காஸ்மோபாலிடன் கிளப்: வயது 150

இந்தியர்களுக்கு அனுமதி இல்லை' என்று ஆங்கிலேயர் ஆட்சியில் பல்வேறு நகரங்களிலும் ஆங்கிலேய உயர்தட்டு பிரமுகர்களுக்காக கிளப்புகள் இயங்கியது.
காஸ்மோபாலிடன் கிளப்: வயது 150


"இந்தியர்களுக்கு அனுமதி இல்லை' என்று ஆங்கிலேயர் ஆட்சியில் பல்வேறு நகரங்களிலும் ஆங்கிலேய உயர்தட்டு பிரமுகர்களுக்காக கிளப்புகள் இயங்கிவந்தபோது, மேல்தட்டு இந்தியர்களும், இந்திய மனப்பான்மை கொண்ட ஆங்கிலேயர்களையும் இணைத்து சென்னையில் உருவாக்கப்பட்டதுதான் காஸ்மோபாலிடன் கிளப். இப்போது அதன் வயது 150. இதன் தலைவர் சுந்தரேஸ்வரனிடம்
பேசியபோது:
""1873ஆம் ஆண்டு அக். 6இல் தொடங்கப்பட்டது. காஸ்மோபாலிடன் என்றால் "பன்முக இயல்பு' என்று பொருள். இதன்படி, இந்திய கலாசாரம், ஐரோப்பிய கலாசாரம் ஆகிய இரண்டையும் மதிக்கும் முக்கியஸ்தர்கள் 41 பேர் இணைந்து கிளப் தொடங்கப்பட்டது.
நூலகத்தை ஏற்படுத்துவது, நட்பை விரிவாக்கிக் கொள்ளுதல், வெளியூர்வாசிகள் சென்னை வரும்போது தங்கள் நண்பர்களைச் சந்தித்தல் போன்றவற்றுக்கான இடமாக இருந்தது.
நுங்கம்பாக்கம் "மூர்ஸ் தோட்டம்' என்ற பகுதியில் திப்பு சுல்தானின் பேரன் ஹுமாயூன் ஜாபகதூருக்குச் சொந்தமான இடத்தில் காஸ்மோபாலிடன் கிளப் துவக்கப்பட்டது. அவர் கிளப்பின் தலைவராகவும் இருந்தார்.
1881-இல் கிளப் கட்டடம் பழுதடைந்ததால், மௌண்ட் ரோடில் சிம்சன் நிறுவனம் இருந்த சுமார் 20 கிரவுண்ட் நிலத்தை ரூ. 17 ஆயிரத்துக்கு கிளப் உறுப்பினர் முகம்மது அப்துல்லா என்பவர் வட்டியின்றி, மூன்று மாதத்தில் கிளப் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையின்படி, வாங்கிக் கொடுத்தார். இந்த இடத்தில்தான் கம்பீரமாக கிளப் இயங்கிவருகிறது!
ஆரம்ப காலத்தில் கிளப்பின் மாத சந்தா சென்னைவாசிகளுக்கு மூன்று ரூபாய்.
வெளியூர்வாசிகளுக்கு ஒரு ரூபாய். 1909இல் கிளப் வளாகம் மின்வசதியைப் பெற்றது.
1915 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி காஸ்மோபாலிடன் கிளப்புக்கு வருகை தந்து, உரையாற்றியதன் நினைவாகவே, முகப்பில் அவரது மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
1922ஆம் ஆண்டில் எட்டாம் எட்வர்டு மன்னர் விழாவொன்றில் பங்கேற்றார். கிளப்பின் வைரவிழாவில் வைஸ்ராய் வெலிங்டன் பிரபு கலந்துகொண்டார்.
நோபல் பரிசு பெற்றவுடன் சில ஆண்டுகள் கழித்து ரவீந்திரநாத் தாகூர் கிளப் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
1954இல் நடைபெற்ற பவள விழாவில் எம்.எல்.வசந்தகுமாரியும், 1973இல் நூற்றாண்டு விழாவின்போது எம்.எஸ். சுப்புலட்சுமியும் தங்களது கச்சேரிகளை நடத்தினர்.
ஆரம்பத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்தான் கிளப்பின் தலைவர்களாக இருந்தனர். உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாகப் பொறுப்பேற்ற முத்துசாமி ஐயர்தான் கிளப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுகொண்ட முதல் இந்தியர்'' என்றார்.

கிளப் செயலாளர் சிவலிங்கம் கூறுகையில்:

""கிளப் உறுப்பினர்கள் கால்ஃப் விளையாடுவதற்காக, 1934இல் மைதானம் துவக்கப்பட்டது. மைதானம் அமைப்பதற்காக, திருவாங்கூர் மகாராஜா சார்பில் திவான் சி.பி.ராமசாமி ஐயர் ரூ.10 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார். அதனால், கால்ஃப் கிளப் கட்டடத்துக்கு "திருவாங்கூர் பெவிலியன்' என பெயர் சூட்டப்பட்டது. அதன்பிறகு, படகு கிளப்பும் (1940) துவக்கப்பட்டது.
அடுத்தடுத்து பில்லியர்ட்ஸ், டென்னிஸ், ஸ்குவாஷ்.. எனத் தொடர்ந்து இன்று நீச்சல் குளம், ஸ்பா, யோகா அறை, ஜிம்.. என்று பல்வேறு வகையான விஷயங்களும் இருக்கின்றன.பிரெஞ்ச் பாணியில் தளம் அமைக்கப்பட்ட நூலகத்தில் அரிய ஆங்கில, தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன'' என்றார்.
""கிளப்பில் ஐந்து தலைமுறைகளாக உறுப்பினர்களாக இருக்கும் குடும்பங்கள் பல உள்ளன. இப்போது சுமார் ஆறாயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் தங்கும் அறைகளில் தங்கலாம்.
பிற நகரங்களில் இயங்கும் கிளப்புகளின் தங்கும் விடுதிகளில் தங்கிக் கொள்ளலாம். இங்கே ஆறு உணவகங்கள் உள்ளன.
ஒரு உணவகத்துக்கு கிளப் துவக்கப்பட்ட ஆண்டான 1873 என்றே பெயர். சைவ உணவுகளைத் தயாரிப்பதற்கென்றே தனியான சைவ சமையல் கூடமும் உள்ளது. மதியத்தில் பரிமாறப்படும் வாழை இலை சாப்பாடு மிகவும் பிரபலம். விடுமுறை நாள்களில் உறுப்பினர்கள், குடும்பத்தினருக்காகத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
காந்திஜி, தாகூர் இருவருக்கும் நெருங்கிய நண்பரான சி.எஃப்.ஆண்டுரூஸ் சென்னை வரும்போதெல்லாம் காஸ்மோபாலிடன் கிளப்புக்கு வந்து காப்பி அருந்துவார். இதுபோன்றசுவையானகாப்பியைநான்வேறெங்கும்அருந்தியதில்லை என்று கூறி மகிழ்வார்'' என்றார் பொருளாளர் சுவாமிநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com