எனதருமை நாட்டு மக்களே..!

2014-ஆம்  ஆண்டு அக்.  3-இல் பிரதமர் நரேந்திர மோடி வானொலி வாயிலாக,   'மன் கி பாத்' என்ற பெயரில் ஓர்  உரையாற்றினார்.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமரின் உரை தொடர்ந்து ஒலிபரப்பாகி வருகிறது. 
எனதருமை நாட்டு மக்களே..!

2014-ஆம் ஆண்டு அக். 3-இல் பிரதமர் நரேந்திர மோடி வானொலி வாயிலாக, 'மன் கி பாத்' என்ற பெயரில் ஓர் உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமரின் உரை தொடர்ந்து ஒலிபரப்பாகி வருகிறது.

பிரதமரின் ஹிந்தி உரையானது பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பிராந்திய வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. அதன் தமிழ் வடிவத்தை, தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்கள் 'மனதின் குரல்' என்ற பெயரில் ஒலிபரப்புகின்றன. பிரதமரின் நூறாவது உரை அண்மையில் ஒலிபரப்பானது. இந்த உரையை ஹிந்தியிலிருந்து மொழி பெயர்த்து, அதனை குரலில் ஏற்ற இறக்கங்களோடு, உணர்ச்சி பொங்க, மோடி பேசுவதுபோலவே பேசிவருபவர் சென்னை வானொலி நிலையத்தில் 1989-ஆம் ஆண்டு முதல்பணியாற்றும் ராமசாமி சுதர்சன்.

ஐம்பத்து ஆறு வயதான இவர், மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தை அடுத்த தெரளி கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். மோடி தமிழ்நாட்டில் பங்கேற்ற சில நிகழ்ச்சிகளில், அவரது உரையை மேடையிலேயே இருந்து மொழிபெயர்க்கும் வாய்ப்பும் பெற்றவர் ராமசாமி சுதர்சன்.

அவருடன் ஓர் பேட்டி:

'மனதின் குரல்' நிகழ்ச்சியுடனான உங்களுடைய பயணத் தொடக்கம் எது?

பொதுவாக, சுதந்திரத் தினம், குடியரசு தின விழாக்களின்போது, குடியரசுத் தலைவரும், குடியரசு தினம், கொடி நாள்களுக்கு ஆளுநர் உரை நிகழ்த்துவார்கள். ஆனால், பிரதமர்கள் ஓர் அவசரமான, மிக முக்கியமான தருணங்களில்தான் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பல வகையிலும் முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறார். அவற்றில் முதன்முதலாக அவர் செய்ததுதான் இந்த மனதின் குரல் உரை.

2014-ஆம் ஆண்டுஅக்டோபரில் விஜயதசமி நாளன்று, அவர் உரையாற்றப் போகிறார் என்று சொன்னபோது, அது மாதாந்திரத் தொடர் நிகழ்ச்சி என்பதெல்லாம் தெரியாது.

'மன் கி பாத்' உரை நிகழ்ச்சியை ஆரம்பித்தபோது, என்னுடைய உயர் அலுவலராக இருந்த டாக்டர் சித்தார்த்தன், நிலையத் தலைவராக இருந்த சுப்பிரமணியம் ஆகிய இருவரும் அதனைத் தமிழாக்கம் செய்து, வாசிக்கும் பணியை எனக்கு அளித்தனர். ஹிந்தி அறிவிப்பாளர் உதயகுமார் மிகவும் உதவியாக இருக்கிறார்.

'மனதின் குரல்' நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் என்ன?

தேசம், மக்கள், பாரம்பரியம், கலாசாரம்,பெண்கள் சுய உதவிக் குழுக்கள், மொழிகள், கல்வி, உடல் நலம், குழந்தைகள், சமூகம், சுய சார்பு.. என்று சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் மோடி பேசுகிறார், இம்மியளவும் அரசியல் பேசுவதில்லை.

நாடு, மக்கள், வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற வார்த்தைகளை அவர் அதிகம் பயன்படுத்துகிறார்.

அதற்கும் மேலாக, மிக அரிய சேவை செய்துவரும் சாமானியர்கள் பலரைப் பற்றி அவர் தன் உரைகளில் பாராட்டுகிறார்.

அது அவர்களது பணிக்கானஅங்கீகாரம் மட்டுமில்லை; சமூகத்தில் அவர்களைப் போன்ற சேவை செய்ய மற்றவர்களையும் ஊக்குவிக்கும்.

நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி..?

வெற்றி பெற்றிருக்கிறோம் என்பது நிகழ்ச்சியின் பின்னூட்டங்களில் இருந்து நாங்கள் தெரிந்துகொள்கிறோம். பாராட்டுகளே அதற்கு சாட்சி.

நூறாவது நிகழ்ச்சியின்போது எப்படி உணர்ந்தீர்கள்?

ஆரம்பத்தில் நம்மால் முடியுமா? என்ற மலைப்பு இருந்தது. பின்னர், பதற்றம் விலகி சுவாதீனம் வந்துவிட்டது. இப்போதெல்லாம் மொழிபெயர்ப்பும், ஒலிபரப்பும் இயல்பாகச் செய்துமுடிக்கிறோம். ஆரம்பகால சிரத்தையும், அர்ப்பணிப்பும் சிறிதும் குறையவில்லை. நூறாவது நிகழ்ச்சி வந்தபோது, பிரமிப்பை உணர்ந்தது நிஜம்.

வடக்கு மாநிலங்களைப்போலவே, தென் இந்தியாவிலும் வானொலிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கர்நாடகம், கேரளத்தில் குக்கிராமங்களில் இன்னமும் வானொலி ஒலிக்கிறது.

கொடைக்கானல், காரைக்குடி போன்ற இடங்களில் அகில இந்திய வானொலியானது தனியார்பண்பலைகளுக்கு கடுமையான போட்டியை அளிக்கின்றது.

திருநெல்வேலி வானொலி நிலையத்துக்கு ஆரம்ப நாள்களில் பலர், மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழ் குரலுக்கு உரியவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று வருவார்கள் என்று கூறியிருக்கின்றனர்.

குரல் பயிற்சி ஏதும் செய்தீர்களா?

பிரதமரது உரைகள் ஏராளமாகக் கேட்டு, அவரது மொழிநடை, உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கத்தை உன்னிப்பாகக் கவனித்து உள்வாங்கிக் கொண்டேன்.

மொழியாக்கம் செய்யும்போது, ஹிந்தியில் உள்ள சொற்களின் தாக்கம் எப்படி இருக்குமோ, அதே போன்ற தாக்கம் ஏற்படுத்தும் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறோம். அவர் கூறும் சொற்களில் அவரது ஆன்மா கலந்திருக்கிறது. தமிழ் உரையில் பிரதமரின் ஆன்மாவோடு, என் ஆன்மாவும் கலந்து வெளிப்படுகிறது. அவரது ஆன்மா தமிழ் வார்த்தைகளாக வெளிப்படுவதற்கு நான் ஒரு வாகனமாக இருக்கிறேன்.

அகில இந்திய வானொலியில் பணிபுரிபவர்கள், 'மனதின் குரல்' உரையை மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்து உரையாற்றும் பணியை பிரதமரும் மனம் திறந்து பாராட்டினார்.

'அந்த அரை மணி நேரத்துக்கு மோடியாகவே மாறுகிறார்கள்?' என்று சொன்னது என்னைப் போன்ற அனைவரையுமே நெகிழச் செய்துவிட்டது.

மறக்க முடியாத அனுபவம் ஏதுமுண்டா?

கரோனா பொது முடக்க காலம். மிகக் குறுகிய அவகாசத்தில், மிகுந்த கவனத்துடன் பிரதமரின் உரையை மொழிபெயர்த்து ஒலிப்பதிவு செய்துமுடித்தேன். தூக்கம் இல்லாமல், பணியை முடித்துவிட்டு, நள்ளிரவைத் தாண்டி வீட்டுக்குப் புறப்பட்டேன். வழியில் போலீஸார் என்னை தடுத்து நிறுத்தினர்.

'பிரதமர் உரையை மொழிபெயர்த்துப் பேசி, பதிவு செய்துவிட்டு வருகிறேன்' என்று சொன்னபோது போலீஸாருக்கு நம்பிக்கை இல்லை. பின்னர் அவர் என்னைப் பார்த்து, 'மனதின் குரலா?' என்று கேட்டார். 'ஆமாம்! அதுவும் நான்தான் செய்கிறேன்' என்றேன்.

சில விநாடிகள் இடைவெளிக்குப் பின்னர், '' எனதருமை நாட்டு மக்களே!' என்று சில வரிகளைப் பேசத் தொடங்கினேன். ' சார்! நீங்களா சார்! நீங்க போங்க சார்!' என்று, உற்சாகமாகச் சொல்லி சாலையில் இருந்த தடைகளை விலக்கி வீட்டுக்குச் செல்ல அனுமதித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com