கல்கி: ஐந்துதலைமுறை

பொன்னியின் செல்வன் முதல், இரண்டாவது என இரு பாகங்களும் திரைப்படம்  உலகம் முழுவதும் தமிழர்கள்  வசிக்கும் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி, அமோக வெற்றி பெற்றுள்ளது.
கல்கி: ஐந்துதலைமுறை

பொன்னியின் செல்வன் முதல், இரண்டாவது என இரு பாகங்களும் திரைப்படம்  உலகம் முழுவதும் தமிழர்கள்  வசிக்கும் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி, அமோக வெற்றி பெற்றுள்ளது.  அதுபோலவே, 'பொன்னியின்செல்வன்'  நாவலைப் படைத்த  அமரர் கல்கி  குடும்பத்தினரின் ஐந்து  தலைமுறையினரையும்  ஓரிடத்தில்  சந்தித்து,  மகிழ வைத்த வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்தது.
கல்கி,  அவரது சகோதரர்கள் வெங்கடராமன்,  ஜெகதீசன்,  சகோதரிகள் பார்வதி, லட்சுமி ஆகியோரின்  அடுத்தடுத்த  தலைமுறையைச் சேர்ந்த 75 பேர்  கலந்துகொண்ட அரிய சந்திப்பு நிகழ்வு சென்னை அடையாறில் உள்ள ஓர் உணவகத்தில் 3 மணி நேரம் அண்மையில் நடைபெற்றது. 

மோகன்
மோகன்


இதுகுறித்து கல்கி குழுமத் தலைமை நிர்வாகியும்,  கல்கி ராஜேந்திரனின் மகளுமான லட்சுமி நடராஜனிடம் பேசியபோது:
'இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்,  பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்,  'வந்தியத் தேவன் பயணித்த பாதையில்..' கல்கி குழுவும் பயணித்து கடந்த கால சரித்திரத்தை நினைவூட்டியது.  அப்போது, 'காலச்சக்கரம் நரசிம்மா' வாயிலாக  யூ டியூப் தொடரும் எடுத்தோம்.   அந்தப் பாதையில் பயணிக்கும் அரியதொரு அனுபவத்தை அளிக்கும் வகையில், சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்தோம்.  அந்தப் பயணம் குறித்து கல்கி குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்குத் தெரிவித்தால். அவர்கள்ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்வார்களே?  என நினைத்தோம்.   இதற்கிடையில், படமும் வெற்றி பெற்றது. 
கல்கியின் சகோதரியின் பேரன் மோகன் என்னை சந்தித்து சுற்றுலா குறித்தும்,  படம் வெற்றி குறித்தும் பேசினார். அப்போதுதான் குடும்பத்தினர் சந்திப்புக்கான எண்ணம் ஏற்பட்டது.
கல்கியின் சகோதர, சகோதரிகளின் மகன், மகள்கள்,  அவர்களின் வாரிசுகள் என பலருடனும் தொடர்பு கொண்டு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள், தொடர்பு எண்களைச் சேகரித்தோம்.   அடுத்து வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டது.  ஐந்து தலைமுறை குடும்பத்து உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.  எல்லோரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம். 

லட்சுமி நடராஜன்
லட்சுமி நடராஜன்


வந்தியத் தேவன் பாதையில் சுற்றுலாப் பயணம்,  கல்கி பிறந்த கிராமமான புத்தமங்கலத்தில் உள்ள கல்கியின் பூர்விக வீட்டுக்குச் செல்வது போன்றவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.
அடுத்து மோகன் கூறியது:
'திரட்டிய தகவல்களின்படி,  குடும்ப மரத்தை (ஃபேமிலி ட்ரீ)  உருவாக்கினோம். அதில்,   475  பேர் இடம்பெற்றனர்.   அவர்களில் பலரும் சென்னை, திருச்சி, கோவை என்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும்,  தில்லி,  மும்பை, பெங்களூரு போன்ற மாநகரங்களிலும் வசிப்பவர்கள்.  இன்னும் சிலர் ஆஸ்திரேலியா,  அமெரிக்கா,  பிரிட்டன்,  ஐரோப்பிய  நாடுகளில் வசிக்கின்றனர்.   இவர்களில் பலருக்கு  தகவல்கள் தெரிந்திருக்கவில்லை. எல்லோருக்கும்  குடும்ப உறவுகள் புதுப்பிக்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். 
சென்னையில் சந்திப்புக்கான தேதி,  நேரம், இடம் முடிவானதும் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  சந்திப்பில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலியா செல்ல இருந்த வேதன் தனது பயணத்தை ஒத்திவைத்தார்.  
கூட்டத்தின் தொடக்கத்தில், இந்தச் சந்திப்பு நிகழ காரணமாக இருந்த இயக்குநர் மணிரத்னத்துக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னதும், எல்லோரும் உற்சாகமாகக் கை தட்டினார்கள்.  தொடர்ந்து, கல்கி குறித்து சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம்.

சீதா ரவி
சீதா ரவி


இரண்டு மகன்களை பள்ளிக்கு அனுப்பி,  படிக்க வைக்க முடியாத குடும்பச் சூழ்நிலையில்,  தனது தம்பி கிருஷ்ணமூர்த்தியின் (கல்கி) படிப்பு தொடர வேண்டும் என்பதற்காக,  தன்னுடைய படிப்பை நிறுத்திக்கொண்டவர் வெங்கடராமய்யர்.  
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக, தன்னுடைய பள்ளிப்படிப்பின் இறுதிக்கட்டத்தில் வெங்கடராமய்யர் கல்கியிடம், 'தம்பி!  நீகுடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தேசத் தொண்டாற்றப் போ! குடும்பப் பொறுப்பை நான் கவனித்துகொள்கிறேன்!' என்று தைரியமூட்டி அனுப்பிவைத்தார்.
எங்கள் குடும்பத்தில் ஐந்து பேர் விஞ்ஞானிகள்.  ஒருவர் பின்னணிப் பாடகர்.  ஒருவர் குழந்தைநட்சத்திரம்.  இன்னொருவர் ஜேசுதாஸ் பாராட்டிய பாடகி. இவர்களைத் தவிர பலரும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், வங்கியாளர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள், ஐ.டி. துறையினர்..  என பிரபலங்கள் இருக்கின்றனர்.
கல்கி குடும்பத்தைச் சேர்ந்த 'சூப்பர் சிங்கர்' கெளஷிக்,  கன்னட மொழியில் பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடி இருக்கிறார். 
'அமரர் கல்கி ஆரம்பக் காலத்தில் எழுதிய பல்வேறு நகைச்சுவைக் கட்டுரைகளுக்கு அடித்தளமிட்டது அந்த காலகட்டத்தில் அவரது குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள்தான்' என்று பலரும் நெகிழ்ந்தனர் என்றனர்.
சியாமளா ரங்கநாதன்:  'பொன்னியின் செல்வன்' பற்றி பேசும் இடங்களில் எல்லாம் கல்கி தாத்தா இருந்து தமிழர்களை ஆசிர்வதிப்பார்.
சீதா ரவி: அமரர் கல்கி சாதனை புரிந்த எழுத்தாளர் மட்டுமல்ல; பத்திரிகை ஆசிரியர்,  சுதந்திரப் போராட்டத்தில் மூன்று முறை சிறை சென்ற தேச பக்தர் என பல பரிணாமங்களைக் கொண்டவர்.  அவரது நூல்களைப் படித்து மகத்தான வரலாற்றை நம் குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

படங்கள்: ஸ்ரீஹரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com