தயாரிப்பு, நடிப்பு ஆகியவற்றை ஒருவரே செய்யும் டி.ஆர். பாணி சினிமாவையும் முறியடிக்கும் வகையில் கிரேன் ஆபரேட்டர் முதல் கேமிரா வரை, சவுண்ட் மிக்ஸிங் முதல் கிராபிக்ஸ் டிசைனர் வரை... "ஒன்' படம் தொடர்பான அனைத்து வேலைகளையும் இவர் ஒருவரே செய்திருக்கிறார்.

ஒரு நபர்.. ஒரு சினிமா சாத்தியமா... என திகில் கேள்வியை நாம் எழுப்ப, படத்தின் சில காட்சிகளை நமக்கு திரையிட்டுக் காட்டினார். கேமிராவை ஓட விட்டு, அதன் வேகம் பரவ தொடங்குவதற்குள் போய் நின்று நடிக்கிறார். அடுத்தக் காட்சிக்கான ஆர்ட் டைரக்ஷன் தொடங்கி, முந்தைய காட்சிக்கான மானிட்டர் சரி பார்த்து, தானே மேக்கப் போட்டுக் கொள்ள தயாராகிறார்... காட்சிகளின் நகர்தலை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த என் வியப்பை ஓரக் கண்ணால் ரசித்தப்படியே பேசத் தொடங்குகிறார் இயக்குநர் ராச்குமார்.

எவ்வளவோ எளிமையாகி விட்ட சினிமாவில், இப்படியொரு முயற்சி ஏன் தேவையாக இருந்தது....

இப்படியொரு சினிமா உருவாக்க வேண்டும் என்பது என் ஆசையாகவே இருந்தது. அதற்காக ஒரு திரைக்கதையை வடிவமைத்து வைத்திருந்தேன். இதற்காக எல்லா வேலைகளையும் நாம்தான் செய்ய வேண்டும் என்று நினைத்து, ஒவ்வொரு கலையாக கற்றுக் கொண்டு வந்தேன். எனக்கு அந்த தகுதி வந்து விடும் என்று நம்பினேன். இதற்கிடையில் "வெங்காயம்' படம், பல விதமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் படத்தின் லாப, நஷ்ட கணக்குகள் என்னை கொஞ்சம் முடக்கி விட்டது. கொஞ்சம் நாள்கள் கடந்ததும், பொருளாதார ரீதியாக என்னை நானே தயார் செய்து கொண்டு இந்த ஓட்டத்துக்கு தயாராகி வந்தேன். கதைக் களத்தில் தொடங்கி, மேக்கிங் விடியோ வரைக்கும் எல்லாமே என் உழைப்பில் உருவானது. கேமிரா, கிரேன் தொடங்கி ஒவ்வொரு பொருளாக வாங்கி, தேவை முடிந்ததும் அதை விற்று வேறு பொருள்களை வாங்கி படப்பிடிப்பை நடத்தினேன். ஒரு கார் வாங்கினேன். அதில் பொருள்களை ஏற்றிக் கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விடுவேன். கேமிராவை செட் செய்து விட்டு நான் நடிக்க ஆரம்பித்து விடுவேன். டிராலியையும் கிரேனையும் மோட்டார் மூலமாக இயக்குவேன். கையில் பணம், படப்பிடிப்புக்கு ஏற்ற பருவநிலை இருந்தால், அடுத்த நிமிடமே படப்பிடிப்புக்கு சென்று விடுவேன். இப்படித்தான் இந்தப் படத்தை முடித்திருக்கிறேன்.

எல்லாம் சரி... இவ்வளவு மெனக்கெடல்கள் ஒரு சினிமாவுக்கு தேவைதானா... ஏன் ஒருவரே எல்லா வேலையையும் செய்யணும்?'

இதில் சொல்ல வருகிற விஷயம் உலகத்துக்கானது. இயற்கைதான் ஆதி விவசாயத்தின் ஆதாரம். இப்போது எல்லாம் மாறி விட்டது. நிலங்களை செயற்கை உரங்களுக்கு தாரை வார்த்து விட்டோம். விளைவு பாம்பு, தவளை, நண்டு, மண்புழு என எந்த உயிரினங்களும் நிலத்தில் இல்லை. எல்லாவற்றையும் செயற்கை உரங்களுக்கு பலியாக்கி விட்டோம். நண்டு, மண்புழு எல்லாமே விவசாயிகளின் தோழர்கள். இதுவில்லாமல்தான் இப்போது விவசாயம் நடந்து வருகிறது. முழுக்க முழுக்க செயற்கையாகி விட்ட இந்த மனித வாழ்க்கையை உரசி பார்க்கும் ஒரு கதைக் களம் இது. அதனால் இந்தக் கதைக்கு மொழி தேவையாக இல்லை. யார் பார்த்தாலும் புரியும். இதை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் பொருளாதார பலம் என்னிடம் இல்லை. வித்தியாசமாக ஏதாவது செய்தால், திரும்பி பார்க்க வைக்கலாம் என்ற யோசனை இருந்தது. அதற்காகத்தான் இந்த வித்தியாசமான முயற்சியில் இறங்கினேன். "127 ஹவர்ஸ்', "தி பரேட்', "காஸ்ட் அவே' படங்கள் சின்ன பட்ஜெட்டில் மிகக் குறைந்த நபர்களால் எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால், உலக அளவில் எல்லோருக்கும் போய் சேர்ந்தது. காரணம் அந்தப் படங்களின் மேக்கிங்தான். கதை சொல்லப்படுகிற விதத்தில் வித்தியாசம் காட்டியிருந்தார்கள். அப்படித்தான் நானும் வித்தியாசம் காட்ட விரும்பினேன். அதனால் இதை பெரும் சிரத்தையோடு செய்து முடித்திருக்கிறேன்.

எந்தளவுக்கு சுவாரஸ்யம் சேர்ந்திருக்கும்...

ஏதோ ஒரு வித்தியாசத்துக்காக மட்டுமே என்னால் படம் எடுக்க முடியாது. அதைத்தாண்டி நான் செலவு செய்த பணம் கைக்கு வந்து சேர வேண்டும். அதுவும் இதில் முக்கியமாக இருக்கும். இது ஒரு பரபரப்பான படம். விறுவிறுப்பான படம். கமர்ஷியல் படத்துக்கான எல்லா அம்சங்களும் ஒருங்கே அமைந்த படமாகவும் இது வந்திருக்கிறது. நான்கு நண்பர்கள் ஒரு அடர்ந்த காட்டை தாண்டி, ஊருக்கு செல்கிறார்கள். அப்போது நடக்கிற விபத்தால், அநத் காட்டுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் இந்த உலகத்தையே பத்து நாள்களுக்கு செயல் இழக்க செய்யும் கருவி அவர்களின் கையில் கிடைக்கிறது. அப்போது அவர்கள் என்ன செய்வார்கள்.. இதுதான் படம். அந்த நான்கு கதாபாத்திரங்களிலும் நானே நடித்திருக்கிறேன். முழுக்க முழுக்க என் முகம் மட்டுமே வராது. கதைப் படி வேற வேற கேரக்டர்கள் வரும். எல்லாவற்றிலும் நானே நடித்து கிராஃபிக்ஸ் செய்திருக்கிறேன். ஓகேனக்கல், தலக்கோணம், இமயமலை தொடங்கி அமெரிக்கா வரை கதை நீளும். பெரிய மெனக்கெடல்கள், நிறைய உழைப்பு போட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com