மகாகவியின் தமிழ்த் தேசியம்

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மூதூர் மதுரையம்பதி பல்வேறு சிறப்புகளைப் பெற்றது.
மகாகவியின் தமிழ்த் தேசியம்

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மூதூர் மதுரையம்பதி பல்வேறு சிறப்புகளைப் பெற்றது. அந்த வகையில், மாமதுரையின் மணிகுடத்தில் ஜொலிக்கும் ரத்தினங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் நிகழ்வு, தமிழே இங்கு தமிழாசிரியராகப் பணியாற்றியது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்று முழங்கிய முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியார், தமிழாசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியது மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளி.

1904-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் பாரதியார் தமிழாசிரியராகப் பணியாற்றிய பதிவுகள் இந்தப் பள்ளியில் பொக்கிஷமாகப் பராமரிக்கப்படுகின்றன. பள்ளியின் மாணவர்கள் தெரு, தெருவாகச் சென்று திரட்டிய பணத்தில், 1966-இல் இந்தப் பள்ளியின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட பாரதியார் சிலை, மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

பாரதியாரின் 142-ஆவது பிறந்த நாள் டிச. 11-ஆம் தேதி இங்குள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பாரதியின் கவிதைகளை முழங்கிச் சென்ற தமிழார்வலர்கள் ஏராளம். அதேபோல, அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் என பாரதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திச் சென்றவர்கள் பலர்.

இந்த நிகழ்ச்சிக்கெல்லாம் சிகரமாக, முன்னெப்போதும் இல்லாத முத்தாய்ப்பாக அமைந்தது அன்றைய தினம் மாலை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 'தினமணி' சார்பில் நடைபெற்ற மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா. இதில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று, பாரதியியல் ஆய்வாளரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவருமான பேராசிரியர் ய. மணிகண்டனுக்கு மகாகவி பாரதியார் விருதையும், ரூ. 1 லட்சத்துக்கான பொற்கிழியையும் வழங்கிச் சிறப்பித்தார். உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.

பாரதியின் தமிழ்த் தேசியம்

'பாரதியைக் கொண்டாடதவர்களுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் அருகதையே கிடையாது' என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளுடன் விழாவைத் தொடங்கி வைத்த தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனின் வரவேற்புரையில்:

'உ.வே. சாமிநாதய்யர் வீதி, வீதியாக நடந்து தமிழகம் முழுவதும் பயணித்து, ஓலைச் சுவடிகளைத் திரட்டி அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தாமல் போயிருந்தால் இன்று 'செம்மொழித் தமிழ்' என்ற மரியாதை தமிழுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

இருப்பினும், முத்தொள்ளாயிரத்தில் ஒரு தொள்ளாயிரம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. அதேபோல, பாரதியின் அத்தனை எழுத்துகளும், படைப்புகளும்கூட முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆவணப்படுத்தப்படவில்லை. அந்தப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களில் ஒருவரான ய. மணிகண்டனின் பாரதியியல் ஆய்வுப் பணிகள் அளப்பரியவை. அந்த வகையில், தினமணியின் பாரதியார் விருதுக்கு மணிகண்டனை தேர்ந்தெடுத்தது மன நிறைவு அளிக்கிறது.

இன்று தமிழ்ப் பற்றியும் தமிழ்த் தேசம் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், உண்மையான தமிழ்த் தேசியத்தை பேசியவர் மகாகவி பாரதியார்தான்.

'வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழ், வாழிய பாரத மணித் திருநாடு' என்பதுதான் தமிழ்த் தேசியம். இதுதான் பாரதியின் சிந்தனை.

பாரதி விதைத்துவிட்டுப் போனதை எடுத்துச் செல்ல இயலாமல் தமிழகம் தடம் மாறிவிட்டது உள்ளபடியே வருத்தம் அளிக்கிறது.

தடம் மாறிவிட்ட பாதை மீண்டும் செப்பனிடப்பட்டு, ராஜபாட்டையாக மாற்றப்பட வேண்டும். ஆண்டுதோறும் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவை எழுப்பி அதன் மூலம் மீண்டும், மீண்டும் பாரதி, பாரதி என்ற குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த விழாவின் நோக்கம்'' என்றார்.

என்றும் எங்களுடன் பாரதி

விழாவுக்குத் தலைமை வகித்த மதுரைக் கல்லூரி வாரியத் தலைவரும், பெரும் புரவலருமான சங்கர சீத்தாராமன் பேசியபோது :

'பாரதியின் கனவில் மூழ்கி, முத்தெடுத்து, பொன்னும், பொருளும் அள்ளி வழங்கும் அருட்சுரங்கமாக விளங்கும் ய. மணிகண்டன் பாரதியார் விருதுக்கு மிகவும் பொருத்தமானவர். பாரதியார் எங்கள் பள்ளியில் பணியில் சேர்ந்து பணியாற்றியதும், அவர் தினமும் கையொப்பமிட்ட பதிவும் எங்களிடம் உள்ளது. ஆனால், அவர் தனது பணியைத் துறந்துச் சென்றதற்கான பதிவு ஏதும் எங்களிடம் இல்லை. எனவே, அவர் என்றும் எங்களுடன் இருப்பதாகவே நம்புகிறோம்'' என்று குறிப்பிட்டார்.

விருதுத் தேர்வு மிகப் பொருத்தம்

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது முன்னுரையில் :

'பாரதியார் காலமானபோது மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கூடியிருந்தனர் என்றே தமிழ்ச் சமுதாயத்தில் பொது கருத்தாகப் பதிந்துவிட்டது. ஆனால், பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே கொண்டாடப்பட்டவர் என்பதை மிக உறுதியாக, ஆதாரப்பூர்வமாக மணிகண்டன் நிறுவியிருப்பது மிகப் பெரிய ஆறுதலை, மன நிறைவை அளிக்கிறது. இன்றையச் சூழலில் பாரதியியல் ஆய்வாளர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணிவிடும் அளவில்தான் உள்ளது. அதில், முன்னணியில் இருக்கும் முனைவர் ய. மணிகண்டன், பாரதியார் விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்'' என்றார்.

சத்திய வார்த்தைகள்

விருது வழங்கி சிறப்புரை ஆற்றிய ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியபோது :

'பாரதியியல் ஆய்வாளர் ய. மணிகண்டன் தனது வாழ்நாளில் எத்தனைக் காலங்களை பாரதியியல் ஆய்வில் கழித்துள்ளார் என்பதை அறியும்போது பெரும் வியப்பாக உள்ளது. அவருக்கு விருது வழங்கியது பெருமைக்குரியது.

இந்தியாவில் 'மகாகவி' என்று போற்றப்படுவர்கள் கம்பர், காளிதாசர், பாரதியார் ஆகிய மூவர் மட்டும்தான். 'ஓங்கி வளந்ததோர் கம்பம் அதன் உச்சியிலேயே வந்தே மாதரம்' என்றார் பாரதி. இந்த வாக்கியத்தை உச்சரிக்கும் ஒவ்வொருவருக்கும் தாமே கம்பத்தின் மீதேறி வந்தேமாதம் என முழங்கியதைப் போன்ற உணர்வை உள்ளத்தில் சேர்த்தவர் அவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத உள்ளத்துக்கும், சிந்தனைக்குச் சொந்தக்காரனாக விளங்கியவர் பாரதி.

பாரதியைப் பற்றி பேசும்போது, தேசியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசாமல் இருக்கவே முடியாது. தேசியம் தமிழ் மண்ணில் தோற்கிறது எனில், பாரதியின் கவிதைகள் தோற்கின்றன என்றுதான் அர்த்தம். ஆனால், பாரதியின் கவிதை ஒருபோதும் தோற்காது. ஏனெனில், அவை அனைத்தும் சத்தியத்தின் வார்த்தைகள், சத்தியத்தின் வடிவங்கள். அது ஒரு போதும் தோற்காது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும். நம் மண்ணில் தேசியமே வெல்லும்'' என்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்.

பாரதியியல் ஆய்வு அளப்பரியது விருதாளர் அறிமுகரையாற்றிய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. திருமலை பேசியது :

'முனைவர் ய. மணிகண்டனின் பாரதியியல் ஆய்வுகள், பல கேள்விகளுக்கு, பாரதி குறித்த பல விமர்சனங்களுக்கு விடையளிப்பதாக இருப்பது சிறப்புக்குரியது. பாரதியார், அவர் வாழ்ந்த காலத்திலேயும் கொண்டாடப்பட்டார் என்பதை பல செய்திகள் மூலம் உறுதிப்படுத்தியவர் ய. மணிகண்டன். இவரது ஆய்வுகள், அமர்ந்திருந்து கட்டுரை எழுதுவதாக இல்லை. பண்பாட்டு ஆய்வு போல, நாட்டுப்புறவியல் ஆய்வு போல பல இடங்களுக்குச் சென்று, கைப்பொருள் செலவிட்டு பாரதியாரை ஆய்வு செய்துள்ளார் ய. மணிகண்டன்.

'இந்தத் தெய்வம் அனுகூலம் செய்யும்' என்ற பாடல் பாரதி பாடியது தானா? என ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என பலரும் கூறிவந்த நிலையில், சுதேசமித்திரன் நாளேட்டைக் கொண்டு ஆய்வு செய்து, அந்தப் பாடல் பாரதியின் பாடல் தான் என்பதை உறுதி செய்துள்ளார் ய. மணிகண்டன். சங்க இலக்கியங்கள் குறித்த பாரதியின் பதிவுகளை திரட்டி அளித்ததுடன், பல இடங்களுக்குப் பயணப்பட்டு பாரதியின் இறுதிக்கால படத்தை தேடிப் பிடித்து தமிழ்ச் சமூகத்துக்குக் காட்சிப்படுத்தியுள்ள ய. மணிகண்டன் பாரதியார் விருதுக்கு மிகப் பொருத்தமானவர் என்பதுடன் மேலும் பல விருதுகளுக்கும் தகுதியானவர் என்றார்.

அறியப்பட வேண்டியவர்களால் பாரதி அறியப்பட்டிருந்தார்

விருது பெற்ற முனைவர் ய. மணிகண்டன் தனது ஏற்புரையில் :

'பாரதியார் வாழ்ந்தபோதே, அறியப்பட வேண்டியவர்களால் அறியப்பட வேண்டிய அளவுக்கு, அறியப்பட்டுள்ளார். 1906-07-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து வந்த லெவிங்ஸ்டன் என்ற ஆங்கிலேயர் தாகூர், அரவிந்தர், திலகர், கோகலே உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். 1908-இல் அவர் வெளியிட்ட 'தி நியூ ஸ்பிரிட் இன் இந்தியா' என்ற உலகளாவிய புத்தகத்தில் பாரதியைக் குறிப்பிட்டுள்ளார்.

1916-இல் அயர்லாந்தில் இருந்து வந்த பத்திரிகையாளர் 'இந்தியாவின் முக்கியமான கவிஞர்கள்' என ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, அரவிந்தர், சி. சுப்பிரணியபாரதி ஆகிய 4 பேரை குறிப்பிட்டுள்ளார். பாரதியார் வாழ்ந்த இறுதி ஆண்டான 1921-இல் மதுரகவி பாஸ்கரதாஸ், 'இந்தியாவில் இரண்டு கவிச்சக்கரவர்த்திகள்' என்ற தலைப்பில் ஒரு கவிதை பாடியுள்ளார். அதில், ஒருவர் ரவீந்திரநாத் தாகூர், மற்றொருவர் சுப்பிரமணிய பாரதி எனக் குறிப்பிட்டுள்ளார். இவை பாரதியார் வாழ்ந்தபோதே அறியப்பட வேண்டியவர்களால் அறியப்பட்டவர் என்பதற்கான சான்றுகள்.

கல்வெட்டியியல், சரித்திரம், அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். அவை அனைத்தும் தமிழில் நடைபெற வேண்டும் என கனவு கண்ட முதல் கவிஞன் மகாகவி பாரதி தான். அத்தகைய மகாகவியின் எழுத்துகளை ஆவணப்படுத்தும் பணிக்கு தினமணி சார்பில் விருது வழங்கப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி'' என்றார்.

பாரதியின் அக்னிக் குஞ்சுகளை நெஞ்சில் தாங்கிய, பாரதி பித்தர்களால் அரங்கம் நிறைந்திருந்தது. இது, பாரதியின் மாண்புக்கு மாமதுரை அளித்த மரியாதை என்றனர் தமிழார்வலர்கள்.

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com