கவனம் ஈர்த்த நாகநதி உறைகிணறுகள்

மனதின் குரல் 100-ஆவது நிகழ்ச்சியில், வேலூர் அருகே நாகநதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளையும்,  இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய வேலையுறுதித் திட்டப் பெண்களையும் பாராட்டினார் பிரதமர்.
கவனம் ஈர்த்த நாகநதி உறைகிணறுகள்

மனதின் குரல் 100-ஆவது நிகழ்ச்சியில், வேலூர் அருகே நாகநதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளையும்,  இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய வேலையுறுதித் திட்டப் பெண்களையும் பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.  இதனால், இந்தத் திட்டமானது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
  கணியம்பாடி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் திறந்தவெளி கிணறுகளில் கூட 50 அடி முதல் 70 அடி மட்டத்தில் தண்ணீர் கிடைத்து வருகிறது.
இங்கு கோடையிலும் நெல், வாழை உள்ளிட்ட தண்ணீர்த் தேவை அதிகமுள்ள பயிர்களின் சாகுபடி இயல்பாக நடைபெறுவதுடன்,  விவசாய வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு  நாகநதி எனும் சிறு ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் எனும் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள்தான் முக்கிய காரணமாகும்.
2018-19-ஆம் ஆண்டு வாழும் கலை அமைப்பின் நதிகள் புனரமைப்புத் திட்டத்துடன் சுமார் ஆயிரம் பெண்கள் இணைந்து நாகநதியின் குறுக்கே உறை கிணறுகளை அமைத்தனர்.
அதாவது, மலையில் இருந்து வரும் ஓடையின் குறுக்கே 100 மீட்டர் இடைவெளியில் சுமார் 6 அடி அகலம், 15 அடி நீளம், 20 அடி உயரத்தில் கூம்பு வடிவில் கிணறு அமைத்து அதன் பக்கவாட்டில் சிமென்ட் குழாய்கள் இறக்கப்பட்டன.  இந்தக் கிணற்றின் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளே செல்லும் வகையில் துளைகளுடன் கூடிய சிமென்ட் மூடி கொண்டு மூடப்பட்டன. பிறகு கிணற்றின் மீது ஜல்லிகற்கள் பரப்பப்பட்டன.
மேலும், ஓடையில் வேகமாக வரும் மழைநீரை தடுத்து மெதுவாக நிலத்துக்குள் செலுத்திட இந்தக் கிணற்றுக்கு 10 அடிக்கு முன்பு கற்களாலான தடுப்புகளும் அமைக்கப்பட்டன. அதன்படி, அடுத்தடுத்து அமைக்கப்படும் இந்த உறைகிணறுகள், தடுப்புகளால் ஓடையில் வரும் மழைநீர் முழுவதுமாக பூமிக்குள் செலுத்தப்பட்டு விடுவதால் தண்ணீர் ஏரி, குளம், குட்டைகளில் தேங்கி ஆவியாகுவது தடுக்கப்படுகிறது. அந்தவகையில், நாகநதியின் குறுக்கே 354 இடங்களில் இந்த உறை
கிணறுகள் அமைக்கப்பட்டன.
இதன்மூலம், சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து ஏற்பட்ட பலனை அடுத்து அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையானது பாலாற்று படுகையில் இந்த உறை கிணறுகளை அமைத்திட நடவடிக்கை மேற்கொண்டது.
இதையொட்டி, வாழும் கலை அமைப்பின் மூலம் தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு,  திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, பேர்ணாம்பட்டு, ஆலங்காயம், குடியாத்தம், கந்திலி, மாதனூர், அணைக்கட்டு உள்ளிட்ட 9  ஒன்றியங்களிலும் சுமார் 3,800 உறை
கிணறுகள் அமைக்கப்பட்டன.
இதன்விளைவாக பாலாற்றின் துணை நதிகளான பாம்பாறு, மத்தூர் ஆறு, கௌண்டன்யா மகாநதி, அகரம் ஆறு, மலட்டாறு, மேல் பாலாறு நதிகளிலும் தற்போது ஓராண்டில் பல மாதங்கள் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலையில், ஏப்ரல் 30-இல் வானொலி ஒலிபரப்பான மனதின் குரல் 100-ஆவது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உறைகிணறு திட்டத்துக்குபாராட்டுத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து  வாழும் கலை அமைப்பின் நதிகள் புனரமைப்புத் திட்ட இயக்குநர் சந்திரசேகர் குப்பன் கூறியதாவது:
" 'நாகநதி மாடல்' என்ற பெயரில் இந்த உறைகிணறுகள் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 
புதுச்சேரி மாநிலத்திலும் உறை கிணறுகள் திட்டத்தை செயல்படுத்திட அம்மாநில அரசும் அழைப்பு விடுத்திருக்கிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com