சரித்திரம் படைத்த  சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்  நிகழ்வு சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டது.
சரித்திரம் படைத்த  சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்  நிகழ்வு சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டது.
இதிகாசங்கள், புராணங்களில் 'செளராஷ்டிரம்'  உள்ளது. கர்நாடக சங்கீதத்தில் மங்கல ராகங்களில் ஒன்றின் பெயராக 'செளராஷ்டிர ராகம்'  உள்ளது. 
வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில்,  'செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்'   நிகழ்வு ஏப்ரல் 17-இல் தொடங்கி ஏப். 26-இல் நிறைவுற்றது. இதில் பங்கேற்ற சிலர்,  மதுரை சித்திரைத் திருவிழாவிலும் பங்கேற்றனர்.  சிலரிடம் பேசியபோது: 
 
தி.இராஜபிரபா, எழுத்தாளர்,  தேனி:  சம்ஸ்கிருதத்தில் 'செளரா' என்றால் சூரியன். 'ராஷ்டிரம்' என்றால் நாடு.  'சூரியனின் நாடு' என்று அழைக்கப்படும் செளராஷ்டிரத்தில் மாலை 7.20 மணிக்கு அஸ்தமனமாவது ஆச்சரியப்பட வைக்கிறது.  தங்கம், வைரம்.. என செல்வ வளம் கொட்டியுள்ள இந்தப் பகுதியில் கஜினி முகமது பதினேழு முறை படையெடுத்து தோல்வியுற்றார். இந்த வளம் மிக்க  இடத்தில் வாழும் பெண்கள் ஆபரணங்களை விரும்பி அணிவதற்கு ஆர்வமில்லாமல் உள்ளனர்.
12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான சோமநாதர் கோயில் கோபுரத்தில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒலி, ஒளி காட்சிகளும் ஒருவித அதிர்வலைகளைத் தர பக்தர்கள் தங்களின் கரங்களை உயர்த்தி  'ஹர ஹர மகாதேவ்' என்று கோஷமிட்டது வழிபாட்டின் உச்சம். 
கொலு பொம்மைகள் போன்று வெள்ளை கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும் கோயில் சிலைகள், ஒவ்வொரு கோயில் அருகிலும் ஆரவாரமின்றி ஒடும் தூய்மையான நதிகள், கருவறைகள் என்று பெரிதாக எதுவும் இல்லாததால் எல்லோரும் எளிதாகச் சென்று சிலைகளைத் தொட்டு வணங்கி தற்படமும் எடுத்துக் கொள்ளும் வசதி இருந்தது. 
கூம்பு வடிவில் இருக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள கம்பங்களில் இருந்த கொடிகள் காற்றின் திசைக்கு ஏற்றவாறு அசைந்தாடுவது கொள்ளை அழகு. தொந்தரவு செய்யாதவரை வீட்டு விலங்குகளைப் போல சிங்கங்களும். இயல்பாய் பழகக்கூடியவைதான் என்ற கிர் காடுகளின் சுற்றுலா வழிகாட்டியின் தகவல்கள் அருமை.
இரு சக்கர வாகனத்தை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து, நம்மூர் ஷேர் ஆட்டோக்களைப் போன்று பயன்படுத்துகின்றனர்.  இனிமை தரும் இன்பச் சுற்றுப்பயணமாக அமைந்திருந்தது.  
 சாரதா,  சமூக ஆர்வலர், ராமேசுவரம்:  தமிழ்நாட்டில் உள்ள செளராஷ்டிரார்கள்,  செளராஷ்டிரத்துடன் எந்தத் தொடர்பும் இல்லா வாழ்க்கையை பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.   அப்படிப்பட்டவர்கள் மறுபடியும் தங்களுடைய சொந்த பூர்விகத்தைப் பார்க்க வேண்டும் என்ற வகையில்,  இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் ரயில்களில் இரண்டு நாள்கள் மட்டும் பெண்களுக்காகவே ஏற்பாடு செய்திருந்தனர்.  நான் இரண்டாவது நாளில் பயணம் செய்தேன். அந்த அந்த மாநிலத்தில் உள்ள தலைவர்கள் எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தனியாகச் சென்றால் ஒரு நபருக்கு கண்டிப்பாக ரூ.30ஆயிரத்துக்கும் மேலாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கும். ஆனால் அத்தனை செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்டது. 
கடற்கரைக்குச் சென்றோம்.  அங்கு ஒட்டகச் சவாரி,  குதிரை சவாரிகளைச் செய்தோம்.  இசை நாற்காலி, கயிறு இழுத்தல் போட்டி போன்ற எண்ணற்ற விளையாட்டுகளில் பங்கேற்றோம். 'பாதல்பாரா'  என்ற ஓர் அழகிய இடத்துக்கு சென்றபோது,  அந்தப் பகுதி மக்கள் அளித்த வரவேற்பு மறக்க முடியாதது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com