கேரள நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகள்!

பல நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் ஓலைச்சுவடிகளை  கேரளத்தில் ஓர் நூலகம் பாதுகாத்து வருகிறது.
கேரள நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகள்!

பல நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் ஓலைச்சுவடிகளை கேரளத்தில் ஓர் நூலகம் பாதுகாத்து வருகிறது. மாநிலத் தலைநகரமான திருவனந்தபுரத்தை அடுத்த காரியவட்டத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் "ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் அன்ட் மேனஸ்கிரிப்ட் லைப்ரரி' அமைந்துள்ளது. இங்குதான் சிறப்புமிக்க ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன.

இதுகுறித்து ஓலைச் சுவடிகள் துறைத் தலைவர் டாக்டர் ஆர்.பி.ஸ்ரீகலாவிடம் பேசியபோது:

"திருவிதாங்கூர் மன்னர்களின் ஆர்வமும், அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளுமே நூலகம் தொடங்க முக்கிய காரணம். ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜாவே கையெழுத்துப் பிரதிகளை வெளியிடும் துறையை நிறுவினார். இவரே கி.பி.1908- ஆம் ஆண்டில் டாக்டர் டி.கணபதி சாஸ்திரியை நூலகக் காப்பாளராக நியமித்தார்.

பல்வேறு பகுதிகளுக்கு பயணித்த கணபதி சாஸ்திரி ஏராளமான ஓலைச்சுவடிகளைச் சேகரித்தார். இவரைப் பாராட்டிய ஜெர்மனி நாட்டின் "டியூபிஷன்' பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழ்த் தாத்தா உ.வே.சா.வைப் போல, டாக்டர் கணபதி சாஸ்திரிகளும் "மகாபாத்தியாயா' பட்டம் பெற்றவர்.

கணபதி சாஸ்திரிகளைஅடுத்து சாம்பசிவ சாஸ்திரி பொறுப்பை ஏற்றார். பரமேஸ்வர ஐயர், சூரநாடு குஞ்சன் பிள்ளை, டாக்டர் கே.ராகவன் பிள்ளை, ப.பாஸ்கரன் , டாக்டர் கே.விஜயன் உள்பட பலரும் பொறுப்பில் இருந்தனர். தற்போது 22-ஆவது காப்பாளராக நான் பதவி வகித்து வருகிறேன்.

1940-இல் ஓலைச்சுவடி நூலகம் பல்கலைக்கழகத்தில் முறையாகத் தொடங்கப்பட்டது. 1968-இல் "ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் அன்ட் மேனஸ்கிரிப்ட் லைப்ரரி' என்று பெயரிடப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் எஸ்.கரண்சிங்கின் முயற்சியால், புதிய கட்டடம் கட்டப்பட்டு 1982-ஆம் ஆண்டில் ,திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கத்திய கட்டடக் கலைகளின் சங்கமமாக, இயற்கை அழகில் அமைந்துள்ளது.

சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளைக் கொண்டு, நாட்டின் மிகப் பெரிய ஓலைச்சுவடிகள் கொண்ட நூலகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. செப்புப் பட்டயம், மூங்கிலில் எழுதிய ஆவணங்கள், காகிதத்தில் எழுதிய படைப்புகள் உள்ளிட்டவற்றையும் கொண்டது.

பெரும்பாலான படைப்புகள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இரண்டாவது இடம் மலையாளத்துக்கும், மூன்றாவது இடம் தமிழுக்கும் உள்ளன. வங்காளம், மராத்தி, குஜராத்தி, க ன்னடம், தெலுங்கு, ஒடியா, அஸ்ஸாமி, பர்மீஸ், அரபிக் உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த ஓலைச்சுவடிகளும், இந்தோனேஷியா, மியான்மர், நேபாளம், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாட்டு ஓலைச்சுவடிகளும் இங்குள்ளன.

இந்தக் கையெழுத்துப் பிரதிகள் கிரந்தம், நந்திநகரி, வட்டெழுத்து, கோலெழுத்து உள்ளிட்டவைகளாகவும் விளங்குகின்றன.

தமிழ் ஓலைச்சுவடிகள் மட்டும் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பெரிய புராணம், திருக்குறள், சீவக சிந்தாமணி, அகத்தியர் சூத்திரங்கள், அகத்தியர் வைத்திய சுவடிகள், இடைக்காடர் சூத்திரம், சுவடிகள், ஜோதிட சுவடிகள், கந்த புராணம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், அருணாசலப் புராணம், விருத்தகிரிப்புராணம், தேம்பாவணி, குற்றாலக் குறவஞ்சி, கோயிற் புராணம், திருச்செந்தூர் புராணம், திருப்பாவை, திருமந்திரம், திருவாசகம், திருவாய்மொழி, திருவிளையாடற்புரணம், நன்னூல், நாலடியார், பலசாஸ்திரம், மூதுரை, வள்ளி நாடகம், வாதவூர்ப் புராணம், வீரசோழியம், பல பிணிகளுக்கு மருந்து.. என கலை, இலக்கியம், ஆன்மிகம், ஜோதிடம் என எண்ணற்ற சுவடிகள் நிறைந்துள்ளன. இவைகளில் கிரந்தம், வட்டெழுத்து உள்ளிட்ட பழைய எழுத்துகள் கொண்ட ஓலைச்சுவடிகளும் நிறைந்துள்ளன.

நூலகத்தில் உள்ள "லக்ஷணசாஸ்திர சுவடி" எனும் நூல் மூன்று செ.மீ. அளவுள்ள ஓலையில் 32 வரிகளை அடித்தல், திருத்தல் இன்றி நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. இதைப் படிக்க பூதக்கண்ணாடி அவசியம் தேவை.

ஓலைச்சுவடியில் மை கொண்டு எழுதப்பட்ட "பாஷநாடகா" எனும் 13 நாடகங்கள் இதுவரை வெளிவராதவை.

பனையோலையில் எழுதப்பட்ட படங்கள் இடம்பெற்ற சித்திர ராமாயணமானது மாராத்தி மொழியில் எழுதப்பட்டது. இது 350 ஆண்டுகள் பழைமையானது. இயற்கை வண்ணங்கள், தங்க பௌடரில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி இது.

"தேவி மாகாத்மியத்தை" எனும் நூலை பனையோலையில் எழுதி, அதை ருத்திராட்ச மாலை வடிவில் அமைத்துள்ளனர்.

மேல்புத்தூர் நாராயண பட்டாத்திரி பனையோலையில் எழுதிய கிருஷ்ண பகவானின் கதை கூறும் "நாராயணீயம்" எனும் நூலானது கி.பி. 1733- ஆம் ஆண்டைச் சேர்ந்தது.

முஞ்சிறை மடத்து செப்பேடின் காலம் கி.பி.1770 ஆகும். கி.பி.1674-ஆம் ஆண்டு வட்டெழுத்திலான மலையாள மொழி "ராம சரித்திரம்" என்று பல சிறப்பிடம் பெற்ற நூல்கள் உள்ளன.

நூலகத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் நாள்தோறும் வருகை தருகின்றனர்.

கையெழுத்துப் பிரதிகளைச் சேகரித்தல், பாதுகாத்தல், அவற்றை பிரசுரித்தல் ஆகிய மூன்று முக்கியப் பணிகளை நூலகம் மேற்கொள்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இத்துறைக்காக 463 கையெழுத்துப் பிரதிகளும் 467 அச்சிடப்பட்ட நூல்களும் சேகரிக்கப்பட்டன. பழைமையான ஆவணங்களைப் பாதுகாக்க, பாரம்பரிய, நவீனப் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் இங்கு கையாளப்படுகின்றன.

இந்தக் கையெழுத்துப் பிரதிகள் முறையாகவும் அறிவியல் ரீதியாக, போதுமான காற்று சுழற்சியுடன் திறந்த மர அடுக்குகளில் வைக்கப்பட்டுள்ளன.

நூலகத்தில் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்ஸ்கிருதம், மலையாளம், தமிழ் கையெழுத்துச் சுவடிகளை டிஜிட்டல் மயமாக்குதல் பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. ஓலைச்சுவடித் துறையின் கையெழுத்துப் பிரதிகளின் வெளியீடு தொடங்கப்பட்டு, இதுவரை 450 முக்கிய படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சம்ஸ்கிருத இதழ், மலையாளப் பத்திரிகைகளின் வாயிலாக, பல்வேறு படைப்புகளையும் வெளியிடுகிறோம்.

இவைதவிர, தனியார் களஞ்சியங்கள், உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் உதவிகளையும் அளிக்கிறோம்.

இந்தத் துறையின் தொகுப்புகள், பாட வாரியான, அகரவரிசை குறியீடுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

கற்பித்தல், ஆராய்ச்சி, ஆய்வுப் படிப்புகளை மலையாளம், சம்ஸ்கிருத மொழிகளில் மாணவர்களைச் சேர்க்கிறோம். வட்டெழுத்து, கிரந்தம், பிராமி, பழைய எழுத்துகள் குறித்து பட்டப்படிப்பும் உள்ளது'' என்றார்.

இதே வளாகத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் கலாசாரத் துறையின் சார்பில் இயங்கும் தேசிய சுவடி காப்பகத்தின் மூத்தக் காப்பாளர் ஷாஜியிடம் பேசியபோது:

"நாடு முழுவதும் செயல்படும் 50 மையங்களில் ஒன்றாக, கேரளப் பல்கலைக்
கழத்தில் செயல்படும் இந்த மையம் அமைந்துள்ளது. கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதற்காக, எண்ணெய் தடவுதல், தூசி நீக்குதல், பாதுகாத்தல் பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறோம்.

முன்னோர்களின் ஓலைச்சுவடிகள் பாதுகாத்தல், வழிகாட்டுதல், இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லுதல் பணிகளை மேற்கொண்டுவருகிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com