அரங்கேறும் மும்முடி சோழன்!

"ராஜராஜ சோழனின் வரலாற்றில்  விடுபட்ட  பக்கங்களை நிரப்புவதற்காக 'மும்முடி சோழன்' என்ற வரலாற்று நாடகத்தை அதி நவீன தொழில்நுட்பத்துடன் சென்னையில் பிரம்மாண்டமாக அரங்கேற்றுகிறோம்''
அரங்கேறும் மும்முடி சோழன்!

"ராஜராஜ சோழனின் வரலாற்றில்  விடுபட்ட  பக்கங்களை நிரப்புவதற்காக 'மும்முடி சோழன்' என்ற வரலாற்று நாடகத்தை அதி நவீன தொழில்நுட்பத்துடன் சென்னையில் பிரம்மாண்டமாக அரங்கேற்றுகிறோம்'' என்கிறார் சென்னை டிராமாஸ் நிறுவனரும்,  நாடகக் கலைஞருமான முனைவர் ஏ.பி.வைத்தீஸ்வரன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
"நலிந்த, வளரும் கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், கலைச் சேவையாற்றவும் தொடங்கப்பட்டதுதான் சென்னை டிராமாஸ்.  இதுவரை 'கலிங்கத்து காதலி', 'அலெக்ஸôண்டர் தி கிரேட், சத்ரபதி சிவாஜி', 'பாஞ்சாலி சபதம்'  ஆகியவை உள்பட 80-க்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்தியிருக்கிறோம். தற்போது பேரரசனின் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக முதன் முதலாக 'மும்முடி சோழன்' தலைப்பில் வரலாற்று நாடகத்தை  உருவாக்கியிருக்கிறோம். 

'சாவா மூவா பேராடு'

பொதுவாக,  ராஜராஜ சோழனின் போர்த்திறன், அவர் பெருவுடையார் கோயில் கட்டியது போன்றவற்றையே மக்கள் அறிந்திருக்கின்றனர்.  
இன்றைய அரசுத் திட்டங்களுக்கு வழிகாட்டும் வகையில் ராஜ ராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல்
படுத்திய நலத் திட்டங்கள் குறித்து யாரும் பெரிதாக பேசுவதில்லை. இதை 'மும்முடி சோழன்'  நாடகம் தீர்த்து வைக்கும்.
 'சாவா மூவா பேராடு திட்டம்', 'மக்கள் வங்கி' (கூட்டுறவு), 'வரி வசூலிப்பு' உள்ளிட்ட பல முன்னோடி திட்டங்களை எப்படிக் கொண்டு வந்தார், அவற்றை செயல்படுத்திய விதம் குறித்து மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சிகளாக விவரிக்கவுள்ளோம்.

 என்னென்ன நிகழ்வுகள்?

 இளவரசன் அருண்மொழி வர்மன் பஞ்சவன் மாதேவி மீது காதல் கொண்டது, மன்னராக முடிசூடியது, எதிர்கொண்ட போர்கள், பெற்ற வெற்றிகள், அரசியல், ஆன்மிகம், தற்சார்பு முறை, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தியது போன்ற மிக முக்கிய நிகழ்வுகள் இடம்பெறும்.
 இறுதியாக,  தலைமுறைகள் வாழ, பாதை வகுத்துத் தந்த ராஜராஜன் தம் வாழ்வில் எவ்வாறு சிவனடியாராக நிலை கொண்டார் என்பதோடு நிறைவு செய்திருக்கிறோம். 

கதையின் மாந்தர்கள்

ராஜ ராஜ சோழனாக முத்துக்குமார், பஞ்சவன் மாதேவியாக சுஜாதா பாபு, குந்தவையாக ரேவதி, ராஜேந்திர சோழனாக நரேன் பாலாஜி, தலைமை அமைச்சராக விவேக் சின்ராசு, ரவிதாசனாக சிங்கராஜா ஆகியோர் நடிக்கின்றனர். கருவூர் சித்தராக நான் நடிக்கிறேன்.  பாடல்களை நெல்லை ஜெயந்தா எழுதியுள்ளார்.  தாஜ் நூர் இசையமைத்திருக்கிறார். ஏ.எஸ். மணி ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
உரையாடல், மக்கள் தொடர்பு, படத்தொகுப்பு போன்ற பணிகளில் தஞ்சை ராக்கி,  ஆர்.கே. என்கிற ராதாகிருஷ்ணன், பொன்னேரி பிரதாப், லூவி ஜான்சன் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர். என்னுடன் நண்பர் கஜேந்திரபாபு இணைந்து தயாரித்துள்ளார்.

மே 20-இல் அரங்கேற்றம்

சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மே 20-ஆம் தேதி (சனிக்கிழமை)  மாலை 6 மணிக்கு அரங்கேற்றப்படவுள்ள இந்த நாடகம் புதுமையான அனுபவமாக இருக்கும். 

வண்ணமும்... வரைகலையும்...

இன்றைய உலகை கைப்பேசிகள் ஆண்டு கொண்டிருக்கும் சூழலில், நாடகங்கள் மக்களைக் கவருமா? என்ற கேள்வி பலருக்கும் எழுவதைத் தவிர்க்க முடியாது. எந்தவொரு படைப்பிலும் காலத்துக்கு ஏற்ற புதுமைகளைப் புகுத்தினால் மட்டுமே அது மக்களை முழுமையாகச் சென்றடையும்.
அதை தெளிவாக உணர்ந்து பிரமாண்ட போர்க்களக் காட்சிகள், மாயா ஜாலங்கள்,  காட்சிகளுக்கு இடையே மிகக் குறைந்த இடைவெளி, சிறப்பு சத்தங்கள், தத்ரூபமான ஒப்பனை, வரைகலை, தேர்ந்த கலைஞர்கள், பட்டுத்தெறிக்கும் வசனங்கள், எல்இடி தொழில்நுட்பம் என பல சிறப்பம்சங்களுடன் மும்முடி சோழன் நாடகத்தைத் தயாரித்திருக்கிறோம். 50 பேரின் உழைப்பு இதில் அடங்கியிருக்கிறது.
தமிழர் பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துக் கூறும் இந்த நாடகத்துக்கு தமிழ்நாடு அரசும்,  இயல் இசை நாடக மன்றமும் நல்ல ஆதரவை அளித்துள்ளன'' என்றார்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com