மு.பூவதி.
மு.பூவதி.

மனித தெய்வம் 'அம்மா'    

அன்னையை ஆராதிக்கும் கொண்டாட்டங்கள் பண்டைய காலத்தில் கிரேக்கத்தில் இருந்தன.  வசந்த காலத்தின் தொடக்கத்தை  அவர்கள் தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினர்.

அன்னையை ஆராதிக்கும் கொண்டாட்டங்கள் பண்டைய காலத்தில் கிரேக்கத்தில் இருந்தன.  வசந்த காலத்தின் தொடக்கத்தை  அவர்கள் தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினர்.  ரோமர்கள் 'சைபெலி' என்ற பெண் தெய்வத்தைத் தாயாகக் கருதி வழிபட்டனர். கிறிஸ்து வருகைக்குப் பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா கோயிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது.  இவை எல்லாமே சமய அடிப்படையில் உருவானவை. ஆனால் நவீன உலகில் கொண்டாடும் அன்னையர் தினம் அப்படி அல்ல!
'னா ஜார்விஸ்'  என்ற சமூகச் சேவகி அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் எனும் இடத்தில் வாழ்ந்து வந்தார்.  அப்போது நடைபெற்ற யுத்தத்தில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களுடைய குடும்பங்கள் தடுமாறி சீரழிந்தன. இவர்களை ஒன்று சேர்க்கவும், சமாதானம் செய்யவும் அவர் கடுமையாகவும், சோர்வடையாமலும் போராடினார்.  அவருடைய மகளுக்குப் பார்வை கிடையாது. இந்த சோகத்தையும் பொருட்படுத்தாமல் இறுதி வரை சமூகச் சேவகியாகவே வாழ்ந்து 1904-ஆம் ஆண்டு மண்ணைவிட்டு மறைந்தார்.
அனா ஜார்விஸின் மகள் ரீவ்ஸ் ஜார்வீஸ் தனது தாயின் நினைவாக, அங்குள்ள ஒரு தேவாலயத்தில் 1908-ஆம் ஆண்டு மே மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாட்டை நடத்தினார். தன்னுடைய தாயாரின் நினைவைப் போற்றியதைப் போலவே எல்லோரும் அன்னையைக் கெளரவிக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. தன்னுடைய வேலையின் காரணமாக அன் ரீவ்ஸ் ஜார்வீஸ் பென்சில் வேனியா என்ற மாநிலத்தில் உள்ள பிலடெல் பியாவில் குடியேறினார். தன்னுடைய தாயைப் போலவே சமூகச் சேவையின் மீது அளவற்ற நாட்டம் அவருக்கு இருந்தது. இதனால் அதிகமாக ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே மிகவும் பாடுபட்டார்.
அன்னையைப் போற்றுவது குறித்த தன்னுடைய எண்ணத்தை அவர் பென்சில்வேனியாவின் மாநில அரசுக்குத் தெரிவித்தார். அந்த மாநில அரசாங்கமும் அவருடைய கருத்தை ஏற்று 1913-ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்து அறிவித்தது. 
அதன்பின்னர்,  அமெரிக்கா முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.  ஆண்டுதோறும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அன்றைய அதிபர் உட்ரோ வில்சன் அறிவித்தார். இதனைப் பின்பற்றி பிரிட்டன், கனடா, இந்தியா, இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து சிலரிடம் கேட்டபோது:

மு.பூவதி,  கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்: பெண் படைப்பில் ஊனாகி, உடலாகி, உயிர் தந்த அம்மா உடல் தந்து உதிரம் பெருக்கி ஆணோ அல்லது பெண்ணோ உருவறியாமல் உவகை பொங்கப் பெற்றெடுக்கும் அவளை நினைக்கும்போதே ஒவ்வொரு பிள்ளைக்கும் மனம் கசியும், விழியோரம் கண்ணீர் பெருகும். வயிற்றுக்குள் இருக்கும்போது தொப்புள் கொடி வழி உணவூட்டி, பிறந்தவுடன் பாலூட்டி, வளர்ந்த பின்னும் சீராட்டி பிள்ளைகளுக்காகவே வாழும் மனித தெய்வம் அவள்.  மனிதப் பிறவிக்கு மட்டுமல்ல உலக உயிர்கள் அனைத்துக்கும்  அன்னையே பிரதானம்.
அம்மா என்ற வார்த்தைக்குள் தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. அன்னைதான் முதல் தெய்வம். அம்மாவுக்கு அம்மா என்ற ஒரு ரோல் மட்டும் இல்லை.  பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து, வேலைக்குச் சென்று, குடும்பப் பாரத்தை பகிர்ந்து கொண்டு, கஷ்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் அமைதியாக அன்புடன் சிரித்து நடந்து கொள்ளும் பாங்கு. இத்தனையும் அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காணமுடியும்.

சே.சுசிலாதேவி.
சே.சுசிலாதேவி.

சே.சுசிலாதேவி,  பேராசிரியர், சிங்கவனம்: ஒரு தாய் எப்போதுமே இரண்டு முறை யோசிக்க வேண்டும். தனக்காக ஒரு முறை, ஒருமுறை தன் பிள்ளைக்காக!  குழந்தை பெற்றுக் கொண்டது அன்புக்கு ஒரு புனிதம் இருப்பதை எனக்கு புரிய வைத்திருக்கிறது. நிபந்தனையற்ற அன்பு என ஒன்று இருப்பதை நம்ப வைக்கிறது.  வரலாற்றில் சாதித்தவர்கள் எல்லோரும் தங்களுடைய தாய்மையை உணர்ந்தவர்கள் என்று கூட சொல்லாம்.
அன்னையர்கள் எதிர்பார்ப்பது, விரும்புவது எல்லாம் அன்பான, ஆதரவான மனதை அரவணைக்கும் வார்த்தைகளையே.   

ஜீவந்தினி லம்போதரன்.
ஜீவந்தினி லம்போதரன்.

ஜீவந்தினி லம்போதரன், இசை விரிவுரையாளர், இராமநாதன் நுன்கலைப்பீடம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், இலங்கை: 'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைகள்தான் மண்ணில் பிறக்கையில், பின்பு நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே..' என்ற பாடல் வரிக்கு ஏற்ப சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னைதான். அன்னையின்றி யார் தனக்கென்று எதுவுமே வைத்துகொள்ளாத துறவியின் மனப்பக்குவம். தன்னுடைய வயிறு காய்ந்தாலும். பிள்ளை வயிற்றை நிறைக்கத் துடிக்கும் கருணை. எந்த நேரமும் பிள்ளைகளைப் பற்றியே சிந்தனை. அம்மாக்களின் உயர்ந்த லட்சியம் என்ன? ஆசைகள் என்ன? என்ற கேள்விகளை தனக்குள் அடுக்கிக் கொண்டே போனாலும் விடை என்னவோ குழந்தைகள் என்பதிலேயே முடிகிறது.

14.5.2023 - உலக அன்னையர் தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com