மணிப்பூரில் நடப்பது என்ன?

மணிப்பூர் -  வட கிழக்கில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இந்த குட்டி மாநிலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரு மாதங்களாகியும் இன்னும் கொதிப்பு அடங்கவில்லை.
மணிப்பூரில் நடப்பது என்ன?

மணிப்பூரில் கலவரங்கள்  தொடங்கி இரு மாதங்களுக்குப் பிறகு வெளியான - உலகையே உலுக்கும், இரு பெண்கள் நிர்வாணமாகக் கொண்டு செல்லப்படுகிற, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட - ஒரே ஒரு விடியோவால் ஒட்டுமொத்த சம்பவங்களும் அம்பலப்படத் தொடங்கியுள்ளன.

மணிப்பூர் வன்முறைகள் பற்றி இதுவரையிலும் எதுவும் தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி, 79 நாள்களுக்குப் பிறகு, இந்த சம்பவத்துக்காகக் கவலை தெரிவித்துள்ளார்.

உண்மையில் நடந்திருப்பது விடியோவால் வெளியான இந்த ஒற்றைச் சம்பவம் மட்டுமல்ல.

மணிப்பூர் கலவரங்களில் இதுவரை:

_ 142 கொல்லப்பட்டுள்ளனர், எல்லைப் பாதுகாப்புப் படை, மணிப்பூர் காவல்துறையினர் உள்பட
_ 17 பேரை இன்னமும் காணவில்லை
_ 462 பேர் காயமுற்றுள்ளனர்
_ 54,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்
_ 354 நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
_ 5,053 தீவைப்புச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன
_ 5,995-க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்ளபடியே நடந்துகொண்டிருப்பது என்ன? ஏன்? பின்னணியுடன் விளக்கும் விரிவான கட்டுரை:

ணிப்பூர் - வட கிழக்கில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இந்த குட்டி மாநிலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரு மாதங்களாகியும் இன்னும் கொதிப்பு அடங்கவில்லை. இனங்களாகப் பிரிந்து மக்கள் மோதிக் கொண்டிருக்கிறார்கள், இப்போதைக்கு அமைதிக்கு வாய்ப்பில்லையோ? என்ற அச்சம் நீடிக்கிறது.

வனப் பகுதிகளைச் சிலர் தொடர்ந்து ஆக்கிரமிப்பதால் காடுகள் அழிவதைத் தடுக்கும் நோக்கில் 2022- ஆம் ஆண்டு செப்டம்பரில் காப்புக் காடுகள், ஈர நிலங்கள் கணக்கெடுப்பை நடத்தியது மணிப்பூர் அரசு.

மணிப்பூரில் குக்கி, நாகா இன மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் மைதேயி இன மக்கள் பெருமளவில் வசிக்கும் இம்பால் பள்ளத்தாக்கின் சில பகுதிகளிலும் இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. ஆனால், குக்கி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக இது நடக்கவே, தங்களைக் குறிவைத்துதான் இவையெல்லாம் நடக்கின்றன என்று குக்கி மக்கள் அஞ்சத் தொடங்கினர்.

அருகேயுள்ள மியான்மர் நாட்டிலிருந்து அதிகளவிலானோர் மணிப்பூர் மாநிலத்துக்குள் புகுந்துவிட்டனர் என்று மாநில அரசு கூறுகிறது. ஏனெனில், மணிப்பூர் மாநிலத்தையொட்டியுள்ள மியான்மர் பகுதி கிராமங்களிலும் மைதேயிகள், குக்கிகள், நாகா மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பகுதிகளிலிருந்து மணிப்பூருக்குள் மக்கள் வருவதும் செல்வதும் எளிது; வழக்கமும்கூட.

மலைப் பகுதிகளில் மியான்மரிலிருந்து சட்ட விரோதமாகக் 'குடியேறிய- குக்கிகள்தான் கஞ்சா செடிகளை அதிகளவில் பயிரிடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டும் அரசு, கஞ்சா சாகுபடிக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியது. ஆனால், இவையெல்லாம் தங்கள் நிலங்களைப் பறித்துக்கொள்ள அரசு மேற்கொள்ளும் முயற்சிதான் என்று குக்கிகளில் ஒரு பகுதியினர் சந்தேகிக்கின்றனர். குக்கிகள் அடுத்தடுத்த கிராமங்களுக்கு இடம் மாறிச் சென்று கஞ்சா பயிரிடுவதைத் தொடருகின்றனர், இதனால் அடுத்தடுத்து வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுக் காடுகள் அழிக்கப்படுகின்றன என்று அரசு அலுவலர்கள் குறிப்பிடுகின்றனர்.

குக்கிகளுக்கும் மைதேயிகளுக்கும் இடையிலான சண்டையில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் சட்டவிரோத குக்கி குடியேறிகளும், ஆக்கிரமிப்பாளர்களும் பெரும்பங்காற்றுகின்றனர்.

ஏப்ரல் 27 -ஆம் தேதி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், குக்கி மக்களின் தாயகமான சுராசந்த்பூரில் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் பங்கேற்கவிருந்த வளாகத்தை ஒரு கும்பல் தீ வைத்துக் கொளுத்தியது. சில நாள்கள் கழித்து, மே 3 -ஆம் தேதி, பழங்குடியினர் பட்டியலில் தங்களையும் இணைக்க வேண்டும் என்ற பெரும்பான்மை சமூகமான மைதேயி இன மக்களின் கோரிக்கைக்கு எதிராக நாகா, குக்கி மலைப் பகுதிகளில் மணிப்பூர் அனைத்துப் பழங்குடி மாணவர்கள் ஒன்றியத்தின் சார்பில் ஒழுங்கமைக்கப்பட்ட 'பழங்குடி ஒற்றுமைப் பேரணி- யின் முடிவில், மிகப் பெரிய அளவில் பரந்துபட்ட அளவில் வன்முறை வெடித்தது.

மணிப்பூரின் மொத்த மக்கள்தொகையில் 53 சதவிகிதத்தினராக இருக்கும் மைதேயி மக்கள், மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 8 சதவிகிதமேயுள்ள இம்பால் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டுமே வசிக்கின்றனர். மாநிலத்தின் பிற நிலப்பரப்பு முழுவதும், அதாவது 92 சதவிகிதமும் மலைப் பகுதிகள்தான். இவை மலைவாழ் பழங்குடியினருக்கென பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்பதால் மலைப் பகுதிகளில் மைதேயி மக்கள் இடமோ நிலமோ வாங்க முடியாது.

ஆனால், பழங்குடியினரான குக்கிகளோ, நாகாக்களோ மலைப் பகுதிகளிலும் இடம் வாங்கலாம். இம்பால் பள்ளத்தாக்கிலும் வாங்கலாம். இந்தப் பிரச்னை, ஒருகாலத்தில் அரச வம்சமாக இருந்த மைதேயி இனத்தைச் சேர்ந்த மக்களின் ஒரு பிரிவினரிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் தங்களையும் பழங்குடியினர் என அறிவிக்க வேண்டும், அதுவும்கூட இம்பால் பகுதியைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில்தான், வேறெதுவுமில்லை என்கின்றனர்.

ஆனால், இதே கோரிக்கையை இன்னொரு பிரிவினரோ எதிர்க்கின்றனர். இதற்காக 2000 ஆண்டு கால நெடிய வரலாற்றை மைதேயிகள் தியாகம் செய்யவும் முடியாது, தங்களைப் பழங்குடிகள் எனப் பொய் சொல்லவும் முடியாது என்கின்றனர்.

தவிர, எதிர்காலத்தில் இதனால் நேரிடக் கூடிய சமுதாயச் சிக்கல்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எல்லாவற்றிலும் சிறப்பானவை தங்களுக்கு வேண்டும் என்று நினைக்கும் குறிப்பிட்ட சிலர்தான், பழங்குடி அந்தஸ்தைக் கோருகின்றனர் என்றும் கூறுகிறார்கள்.

தொடரும் இந்த இன மோதல்கள் காரணமாக உள்ளபடியே மணிப்பூர் மாநிலமே இப்போது பிரிந்துதான் கிடக்கிறது. வன்முறை வெடித்ததிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து கிடக்கின்றனர், ஏராளமானோர் மாநிலத்தைவிட்டே வெளியேறி அருகிலுள்ள மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். மிசோரம் மாநிலத்தில் மட்டுமே இடம்பெயர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர். தற்போது மோதிக் கொண்டிருக்கும் மைதேயி, குக்கி ஆகிய இரு இன மக்களுமே பெரும் கோபத்தில் இருக்கின்றனர். மைதேயிகளின் இம்பால் பள்ளத்தாக்குப் பகுதிக்குள் குக்கி மக்களால் நுழைய முடியாது, மைதேயி மக்களும் இம்பாலை விட்டு வெளியேற முடியாது, ஏனென்றால், வெளியேறும் எல்லா நெடுஞ்சாலைகளும் குக்கி கிராமங்களின் வழியேதான் செல்கின்றன. இம்பால் பள்ளத்தாக்கில் வசித்த குக்கிகள் எல்லாம் வெளியேறித் தாங்கள் பெரும்பான்மையாகவுள்ள மலைப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். அதேபோல, மலைப் பகுதிகளில் இருந்த மைதேயிகளும் அடைக்கலம் தேடி இம்பால் பள்ளத்தாக்குக்கு வந்துவிட்டனர்.

மூன்று நாள்கள் இடைவிடாமல் தொடர்ந்த வன்முறை, தீவைப்பு போன்றவற்றால் தங்களுக்குப் பாதுகாப்பான, தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களுக்குச் சென்றுவிட்டனர். வீடுகள் கொளுத்தப்பட்டதால், கிடைத்தவற்றை, முடிந்தவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறிய மக்களை ராணுவமும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசேர்த்தனர். குக்கிகளும் நாகாக்களும் கிறிஸ்துவர்கள். மைதேயிகள் பெரும்பாலும் ஹிந்துக்கள் அல்லது சனமாஹிசம் என்ற உள்ளூர் இறைவழியைப் பின்பற்றுவோர்.

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிட சில நாள்களாக மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. மலையோரப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடுகள் குறைந்திருக்கின்றன. இன்னமும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினரும் துணைநிலை ராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். நிலைமை அமைதியாக இருப்பதாகக் கருதினாலும் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது கள நிலவரம்.
கலகத்தைக் கையாள்வதில் பாதுகாப்புப் படையினருக்கு இரு பிரச்னைகள். கலகத்தை ஒடுக்கச் சென்றால், பெருமளவில் பெண்கள் கூட்டமாக வந்து நகரவிடாமல் மறித்துவிடுகின்றனர். ராணுவ சிறப்பு அதிகார சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட 19 காவல் நிலையப் பகுதிகளிலும் செயல்படுவது ராணுவத்துக்கு சவால் விடுவதாக இருக்கிறது.

உயர் நீதிமன்ற உத்தரவு காரணமா?

மணிப்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவுதான் கலவரத்துக்குக் காரணமா? மைதேயி இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பது பற்றிய மனுதாரர்களின் கோரிக்கையை அவசர அவசியமாக, இந்த உத்தரவின் நகல் கிடைத்த 4 வாரங்களுக்குள், பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் வகுப்பினராகக் கருதப்படும் பெரும்பான்மையினரான (53%) மைதேயிகளைப் பழங்குடியினர் எனப் பட்டியலிட்டால் பழங்குடிகளான குக்கிகளுக்குப் பெரும் பாதிப்புகள் நேரிடும். மணிப்பூர் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்கூட, ‘மணிப்பூர் உயர் நீதிமன்ற உத்தரவுதான் இந்தக் கலவரங்கள் தொடங்குவதற்குக் காரணம் என்று எவ்விதத் தயக்கமுமின்றிச் சொல்வேன்-  என்று குறிப்பிட்டார்.

மாநிலத்தில் மூன்றாவதொன்றாக இருப்பவர்கள் நாகா இனக் குழுவினர். மாநிலத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள், இந்த சண்டையில் எந்த வகையிலும் தங்களைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் மைதேயி, குக்கி ஆகிய இரு தரப்புக்கும் சம தொலைவிலிருந்தவாறு கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

இரு தரப்பு கலவரக்காரர்களுமே எந்த இடத்திலும் நாகா குழுவினரைத் தாக்கவில்லை. தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேயத்துடன் உணவு, உடை போன்ற உதவிகளையும் நாகாக்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சிதறிக் கிடக்கும் அனைவரையும் அவரவர் இருந்த இடங்களுக்கு திரும்பச் செய்ய வேண்டும் என்பதில் இவர்கள் அக்கறை கொண்டுள்ளனர் (1990- களின் தொடக்கத்தில் இதே மணிப்பூர் மாநிலத்தில் இன்று அமைதியாக இருக்கும் நாகா மக்களுக்கும் குக்கிகளுக்கும் இடையே நடந்த வன்முறை - மோதல்களில் 200- க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது).

நாகா மக்கள் நடுநிலையாக இருந்தாலும்கூட, குக்கி அமைப்புகளும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வலியுறுத்துவதைப் போல குக்கிகளுக்கான 'தனி நிர்வாகம்- பற்றி ஒருவேளை பரிசீலிக்கப்பட்டால் தங்கள் பங்கிற்கான உரிமைகளை வலியுறுத்தவும் தவற மாட்டார்கள்.

மணிப்பூரில் அமைதி திரும்புவது என்பது பெரும்பாலும் மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசிடம்தான் இருக்கிறது. பெரிய அளவில் நிர்வாக, அரசியல் ரீதியிலான முடிவுகளை மத்திய அரசு எடுக்காதபட்சத்தில் அமைதி என்பது வெற்றுப் பேச்சாகத்தான் இருக்க முடியும். மாநிலத்தில் இருப்பது பா.ஜ.க. அரசு என்பதால் சற்று கவனமாகவே இருக்கிறது மத்திய அரசு. ஒரு பக்கம், கவலை, அறிக்கை என்றாலும் முதல்வராகத் தொடர பிரேன் சிங் அனுமதிக்கப்படுகிறார். ஆளுநர் அனுசுயா உய்க்கி தலைமையில் அமைதிக் குழுவொன்று உருவாக்கப்பட்டாலும் உறுப்பினராகப் பெயர் அறிவிக்கப்பட்ட சில மைதேயி தலைவர்கள் இடம் பெற மறுத்துவிட்டனர். குக்கிகளும் இந்தக் குழுவை நிராகரித்ததுடன் இந்த முதல்வருடனோ அவருடைய அரசுடனோ தங்களால் பேச்சு நடத்த முடியாது என்று அறிவித்துவிட்டனர்.

எண்களின் அரசியல்: அரசியல்ரீதியாக மைதேயிகள் பலம் பெற்றிருக்கிறார்கள். 60 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவையில் 40 பேர், மைதேயிகள் மட்டுமே மிகப் பெரும்பான்மையாக இருக்கும், இம்பால் பள்ளத்தாக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். குக்கி பகுதியில் 10 தொகுதிகள், நாகா செல்வாக்கில் 10 தொகுதிகள். குக்கிகளுக்கு ஆதரவாக முதல்வர் பிரேன் சிங் என்ன செய்ய முயன்றாலும் அவரும் பா.ஜ.க.வும் மைதேயி மக்களின் ஆதரவை இழக்க நேரிடும். மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்புமா? பரஸ்பரம் நம்பிக்கையுடன் மக்கள் வாழத் தொடங்குவார்களா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com