திருமடத்தில் பூஜிக்கப்படும் திருவாசக மூல ஓலைச்சுவடி!

தமிழ்த் தாயின் பெருமைகளையும்,  அருமைகளையும் அறிய பக்தி இலக்கியங்கள்தான் முக்கிய காரணம்.
திருமடத்தில் பூஜிக்கப்படும் திருவாசக மூல ஓலைச்சுவடி!

தமிழ்த் தாயின் பெருமைகளையும், அருமைகளையும் அறிய பக்தி இலக்கியங்கள்தான் முக்கிய காரணம். இவற்றில் மதுரை திருவாதவூர் மாணிக்கவாசகர் எழுதிய "திருவாசகம்'  என்பது தெய்வத்தின் குரலாகவே கருதப்படுகிறது.  அதனால்தான் மொழிகள் கடந்து, தேசம் கடந்து, சமயம் கடந்து படிக்கும் அனைவரையும் பக்தியால் வசீகரிக்கும் இறைதன்மையைப் பெற்றதாக விளங்குகிறது. 

"திருவாசகத்துக்கு உருகார், ஒரு  வாசகத்துக்கும் உருகார்'  என்ற பழமொழியும் வழக்கத்திலுள்ளது.  கிறிஸ்தவம் பரப்ப வந்த ஜான் போப்பும் திருவாசகத்தின் மாணவராகிப் போன அதிசய வரலாறும் நிகழ்ந்துள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க திருவாசகத்தின் மூல ஓலைச்சுவடி புதுச்சேரியில் அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடத்தில் பாதுகாக்கப்பட்டு, தினமும் பூஜை செய்யப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி காளத்தீஸ்வரர் கோயில் அருகே உள்ள அம்பலத்தாடும் மடம் தெருவில் உள்ள அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடத்தில் தற்போது 33- ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கனகசபை சுவாமிகளிடம்  பேசியபோது:

'மதுரை பாண்டிய மன்னர்கள் காலத்தில் பழம்பெருமை மிக்கதாக இத்திருமடம் விளங்குகிறது.  பல நூற்றாண்டுகள் கடந்த மடத்தின் 9- ஆம் பட்டமாக விளங்கிய நாகலிங்க சுவாமிகளே சிதம்பரத்திலிருந்து புதுச்சேரிக்கு திருவாசகத்தின் மூல ஓலைச்சுவடியைக் கொண்டு வந்து பாதுகாத்துள்ளார்.

கி.பி. 1310- ஆம் ஆண்டில் பாண்டிய நாட்டை மாலிக்காபூர் படையெடுத்தபோது, மதுரையிலிருந்து மன்னன் வீரபாண்டியன் தப்பியோடினார். அவர் சிதம்பரத்தில் இருக்கலாம் என்ற அடிப்படையில் மாலிக்காபூர் சிதம்பரத்துக்கு படையுடன் வந்தார்.

சிதம்பரத்தில் உள்ள அம்பலத்தாடும் ஐயர் மடத்து 10 -ஆவது பட்டம் வகித்த நாகலிங்க சுவாமிகளோ, மாணிக்கவாசகரின் திருவாசக மூல ஓலைச்சுவடியைப் பாதுகாத்துள்ளார். ஆகவே, திருவாசக ஓலைச்சுவடியானது மடத்தில் இருப்பதை மாலிக்காபூர் அறிந்தால் அதை அழித்து விடும் அபாயத்தை உணர்ந்து,  அஞ்சிய நாகலிங்க சுவாமிகள் இறைவனை நினைத்து தியானித்து, இறை அருள்கூறியபடி புதுச்சேரிக்கு ஓலைச்சுவடியைக் கொண்டு சென்று பாதுகாக்க முடிவெடுத்தார். அதன்படி சிதம்பரத்திலிருந்து, இரு தொண்டர்களுடன் ஓலைச்சுவடி உள்ளிட்டவற்றுடன் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.
திருவாசக மூல ஓலைச்சுவடியை பட்டுத் துணியால் கட்டி, இறந்தாரைச் சுமக்கும் பாடையில் வைத்து, அதனுடன் பாண்டிய மன்னர் அளித்த மாணிக்கவாசகரது சிறிய திருவுருவச் சிலையையும் மறைத்து வைத்து இறுதி ஊர்வலம் போவது போலவே தொண்டர்களுடன் சுவாமி புறப்பட்டார்.

மாலிக்காபூர் படைகளது கடுமையான சோதனைக்கு இடையே, அச்சத்துடனும் அவர்கள் கடலூர் வழியாக புதுச்சேரிக்கு வந்தடைந்தனர். கடற்கரையோரத்தில் ஓலைக்குடிசையில் வைத்து திருவாசகத்தை போற்றி தினமும் பூஜித்து பாதுகாத்த நாகலிங்க சுவாமிகள், பின்னர் தற்போதைய மடத்தையும் நிறுவி அதில் திருவாசக மூல ஓலைச்சுவடியையும் பாதுகாத்துள்ளார்.

திருமடத்தில் உள்ள திருவாசக மூல ஓலைச் சுவடியானது சுமார் 300 பனை ஓலை இலைகளால் ஆக்கப்பட்டுள்ளது. அதில்,  இருபுறமும் எழுத்தாணியால் திருவாசக திருமுறைகள் எழுதப்பட்டுள்ளன. அந்த திருவாசக மூல ஓலைச்சுவடியானது 2 அடி உயரமும் 2 அடி அகலமும் உள்ள வெள்ளிப் பேழைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஓலைச்சுவடி மீது தாமிரப் பட்டயம் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டுள்ளது.

ஓலைச் சுவடியை பாதுகாப்பதற்காக ஜவ்வாது, புனுகு, ஸ்பெயினில் இருந்து கொண்டுவரப்படும் அத்தர் ஆகியவை ஆண்டுக்கு ஒரு முறை அதன் மீது பூசப்படுகிறது.

திருமடத்தில் உள்ள அம்பலத்தாடும் நடராஜர் திருமேனி முன்பு உள்ள திருவாசக மூல ஓலைச்சுவடிக்குத் தினமும் காலையில் முதல் பூஜை நடைபெறும். அப்போது நடராஜருக்கு திருவாசகம் முற்றோதல் நடைபெறுகிறது.

ஆண்டு தோறும் ஆனி 7- ஆம் தேதி நாகலிங்க சுவாமிகள் குருபூஜையின் போதும் திருவாசக மூல ஓலைச்சுவடிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறது. மகா சிவராத்திரி அன்று திருவாசக மூல ஓலைச்சுவடி வெளியே எடுக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. அப்போது புகைப்படம் எடுக்கவோ, விடியோ எடுக்கவோ யாருக்கும் அனுமதியில்லை. அவ்வளவு ரகசியமாகவே தற்போதும் திருவாசக மூல ஓலைச்சுவடி பாதுகாக்கப்பட்டுவருகிறது. 

இறைவன் அருளியதால்,  கருவறைக்குரிய பாதுகாப்பு திருவாசக மூல ஓலைச்சுவடிக்கும் அளிக்கப்பட்டுவருகிறது.

தெய்வத் தமிழாம் திருவாசகத்தைப் போற்றி, பாதுகாக்கும் பணியில் திருமடம் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இசையமைப்பாளர் இளையராஜா தனது திருவாசக இசைத்தட்டை இந்த மடத்தில் பாடிய பிறகே வெளியிட்டார்.

புதுச்சேரியில் உள்ள யாழ்ப்பாண அப்பார் உள்ளிட்ட பல்வேறு சித்தர்களின் கோயில்களையும் மடம் பராமரித்து வருகிறது'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com