லேபிள்தான் இங்கே முக்கியம்!

சின்ன, சின்ன தவறுகள் எல்லாம் சேரும்போதுதான் பெரிய,  பெரிய அனுபவங்கள் கிடைக்கும். அப்படி ஒட்டுமொத்த அனுபவங்களையும் பெற்றுவிட,  இந்த ஒரு வாழ்க்கை போதாது.
லேபிள்தான் இங்கே முக்கியம்!

'சின்ன, சின்ன தவறுகள் எல்லாம் சேரும்போதுதான் பெரிய,  பெரிய அனுபவங்கள் கிடைக்கும். அப்படி ஒட்டுமொத்த அனுபவங்களையும் பெற்றுவிட,  இந்த ஒரு வாழ்க்கை போதாது.  இதோ நம் பக்கத்தில் நடக்கிற சின்ன,  சின்ன தவறுகளிலிருந்து கூட, அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  இது ஏதோ ஒரு உபதேசம் போல் இருக்கலாம். ஆனால் உண்மை.'' என்று சொல்லி முடிக்கும்போது  ஜெய்வந்தின் முகத்தில் அவ்வளவு பிரகாசம்.  'மத்திய சென்னை', 'காட்டுப்பய சார் இந்த காளி'  போன்ற படங்களுக்குப் பின்னர் இவர் நடித்துள்ள 'தீர்க்கதரிசி' இப்போது திரை தொட்டிருக்கிறது. 

அவர் மேலும் கூறியதாவது:

"அம்மாவின் ஊர் நாகர்கோவில். அங்கேதான் பிறந்தேன்.  நமக்கு பூர்விகம் புதுக்கோட்டை.  அப்பாவின் தொழில்,  பள்ளி படிப்பு, கல்லூரி என சென்னைக்கு வந்துவிட்டேன்.  சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத குடும்பம்.  
கால் போன போக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதில் இருந்தே இந்த சினிமா மேல் சிறு ஆசை. அவ்வப்போது வருகிற படங்களின் பெரும் வெற்றி, அது தரும் உத்வேகம் இந்தப் பயணத் தொடக்கத்துக்குப் பெரும் பலம். சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றி தீவிரமாக தெரிந்து கொண்டேன். ஆனால் சினிமா வாசலுக்கான திறவுகோல் என்னிடம் இல்லை. முதல் வாய்ப்பில் ஆயிரம் கஷ்டங்கள். ஒரு வழியாக "மத்திய சென்னை படம் நல்ல அறிமுகம் தந்தது. பெரும் வெற்றி, வசூல் இல்லையென்றாலும் நல்ல சினிமாவின் பக்கம் நின்றது.  ஆனால், அந்தப் படத்தை உடனடியாகத் தொடங்க முடியாத சூழல். நிறைய பிரச்னைகளைத் தாண்டி படம் வெளிவந்தது. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் எனக்கு குரு, தெய்வம், ஆசான். இதுதான் என் பார்ஃமுலா.'' 
சினிமாவுக்கு வந்த பலருக்கும் நிறைய கதைகள் இருக்கும். ஆனால் எனக்கென்று அப்படி ஒன்றும் இல்லை.  துக்கம்,  கவலை,  மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை... இவையெல்லாம் நிறைய இருக்கிறது.  நான் பார்த்து பழகின மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள்.  நல்ல, நல்ல அனுபவங்கள் கொடுத்தார்கள். சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் இருந்த குழப்பங்களை புரிந்துக் கொள்ள துணை நின்றார்கள். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது. 
 'இவன் பெரிய ஆளு...' என்று சில பேர் எடை போட்டார்கள். சிலர்  மனசை பார்த்து பார்த்து பழகினார்கள்.  இப்படி வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள். எல்லோருக்கும் நன்றிகள். அடுத்து யுரேகாவின் இயக்கத்தில் வெளிவந்த 'காட்டுப்பய சார் இந்த காளி'.  தமிழ், தமிழர், நம் நிலம்.. என பேசின கதை. எல்லோரிடமும் என்னைக் கொண்டு சேர்த்தது. 
 சில படங்களில்தான் நடித்திருக்கிறேன். பெரிய இடங்களுக்கு இன்னும் பயணப்படவில்லை. நல்ல, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். தேடி வந்தவை நிறைய!  நான் தேடிப் போனவை சில. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். மனசுக்குப் பிடிக்கிற படங்களில் இருக்கிறோம் என்பதே அவ்வளவு நிறைவு. 
 அடுத்து 'அசால்ட்'. நடன இயக்குநராக அறியப்பட்ட பூபதிராஜா எழுதி இயக்குகிறார். திரைக்கதையில் அவ்வளவு சுவாரஸ்யம். எதிர்பார திருப்பங்கள் நிறைந்த கதை. வட சென்னையை மையப்படுத்துகிற கதை. பெரும் சுவாரஸ்யங்களும், அதிர்ச்சிகளும் சம விதத்தில் கலந்திருக்கிற கதை. இந்த நேரத்தில் நான் நடிக்க வேண்டிய படம். படம் முடிந்தது.  விரைவில் உங்கள் பார்வைக்கு வரும்.
இப்போது தீர்க்கதரிசி. எதிர்பார்ப்பது எல்லாம் நடந்தால், இந்தப் படம் வேறு ஒரு நிலையில் உங்களை வந்துச் சேரும். உடம்பும், மனசும் லயித்து இயங்கின படம். காலம் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நிற்க கூடிய படமாக இருக்கும். இதோ நீங்களும், நானும், நாம் எல்லாரும் பார்த்து ரசிக்கிற இந்த உலகம்தான் கதை. நல்ல படம். நல்ல இடத்துக்கு என்னைக் கொண்டு போகும். சத்யராஜ் சார் மாதிரியான நடிகரோடு இணைந்து நடித்ததில் அவ்வளவு அனுபவம். நான் பிரபலத்தின் வாரிசாக இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் என்னைக் கொண்டாடவும், திட்டி கொட்டவும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.  அப்படி விஷயம் தெரிந்தவர்கள் கூடவே இருந்தால், இங்கே யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். சினிமாவில் வேலைக்கு காசு இல்லை. பேருக்குத்தான் காசு. லேபிள்தான் இங்கே முக்கியம் என்று நினைக்கிறேன். 
நிறைய படங்களில் நடிப்பதைவிட, நாலே நாலு நல்லப் படங்களில் நடித்தால் போதும். அந்த எண்ண ஓட்டத்தில்தான் ஓடிக் கொண்டே இருக்கிறேன்.  ஆனால், நான் டூயட் ஆட மாட்டேன். பஞ்ச் வசனம் பேச மாட்டேன்.. என்று இங்கே எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அடுத்த படத்திலேயே அதில் நடிக்க வைத்து விடுவார்கள். அதனால் வார்த்தைகளை விட்டு விடக் கூடாது. அதுவே நாளைக்கு ஆயுதமாகி நம்மைத் தாக்கும் என்கிற ஆபத்தையும் நான் உணர்ந்திருக்கிறேன்.
பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும். இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும்.  
 நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள், நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. சினிமா ஒரு பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான். ஆனால் நம்பிக்கையோடு உழைத்தால், ஆசீர்வதிக்கப்பட்ட இடம் கிடைக்கும். என் சினிமா பயணத்தில் கிடைத்த அனுபவம் இது. எல்லாவற்றுக்கும் நேரம் எடுத்து, புதிது புதிதாக யோசித்து உழைக்கத் தயாராக இருக்கிறேன். அப்படிப் பார்த்தால் இனி வரும் படங்கள்தான் எனக்கான ஸ்டார்ட் பட்டன். 
 உன்னதமான நேரம் இது. சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. அப்படி வரும் படங்களில் நான் நிச்சயம் இருப்பேன். கேட்டதைவிட, நினைத்ததைவிட எல்லாமே அடுத்தடுத்து நல்லதாகவே நடந்துக் கொண்டு வருவதால்,  இது நிச்சயம்''  என்று சாத்தியப்படும் நம்பிக்கையாக பேசி முடிக்கிறார் ஜெய்வந்த்.  

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com