ஞாபகம் வருதே..!

வீட்டு வாசல்களில் செடிகள், கொடிகளைப் பார்த்திருப்போம்.
ஞாபகம் வருதே..!

வீட்டு வாசல்களில் செடிகள், கொடிகளைப் பார்த்திருப்போம்.

ஆனால், புதுச்சேரியில் ஒரு வீட்டில் வெள்ளைப் பித்தளை, வெண்கலம், மரம், பனை ஓலை.. என பல நூற்றாண்டு கடந்த கலைப் பொருள்கள் வருவோரை வரவேற்கும் வகையில் வாசல் முதல் மாடி அறைகள் வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

நிகழ்காலத்தைத் தாண்டி கடந்த காலத்துக்குள் நமது நினைவுகளை அந்தக் கலைப் பொருள்கள் அழைத்துச் செல்வதை உணரமுடிகிறது.   இந்த வீடு புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜர் நகர் சாமிபிள்ளைத் தோட்டம் கம்பர் தெருவில் உள்ள அய்யனாருடையதுதான்.

புதுவை அரசு சுகாதாரத் துறை ஊழியரான அய்யனார்,   நாற்பத்து ஐந்து வயதானவர்.  இவர் இளம் வயது முதலேயே இதுபோன்ற பொருள்களைச் சேமிக்கத் தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாகச் சேமித்து வைத்துள்ள கலைப் பொருள்களை காணக் கண்கோடி வேண்டும்.

இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்தக் கலைப் பொருள்களை நகரின் செல்வந்தர்கள் வீடு முதல் கிராமத்து தொழிலாளிகள் வீடுகள் வரை நேரில் சென்று சேகரித்து வைத்துள்ளார்.

 அவரது சேகரிப்பில் ஒரு சென்டி மீட்டர் அளவுள்ள குவளை, கும்பா முதல் 10 அடி உயர பாத்திரம் வரையில் அனைத்தும் கண்கவர் கலைநயமிக்கவை. 

திரி ஏற்றும் குத்துவிளக்கு, அரிவாளாய் பயன்படுத்திய குறுவாள், சின்னஞ்சிறிய பீரங்கி முதல் பெரிய பித்தளை தொலைபேசி என அனைத்தும் நமது முந்தைய தலைமுறையால் உபயோகப்படுத்தப்பட்ட பொருள்கள்தான்.
உலோக ஊஞ்சல் முதல் சமையலுக்கான அஞ்சரைப் பெட்டிகள், கிணற்றில் தண்ணீர் இறைக்கும் தகர சாதனங்கள், நாம் சிறு வயதில் பார்த்த வானொலிப் பெட்டிகள்,

வெளி நாட்டவர் நம்நாட்டில் பயன்படுத்திய உலோகச் செருப்புகள் என அனைத்தும் பார்க்கப் பார்க்கப் பரவசத்தை ஏற்படுத்தும் நுண்ணிய வேலைப்பாடுகளின் கைவண்ணங்களாகவே காட்சியளிக்கின்றன.

மண் குதிர்கள் முதல் மரப்பாச்சி பொம்மை வரையில் அனைத்தும் கைத்திறன் மிக்க கலைஞர்களது மன எண்ணத்தை வண்ணங்களாக வெளிப்படுத்துகின்றன.

சின்னஞ்சிறிய குதிரை வண்டி, சிதிலமடைந்த ஓலைப் பெட்டிகள், ஆதிகால கலப்பை ஏர்கள், அளவீடுக்கு உதவிய உலக்கு, படிகள், சின்னஞ்சிறிய கார்உருவங்கள், வெத்திலைப் பெட்டிகள், பாக்குவெட்டிகள், சுண்ணாம்புப் பெட்டிகள் என  நம்மை கற்காலம் முதல் தற்காலம் வரை அழைத்துச் செல்லும்அந்த கலைக்கூட வீட்டில் பார்த்துப் பார்த்து பரவசமடையும் பொருள்கள் தாராளமாக உள்ளன.

அரசு கலைக் கூடத்தில் இல்லாத வகையில் எப்படி இத்தனை அரிய பொருள்களை சேகரித்தீர்கள் எனக் கேட்டபோது அய்யனார் கூறியதாவது:

''ஆறாம் வகுப்பு அரசுப் பள்ளியில் படித்தபோதுதான் தபால் தலை சேகரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்படி  ஆயிரம் தபால்தலைகளைச் சேகரித்தேன். அதன்பின்னர், நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபட்டேன். அதைத் தொடர்ந்தே கலைப் பொருள்களை சேகரிக்கும் பழக்கம் கைவந்தது. 

கலைப் பொருள்களை காட்சிப்படுத்தும் வகையில்தான் எனது வீட்டையும் கட்டியுள்ளேன். 

வீட்டில் கதவு நிலை முதல் அனைத்திலும் நமது முன்னோர் கடைப்பிடித்த கலையம்சங்கள் நிறைந்திருக்கும் வகையிலும் பார்த்துக்கொண்டேன். நான் சிறுவயதில் சேகரித்து பாதுகாத்த ஆயிரம் தபால் தலைகளையும் மற்றவர்களுக்கு அளித்துவிட்டேன்.  ஆகவே முழுமையான கலைநயமிக்க புழங்கு பொருள் சேகரிப்பாளராக தற்போது மாறியுள்ளேன்.

கலைநயமிக்க அந்த புழங்கு பொருள்களை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்த அரசு இடம் தந்தால் முன்னோர்களது கலைநய உணர்வை வருங்காலத்தலைமுறைக்கும்காட்சிப்படுத்த முடியும். அதன்படி வெளிமாநிலத்தவர்கள் முதல் வெளிநாட்டவர் வரையில் சுற்றுலாப் பயணிகளை புதுவைக்கு ஈர்க்கலாம். அதன்மூலம் புதுவை பாரம்பரியம் மட்டுமல்ல; தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தலாம் என்பதே எனது என்ணம். 

அத்துடன் அந்தந்தப் பகுதியில் பள்ளிகளில் மாணவர் அருங்காட்சியகத்தை உருவாக்கி அதில் அந்தந்தப் பகுதி புழங்குப் பொருள்களை காலத்துக்கு ஏற்ப சேகரிக்கும் வழியை ஏற்படுத்தலாம். அதன்மூலம் நமது வாழ்வியல் வரலாறை இளந்தலைமுறை அறிய வாய்ப்பும் ஏற்படும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com