மாணவர்களுக்கு உதவும் தம்பதி

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றி வருகின்றனர் கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட ஒலம்பஸைச்  சேர்ந்த வி.ராமச்சந்திரன் - ஜெயஸ்ரீ தம்பதி.
மாணவர்களுக்கு உதவும் தம்பதி

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றி வருகின்றனர் கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட ஒலம்பஸைச்  சேர்ந்த வி.ராமச்சந்திரன் - ஜெயஸ்ரீ தம்பதி.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் தனியார் நிறுவனத்தில் மெஷினிஸ்ட்டாகவும், ஜெயஸ்ரீ இல்லத்தரசியாகவும் இருக்கின்றனர்.  கடந்த 5 ஆண்டுகளாக இவர்களது செயல்பாடுகள் அரசுப் பள்ளி மாணவர்கள் பலரின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. கட்டணம் செலுத்தி படிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக,  2018- ஆம் ஆண்டில் 'கோவை தோழமை அறக்கட்டளை'  என்ற ஓர் அமைப்பை இருவரும் ஏற்படுத்தினர்.

தொடக்கத்தில் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே டியூஷன் எடுத்தனர். பின்னர்,  ஒன்பதாம் வகுப்பு வரையாக விரிவுபடுத்தினர். கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவ,  மாணவிகள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர்.

தங்களது பயிற்சி மையத்தை ஒலம்பஸில் உள்ள ஒரு கோயிலின் மொட்டை மாடியில் மாத வாடகையாக ரூ. 3,500 செலுத்தி நடத்தி வருகின்றனர்.  மூன்று பணியாளர்களைப் பணி அமர்த்தியுள்ளனர். இவர்களுக்கு மாதம்தோறும்  ரூ.3 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ஜெயஸ்ரீ தன்னுடைய மாலை நேரத்தில் 6 முதல் 8 மணி வரை மாணவர்களுக்காக ஒதுக்கி பாடம் நடத்தி வருகிறார். வாரத்தில் 6 நாள்களும் அந்தக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை இருவரும்  உறுதிப்படுத்தி வருகின்றனர்.

இதுதவிர ராமச்சந்திரன் பல்வேறு சமூக சேவைகளையும் ஆற்றி வருகிறார். தன்னுடைய சம்பளத்தின் ஒரு பாதியை சமூக சேவைக்கு என ஒதுக்கி, அதில் வறுமையில் உள்ளவர்களின் ஈமச்சடங்குக்கு நிதியுதவி அளிப்பது, மருத்துவ உதவி, கல்வி உதவி ஆகியவற்றைச் செய்து வருகிறார்.

கரோனா காலத்தில் டியூஷனில் படித்த ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களை அளித்தும் உதவியுள்ளனர். இந்த அத்தனைப் பணிகளையும் ரூ. 40 ஆயிரத்துக்கும் குறைவான தங்களது சம்பளப் பணத்தில் இருந்து அவர்கள் செய்து வருகின்றனர்.  

இதுகுறித்து, ராமச்சந்திரன், ஜெயஸ்ரீ தம்பதி நம்மிடம் பகிர்ந்ததாவது:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கும்போது,  தரமான கல்வி என்பது உறுதி செய்யப்படும்.  

ராமநாதபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சில ஏழை மாணவர்களைப் பரிந்துரை செய்வார்கள். அவர்களுக்கு நாங்கள் கூடுதலாகப் பயிற்சியை அளிப்போம். 

நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதால் சில நேரங்களில் இரவு நேரப் பணி இருக்கும், தாமதமாக வீட்டுக்கு வர நேரிடும். எனவே, இந்த சூழ்நிலையை எல்லாம் எனது மனைவி  ஜெயஸ்ரீயே சமாளித்துவிடுவார்.  தனது மாலை நேரம் முழுவதையும் இந்தக் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவார்.

டியூஷனை நடத்துவதற்கு மாதம்தோறும் கிட்டத்தட்ட ரூ. 12 ஆயிரம் வரை செலவாகும். எங்களது ஊதியம், நண்பர்களின் பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டு இதனை நடத்தி வருகிறோம்.

கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.  எங்களால் முடிந்தவரை இப்பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com